Subscribe Us

header ads

கோத்தா, ஞானசாரரின் முக்கிய சகா நாட்டை விட்டு தப்பியோட்டம்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரின் முக்கிய சகாவான விதாரந்தெனிய நந்த தேரர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவருடன் பொதுபலசேனாவின் இன்னுமோர் முக்கியஸ்தரான கிரிந்தே சந்தானந்த தேரரும் மத போதனைக்கான பயணம் என்று கூறிக்கொண்டு தற்போது நாட்டைவிட்டு வெளியேறியிருப்பதாக சட்டத்தரணி சுதர்ஷனி குணரத்ன நேற்று கோட்டை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் விதாரந்தெனிய நந்த தேரர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான முக்கிய சாட்சியெனவும், அவருடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்படி பௌத்த பிக்குகள் இருவருக்கும் பிடியாணை பிறப்பித்து, அவர்களைக் கைது செய்யும்படி கோட்டை நீதவான் பிரியந்த லியனகே நேற்று (01) உத்தரவிட்டார்.
நீதிமன்ற அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு பயணப்பட்டிருப்பது பாரிய குற்றம் எனவும் பிரியந்த லியனகே மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டுமன்றி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
2014 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கொம்பனித்தெரு நிபோன் ஹோட்டலில் ஜாதிக பலசேனா அமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பிற்கு பலவந்தமாக பிரவேசித்து அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரரை அச்சுறுத்தியமை, புனித குர்ஆனை இழிவுபடுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
ஞானசார தேரருக்கு எதிராக, நூர்தீன் மொஹம்மட் தாஜுதீன் என்பவர் தொடர்ந்திருக்கும் இவ் இரண்டு வழக்குகளும் நேற்றைய தினம் விசாரணை செய்யப்படவிருந்தன
நேற்றைய வழக்கு விசாரணைகளுக்கு ஞானசார தேரர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரை ஏன் முன்னிலைப்படுத்தவில்லையென நீதவான் கேள்வியெழுப்பினார்.
அத்துடன், அடுத்த விசாரணையின்போது ஞானசார தேரர் கட்டாயம் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தராத, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பௌத்த பிக்குகளைக் கைதுசெய்து செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.
மார்ச் மாதம் 03ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சட்டத்தரணிகளை அச்சுறுத்தியதாகவும் ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments