Subscribe Us

header ads

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர தின விழா உரை


கடந்த ஓராண்டு காலத்தினுள் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை குறைப்பதற்காக நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகளின் மூலம் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்றைய தேசிய சுதந்திர தின நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உரை வருமாறு:

இது நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திர தின நினைவு வைபவத்தை பேரபிமானத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடும் ஒரு இனிய சந்தர்ப்பமாகும். 68 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலணித்துவாதிகளிடம் இருந்து நாம் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வருடாந்தம் இடம்பெறும் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற தேசிய சுதந்திர தின வைபவத்தின் 68வது சந்தர்ப்பமே இதுவாகும்.

விசேடமாக 1948ஆம் ஆண்டையும் 2016 இன்றைய தினத்தையும் நாம் எடுத்துக்கொண்டால் சுதந்திரம்பற்றி கதைக்கும்போது பொருளாதார, அரசியல், சமூக, கலாசார ரீதியில் நம் நாட்டைப்போன்றே ஏனைய உலக நாடுகளிலும் பாரிய மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. 

1948ஆம் ஆண்டில் நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரம்பற்றிய விளக்கமானது, அதனை வரைவிலக்கணப்படுத்துவோமாயின், 1948 ஆண்டு எமது நாட்டு மக்கள் எதிர்பார்த்த சுதந்திரமும் 68 ஆண்டுகளின் பின் இன்று நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே பாரிய மாற்றங்கள் உள்ளதென நான் நம்புகிறேன்.

1948 அல்லது 50ஆம் தசாப்த்தத்தில் பிறந்த ஒரு பிள்ளையை கலாசார குழந்தையென நான் கருதுகிறேன். 2016 இன்றைய கால எல்லையின் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டமான இன்று பிறக்கும் பிள்ளைகளை தொழில்நுட்ப குழந்தைகள் என நான் கருதுகின்றேன். அவ்வாறாயின் 50ஆம் தசாப்தத்தில் பிறந்த கலாசார பிள்ளையையும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் அல்லது இன்றைய தினம் பிறக்கும் தொழில்நுட்ப பிள்ளையையும் ஒன்றிணைத்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியினையும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணியினையும் எமது ஒன்றிணைந்த முயற்சியின் மூலம் மேற்கொள்ளல் வேண்டுமென நான் நம்புகிறேன்.

அன்பின் பிள்ளைகளே, பெற்றோர்களே, நண்பர்களே, காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்காக அன்று போராடிய தேசிய வீரர்கள்பற்றி கதைக்கும்போது அத்தேசிய வீர்ர்களுள் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய சுதந்திரப் போராட்டத்தின் சமகால தலைவர்கள் பலர் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் நட்புறவுடனும் கருத்தொருமித்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக போராடி எமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள் என்பதனை நாம் நன்கறிவோம்.

நாம் இதுபற்றி சற்று விரிவாகப் பார்ப்போமாயின் 1505ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் எமது நாட்டை ஆக்கிரமித்த தினத்தில் இருந்து அல்லது 1505ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரையான கால எல்லையினுள் 400 ஆண்டுகளாக நாம் வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்குட்பட்டிருந்த யுகத்தில் நாம் பலவற்றை இழந்தோம். எமது கலாசாரம் பாதிப்புற்றது. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. முன்னைய அரசர்களினால் கட்டியெழுப்பப்பட்டிருந்த சுபீட்சம் நிறைந்த எமது இலங்கை 400 ஆண்டு காலம் காலணித்துவ ஆட்சியின் பயனாக எமது நாடு பலவற்றை இழந்தது.

இவ் அழிவு 400 ஆண்டு காலமாக நிகழ்ந்தது. 1505ஆம் ஆண்டு முதல் போராடி எமது வீரர்கள் நெற்றி வியர்வை சிந்தி பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பல ஆண்டுகள் போராடி 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர். நாம் காலணித்துவவாதத்திலிருந்து சுதந்திரம் பெற்ற போதும் 400 ஆண்டுகாலம் எமது நாட்டை ஆக்கிரமித்த, எம்மை ஆண்ட வெளிநாட்டவர்கள் இந்நாட்டில் தோற்றுவித்த பிரச்சினைகளை எம்மிடம் விட்டுச் சென்றனர்.

