
லண்டனைச் சேர்ந்த நபரொருவரே இந்த விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார். யூசப் சரோடியா (வயது 62) என்பவர் கார்லன்ட் அபிவிருத்தி என்ற நிறுவனத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். இவர், லண்டன் ஹெக்னி கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதியில் 6 அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணித்தார்.
ஒவ்வொரு குடியிருப்பு தொகுதிகளிலும் 300,000 பவுன் பெறுமதியுடைய 34 மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகளின் மொத்த பெறுமதி 10 மில்லியன் பவுன்களாகும்.
இந்நிலையில், ஹெக்னி கவுன்சிலிடம் எவ்வித அனுமதியை பெறாமல் இக்குடியிருப்புகளை நிர்மாணித்ததால், அவற்றை அகற்றுமாறு கவுன்சில் கடந்த 2011 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனாலும் அவர் அவ் அறிவித்தலை நிராகரித்துவிட்டு தனது பணியை செவ்வனே முன்னெடுத்தார்.
இந்நிலையில் இக்குடியிருப்பு விவகாரம் தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றமானது 700,000 பவுனும் மேலதிகமாக 25,000 பவுனையும் அபராதத் தொகையாக செலுத்துமாறு சரோடியா மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
திட்டமிடல் சேவைக்காக இத்தகையை தொகை அபராதமாக செலுத்தப்படுவது, இதுவே முதல்தடவை என ஹெக்னி கவுன்சிலின் பேச்சாளர் என்டிருவ் வூலர்ட் தெரிவித்தார்.
0 Comments