Subscribe Us

header ads

தில்லையடி, முஸ்லிம் மகா/வித்தியாலயத்தில், அமைச்சர் றிசாத் பதியுதீன் (படங்கள் இணைப்பு)

“நமது நாட்டில் இலவசக் கல்வி உள்ளபோதும் ஆட்சியாளர்களும், கல்வி அமைச்சர்களும் அடிக்கடி மாற்றம் பெறுவதால், கல்வித் திட்டத்திலும் மாற்றங்கள் நிகழ்வது வேதனையான விடயம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இந்த நிலை இல்லாததால் அங்கு கல்வி வளர்ச்சியில் பாரிய முன்னேற்றம் இருக்கின்றது” என அமைச்சர் றிசாத் பதியுதீன்  தெரிவித்தார்.

தில்லையடி, முஸ்லிம் மகா/வித்தியாலயத்தில், அதன் அதிபர் எஸ்.எஸ்.எம்.ஹுதைர்டீன் தலைமையில் இன்று (08/02/2016) இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில், பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பா.உஎம்.எச்எம். நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலி சப்ரி, ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிகான், கல்விப் பணிப்பாளர்களான ஸன்ஹீர், அபுல்ஹுதா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.    

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

வறுமை என்பது கல்விக்கு எப்போதும் தடையாக இருக்கக் கூடாது, இருக்கவும் முடியாது. முயற்சி இருந்தால் கல்வியில் நமது இலக்கை அடைய முடியும்.

ஆசிரியர் பணி என்பது மிகவும் புனிதமான பணி. அதிபர், ஆசிரியர்களாகிய உங்களிடம் மாணவர்கள் அமானிதமாகவே ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்களை முறையாகப் படிப்பித்து, கல்வியில் உயர்நிலையை அடைவதற்கு வழிகாட்டுவதே உங்களது இலக்காக அமைய வேண்டும். நேரகாலத்துடன் பாடசாலை வருவதும், உரிய நேரசூசிப்படி வகுப்புகளுக்குச் செல்வதையும் நீங்கள் கடமையாக்கிக் கொள்ளவேண்டும்.
முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாக உழைத்தவர்கள். எனவே, எவரும் எம்மை இரண்டாந்தரப் பிரஜையாக கருத முடியாது. கல்விதான் நமது சமூகத்தை உயர்த்தக் கூடிய சிறந்த ஆயுதம். இன்று முஸ்லிம்கள் கல்வித்துறையில் மிகவும் பின்னடைந்து காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, வர்த்தகத்துறையில் முஸ்லிம்கள் கொடிகட்டிப் பறப்பதாக எல்லோரும் கூறினாலும், உண்மையில் அவ்வாறன நிலை இன்றில்லை. நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் படி எல்லாத்துறைகளையும் போல, அந்தத் துறையிலும் நாம் பின்னடைந்தே இருக்கின்றோம்.

முஸ்லிம்களின் கல்வியை உயர்த்துவதற்காக நான் அமைச்சரவையில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றேன். கல்வியை உயர்த்துவதற்காக நாட்டிலுள்ள சில பாடசாலைகளுக்கு உதவும் அரசாங்கத்தின் சில திட்டங்களின் கீழ், மேலும் 25 முஸ்லிம் பாடசாலைகளை சேர்க்கும் நடவடிக்கைகளில் நான் வெற்றி கண்டுள்ளேன். அல்ஹம்துலில்லாஹ்


புத்தளம், அகதிகளை வாழவைத்த பூமி. எனவே, இந்த மண்ணையும், மக்களையும் நாம் ஒருபோதும் மறந்துவிடமாட்டோம். அரசியலிலே கால் நூற்றண்டுகளுக்கு மேலாக அநாதையாகக் கிடந்த புத்தளம் மக்களை கௌரவிப்பதற்காகவே, நாம் தேசியப்பட்டியலில் எம்.பி பதவியை வழங்கினோம். புத்தளம் வாழ்மக்கள் ஒன்றுபட்டு இருப்பதன் மூலமே அரசியலில் பலமுள்ளவர்களாகமாற முடியும் என்றும் அமைச்சர் றிசாத்  குறிப்பிட்டார்.   




Post a Comment

0 Comments