விசேடமாக 30ஆம், 40ஆம் தசாப்தங்களில் இவ் வீரர்கள் முன்னெடுத்த போராட்டத்தின்போது இன, மத, குல பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து போராடிப்பெற்ற வெற்றியின் பின்னர் எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இன்று 68 ஆண்டுகள் கடந்துள்ள வேளையில் எமது நாட்டை ஆக்கிரமித்தவர்கள் எம்மிடம் விட்டுச் சென்ற பிரச்சினைகளை நாம் தீர்த்து வைத்துள்ளோமா என்ற வினாவை நாம் அனைவரும் எமது மனச்சாட்சியை தொட்டு கேட்கவேண்டியுள்ளது. 

பெரும்பாலும் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் முன்னுரிமை அளித்துள்ளது. ஆயினும் இனங்களுக்கிடையே ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், நட்புறவு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் 80ஆம் தசாப்தத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆரம்பமாகி 26 ஆண்டுகளாக தொடர்ந்த கொடிய பயங்கரவாதத்தை நம்மால் தவிர்க்க முடிந்திருக்கும்.

ஆகவே ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதார அபிவிருத்தி, பௌதீக வள அபிவிருத்தி என்பன முக்கியம் பெறுவதைப்போன்றே அங்கு வாழும் மக்களின் கலாசார பண்புகள், மதப் பண்புகள், மொழிப் பண்புகள் ஆகிய அனைத்தையும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளுதல் மிக முக்கியம் என நான் நம்புகிறேன்.

இன்று எமது நாட்டில் மட்டுமன்றி உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்கள் எதிர்நோக்கும் சவாலினையும் பிரச்சினையையும் நான் காண்கிறேன். உயர் தொழில்நுட்ப யுகத்தின் இணையத்துடன் உறவாடும் புதிய தலைமுறையினர், ஒட்டுமொத்த பொதுமக்கள் ஆகியோர் எப்போதும் தமது ஆசாபாசங்கள், தமது எண்ணங்கள், தமது குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் தொடர்பாக ஆட்சியாளர்களைவிட எப்போதும் முன்னணியில் இருக்கின்றனர். இது தொழில்நுட்ப யுகத்தில் நான் ஏற்கனவே கூறியவாறு 30, 40, 50 ஆகிய தசாப்தங்களின் கலாசார பிள்ளைக்கும் இன்று 21ஆம் நூற்றாண்டில் 2016ல் இன்று பிறக்கும் தொழில்நுட்ப பிள்ளைக்குமிடையே காணப்படும் பிரதான வேறுபாட்டின்போது நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயமாக உள்ளது. 

ஆகவே அதிநவீன யுகத்தில் வாழும் மக்கள் புதிய சந்ததியினர், புதிய சிந்தனை, புதிய ஆசாபாசங்கள் ஆகியவற்றுடன் செல்லும் பயணத்தில் பெரும்பாலும் அனைத்துத் துறைகளிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மாற்றங்களின்போது அனைத்து துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் நிகழ்கின்றன. புரட்சிகரமான சிந்தனைகள் தோற்றம் பெறுகின்றன. புதிய ஆசாபாசங்கள் உருவாகின்றன. இங்கு நாம் பல்வேறு விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும். இம் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி நடாத்துதல் இன்றியமையாதது. ஆகவே நாடு என்ற ரீதியில் இவ்வனைத்து நிலைமைகளையும் கருத்தில்கொண்டு நான் முன்னர் குறிப்பிட்டதுபோன்று சுதந்திரத்தின் விளக்கம்பற்றி புதிய கோணத்திலும் புதியதொரு பொருட்கோடலிலும் அதனை நோக்குதல் அத்தியாவசியமாகும் என நான் நம்புகிறேன். இன்று உலகில் வரைவிலக்கணங்கள் பற்றி விளக்கும்போது சுதந்திரம் எனும் சொல் பற்றி விளக்குவது மிகவும் கடினமாகும். மிகவும் சிக்கல் நிறைந்த சொல் என நான் நம்புகிறேன்.

