Subscribe Us

header ads

மதியிழந்த மங்கையே! மன்னித்துவிடு என்னை! (அபாயாவின் அலறல்)


மதியிழந்த மங்கையே!
மன்னித்துவிடு என்னை!
மறந்து விடு என்னை
மன்றாடிக் கேட்கின்றேன் -என்
மானத்தை காத்துக்கொள்ள
வழி விடு எனக்கு...

உனக்கு மானமிழப்பது பெரிதல்ல
நீ என்ன அடிமைப் பெண்ணா
அபூஜஹ்லின் வாரிசா
எத்தனை உறவுகள் சொல்லிவிட்டார்கள்
எத்தனை தடவைகள் சொல்லிவிட்டார்கள்
எதுவுமே உன் காதில் விழவில்லையா
கவனத்தில் எடுக்கவில்லையா
புத்தியில் உறைக்கவில்லையா

என்னை அணிந்து நீ அசைந்து நடக்கையிலே
அவிழ்த்துப் போட்டுவிட்டு போகும்
அனாச்சார நங்கையரின்
அங்க அமைப்புகளை விட
அதிக கவர்ச்சியில் தெரிகின்றாய்
என்பது கூடவா உனக்கு தெரியவில்லை?

உன் மனதில் என்ன நினைப்பு
உலக அழகி நீ என்றா?
வெட்கமில்லையா உனக்கு?
வெளித்தள்ளிய உறுப்புக்கள் அழுத்தி
வெடித்துவிடுவேனோ என்ற பயத்தில் நான்...
வெற்றுடம்பாக ஓர் ஆடை
வேஷமிட்டு மகிழ்கின்றாயே
வெந்து போகும் நரகத்தின்
வாசம் நுகர ஆசையா?

கொண்டவனுக்கு மட்டுமே காட்டி
கொண்டாட வேண்டியதை எல்லாம்
கண்டவனுக்கும் காட்டிக் கொண்டு
களங்கப்பட்டு நிற்பதில் தான்
என்ன இன்பம் கண்டு விட்டாய்?

காண்பவரெல்லாம் கண்டு ரசித்தை
கட்டிய கணவன் தொட்டு ரசிக்கையில்
கூசவில்லையா உன் மேனி?
கூனிக்குறுகி போகவில்லையா உன் மனது?

அறியாமல் கேட்டுவிட்டேன்.
அது எப்படி சாத்தியம் ?
அவனும் சேர்ந்தல்லவா அலங்கரித்து
அடுத்தவனுக்கும் பங்கு வைக்கிறான் -உன்
அழகு பற்றி அவன் நண்பன் புகழும் போது
அகங்குளிர சிரித்து
ஆனந்தத்தில் பெருமையும் அடைகிறான்!

ஆண் சிங்கமா அவன்?
இல்லை .. இல்லவே இல்லை!
அசிங்கம் பிடித்தவன் அவன்
ஆண்மையுள்ளவனா அவன்?
அடக்கி வைக்கத் தெரியாதவன்
அடங்கி வாழும் கோழை அவன்!

ஆடை என்பது அவ்ரதை மறைக்கத் தான்.
அங்கங்களின் அசல் அமைப்புக்களை
அச்சொட்டாக அப்படியே அந்நிய
ஆண்களின் கண்களுக்கு அளந்து காட்டவல்ல
அதை உணர்ந்து கொள் முதலில்..
அள்ளாஹ்வுக்கு பயந்து கொள்!

ஏன் என்னை அவமானப்படுத்துகின்றாய்
எத்தனையோ பேர் என்னை
ஏளனமாக திரும்பிப் பார்க்க வைக்கின்றாய்
எவ்வளவு உடைகள் இதற்காக இருக்க
என்னை எதற்காக வடிவமைக்கின்றாய்?
ஏன் என்னைத் தேர்ந்தெடுத்து
எரிச்சல் மூட்டுகின்றாய்?

உன் உடம்பை விட்டு என்னை கலட்டும் போது
உணர்கின்றேன் நானும்...
உடலை விட்டு உயிர் கலட்டும் வலி இதுவோ?

நீ எக்கேடு கெட்டும் போ...
ஆனால்....
என்னை மரியாதையாக வாழவிடு
என் பெயரைச் சொல்லி எள்ளிநகையாடும்
ஏகப்பட்ட கூட்டத்தின் வாயடைத்து
எனக்கான சுயத்தோடு ,
என் அடையாளத்தோடு
என்னை தலைநிமிர வழி விடு!

இழந்த செல்வாக்கை எல்லாம்
இனியாவது மீட்டிக் கொள்கின்றேன்..
இணைத்து விடாதே - என்னை
இறைவனின் சாபத்தில்...

இப்படிக்கு,
உன் உடம்போடு ஒட்டி
படாத பாடுபட்டு கழட்டப்பட்ட,
பரிதாபத்துக்குறிய,
அலங்கார அபாயா.

(இவ்வாறான அபாயா அணிபவர்களுக்கும், அதை தடுக்காது அனுமதிப்பவர்களுக்கும் இந்த அலறல் சமர்ப்பணம்)

ஆக்கம் : Binth Hassan Az
05.01.2016

Post a Comment

0 Comments