Subscribe Us

header ads

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் எத்தனை பேர்கள் வினைத்திறன்மிக்க செயலாளர்களை நியமித்துள்ளார்கள்

பல நாட்களாக ஒரு விடயம் தொடர்பில் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாலும், அது சில தவறான புரிதல்களை தோற்றுவிக்குமா என்கிற நினைப்பில் அப்படியே விட்டு விட்டேன்.
இருப்பினும் அந்த விடயம் மண்டைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்த காரணத்தினால் இன்று பதிகிறேன்.
அதாவது நமது பகுதி மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்கின்ற சேவைகளையும், கிழக்கில் உள்ள அரசியல்வாதிகள் செய்கின்ற சேவைகளையும் ஒப்பிடும் போது நம்மவர்களை விடவும், அங்கே உள்ள அரசியல்வாதிகள் ஒரு படி மேல நிற்பதை காணமுடிகிறது.
அரசு மூலம் வழங்கப்படும் நிதிகளுக்கு அப்பால் தனியார் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போன்றோரை அதிகம் பயன்படுத்தும் அரசியல்வாதிகளாக அவர்கள் மாறி உள்ளார்கள்.
இந்த பணி தொடர வேண்டும் என்ற வாழ்த்துக்களை நாம் இந்த இடத்தில் தெரிவிப்போம். (அந்த அரசியல்வாதிகள் அனைவரும் வல்லவர்களா? அயோக்கியர்களா? எனும் வாதம் இங்கு தேவை இல்லை, சொல்ல வரும் விடயமும் அதுவல்ல) அவர்களின் அந்த சேவைகளுக்கும், நம்மவர்களின் சேவை வீழ்ச்சிக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன? இப்படி ஒரு கேள்வியை எழுப்புகின்ற நேரம் அங்கே ஒவ்வொரு அரசியல்வாதிக்கு பின்னாலும் விடயம் தெரிந்த, நன்கு கற்ற ஒரு நபர் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது புரிகிறது.
உதாரணமாக ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு அவர் தேர்தலில் வென்றவுடன் அரசு ஒரு தொகை பணம் கொடுக்கிறது அவர்களின் சிறு சிறு கடன்களை முடிக்க… அத்தோடு அலுவலக வேலைக்கு என்று மூவருக்கும், ஒரு சாரதிக்கும் அரசு சம்பளமும் வழங்குகிறது… ஒரு அலுவலகம் அமைப்பதற்கு உண்டான சகல பொருட்களும் பேனா தொடக்கம் அலுவலக உபகரணங்கள் அடங்கலாக அரசாங்கம் மூலம் கொடுக்க படுகிறது… ஒரு டைப் செய்யும் இயந்திரம் அல்லது கணினியும் அரசால் வழங்கப்படுகிறது… இதிலே மேலே நான் குறிப்பிட்ட மூன்று அலுவலக பணியாளர்கள் யார் எனில் ஒரு டைப் செய்யக்கூடிய ஊழியர் / ஒரு செயலாளர் / ஒரு எழுதுவினைஞர் (Clerk) போன்றவர்கள் ஆகும்.
இதேபோன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் சலுகைகள் இருக்கின்றன… இந்த விடயங்களோடு நாம் நமது பகுதி அரசியலை ஒப்பீடு செய்தால் நமது பகுதி அரசியல்வாதிகள் எத்தனை பேர்கள் வினைத்திறன்மிக்க செயலாளர்களை நியமித்துள்ளார்கள் எனும் கேள்வி எழுகிறது. நமது அரசியல்வாதிகள் அவ்வாறு ஒருவரை நியமிப்பார்கள் எனில் அரசு ஒதுக்கும் நிதிகளுக்கு அப்பால் நமது சமூகமும் பல வழிகளில் அபிவிருத்திகளை அனுபவிக்கும் என்பது நிதர்சனம்.
இது எந்த அரசியல்வாதிகளின் மனதையும் புண்படுத்தும் நோக்கிலே பதிந்த பதிவு கிடையாது, அரசியல் ரீதியாக நாமும் சில அடைவுகளை அடைய வேண்டுமெனில் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் நல்ல செயலாளர்கள் தேவை என்பதை வலியுறுத்தும் ஒரு பதிவாகும் என்பதை புரிவீர்கள் என்று நம்புகிறோம்.

Post a Comment

0 Comments