சுதந்திரம் என்ற சொல் மிகப் பரந்த அர்த்தமுடைய ஒரு சொல்லாக மாறியுள்ளது. இது பல்வேறு கருத்து விளக்கங்களை தருகிறது. அதிநவீன தொழில்நுட்பத்துடன் விரிவடைந்து சென்றுள்ளது. எமது சிறந்த நட்பண்புகள் எமது நாகரிகத்துடன் புதிய உலகம் மற்றும் புதிய சிந்தனைகள் ஆகியனபற்றி நோக்கும்போது சுதந்திரம் எனும் மிகப் பரந்துபட்ட சிக்கல் நிறைந்த சொல்லினை ஆட்சியாளர்களும் ஏனையவர்களும் பாராதுரமான ஒரு சவாலாக நோக்கும் ஒரு பணியாக இனங் காணலாம்.

ஜனநாயகம் வலுவடைந்துள்ள ஒரு யுகத்தில் நாம் இன்று வாழ்கின்றோம். இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விடயங்கள் உள்ளது. நாம் இன்று அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வாழவில்லை. 

விசேடமாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் தொடர்பாக கதைக்கும்போது சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியினை அரசு, மக்கள் மாத்திரமன்றி நாட்டின் முப்படையினரும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பு ரீதியாக கட்டுப்பட்டுள்ளது. 

26 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த யுத்தத்தின்போது எல்ரீரீஈ.யினரை தோற்கடித்து நாட்டின் சுதந்திரம், சமாதானம், ஜனநாயகம் ஆகியவற்றை வலுவடையச் செய்த எமது கௌரவத்திற்குரிய சிரேஷ்ட படையினர், உயிர்த்தியாகம் செய்த, அங்கவீனமுற்ற, அனைவருக்கும் முழு நாட்டு மக்களதும் கௌரவம் உரித்தாக வேண்டுமென நான் உறுதியாக கூறுகிறேன். 

உயிர்த்தியாகம் செய்து கொடிய பயங்கரவாதம், பிரிவினைவாதத்தை தோற்கடித்து நாட்டுக்கு சுதந்திரம், சமாதானத்தை பெற்றுத் தருவதற்கு எமது முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புத் துறைகள் அரசத் துறையினர் ஒட்டுமொத்த பொது மக்கள், அரசியல் தலைமைகள் ஆகியோரது அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மற்றும் வெற்றி தொடர்பாக காணப்பட்ட மன உறுதி மற்றும் குறிக்கோள் ஆகியன பற்றி நினைவுகூர்தல் மிக முக்கியமானதாகும். 

அவ்வாறே தற்போது இன்று நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின்போது அரசியல் சீர்திருத்தம், சமூக பொருளாதார மறுசீரமைப்பு ஆகிய விடயங்களுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். பெரும்பாலும் முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டது போன்று 26 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து யுத்தத்திற்குப் பின்னரான ஆரம்ப கால கட்டத்தை பற்றி நாம் சிந்திப்போமாயின், 2009 மே மாதம் 19ஆம் 20ஆம் திகதிகள் மற்றும் யுத்த்த்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டியிருந்த பணிகளை நாம் மேற்கொள்ளாததனால் ஏற்பட்ட விளைவாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக அதன் பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

2009 மே 19, 20 ஆகிய தினங்களின் பின்னர் யுத்தத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை நாம் மேற்கொண்டிருப்பின் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அவ்வாறான பிரேரணைகள் சமர்ப்பிக்க நேர்ந்திருக்காதென நான் நம்புகிறேன். ஆகவே நாம் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொள்வோமாயின் 2009 மே 19 20 இற்குப் பின் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய பணிகளான இன ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கான சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே ஆகியோரது ஒற்றுமைக்காக எம்மால் மேற்கொள்ள முடியாது போன பணிகளை மேற்கொள்வதற்காக இந்நாட்டு மக்கள் 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் வாக்களித்தனர். 

அதற்கமைவாக 2015 ஜனவரி 08ஆம் திகதிய ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் 1948 காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் கிடைத்த பின் அவர்கள் எம்மிடம் விட்டுச் சென்ற பிரச்சினைகளுக்கு 68 ஆண்டுகளின் பின்னர் தீர்வு வழங்குவதற்கும் வேண்டியுள்ளதென நாம் கருத்திற்கொள்ள வேண்டுமென தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன். அவ்வாறே 2009 மே மாதம் 19 20க்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய பணிகளை இந்நாட்டு மக்கள் 2015 ஜனவரி 9ஆம் திகதிக்குப் பின் எமது அரசாங்கத்திடம் ஒப்படைத்ததன் பின்னர் இப்பிரச்சினைகளை நாம் தீர்த்து வைத்தல் இன்றியமையாததாக உள்ளதென நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நம்புகிறேன்.

எமக்குப் பின் சுதந்திரம் பெற்ற பல உலக நாடுகள் தனது நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமை, நல்லிணக்கம், மத ஒற்றுமை, மொழி ஒற்றுமை ஆகிய அனைத்திலும் நல்லிணக்கத்தை வலுவடையச் செய்து அரசியல் மற்றும் சமூக மறுசீரமைப்புக்களை மேற்கொண்டமையினால் அவர்கள் இன்று வலுவான முறையில் அபிவிருத்தியை நோக்கி முன்னேறி சென்றுள்ளனர்.

ஆகவே எமக்குக் கிடைத்துள்ள இவ் வாய்ப்பினை நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு தருணம் இதுவாகும். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைகள் தொடர்பில் பிழையாக விளக்கம் கொடுக்கப்படுகின்றது. இப் பிரேரணைகள் தொடர்பாக எமது அரசின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் மக்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலும் பாதுகாப்புப் படையினரின் கௌவரத்தை பாதுகாக்கும் வகையிலும் மற்றும் உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட படையினராக எமது முப்படையினரை மாற்றும் வகையிலுமே நாம் இப்பிரேரணைகளை எதிர்கொள்வோம் என தெளிவாக கூறுகிறேன். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புக்கள், அனைத்து நாடுகள் எமது நாட்டை கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வதற்காக இப் பிரேரணைகளுக்கு நாம் முகம்கொடுத்து பொறுமையுடனும் பக்குவமாகவும் புத்திசாதுர்யமாகவும் நாம் செயற்படுவோம் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகின்றேன்.

ஒரு சில அரசியல் எதிர் தரப்பினர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான குறுகிய எதிர்பார்ப்புடன் இப்பிரேரணைகளை அமுல்படுத்தும்போது அரசாங்கம் பின்பற்றும் செயல்முறை தொடர்பாக மக்களை திசை திருப்பக்கூடிய பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இப்பிரேரணைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம் நல்லிணக்கம் ஆகியன உறுதிப்படுத்தப்படும் என்பதனை தெளிவாக நான் கூறுகிறேன்.

விசேடமாக பாதுகாப்புப் படையினர்களின் மனங்களை குழப்புகின்ற விதமாக வெவ்வேறு விதமான பிழையான கருத்துக்கள், சிந்தனைகளை அரசியல் எதிர் தரப்பினர், தீவிரவாத கருத்துக்களைக் கொண்டோர் பரப்பி வருவதை காணக்கூடியதாய் உள்ளது. 

நாட்டின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாத்து நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்வது, அரசின் கௌரவம், பாதுகாப்புப் படையினரின் கௌரவம், ஒட்டுமொத்த மக்களின் கௌரவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலமே இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாம் அரசு என்ற ரீதியில் ஒன்றிணைந்து முகம் கொடுப்பதாக இன்று 68வது சுதந்திர தினத்தின்போது உங்களது அன்பான தலைமை மக்கள் சேவகன் என்ற ரீதியிலும் முப்படைகளின் தளபதி என்ற ரீதியிலும் ஜனாதிபதி என்ற ரீதியிலும் நான் ஒட்டுமொத்த மக்களுக்கும் உறுதிமொழி அளிக்கின்றேன்.

ஆகவே, இன்று போன்ற ஒரு தினத்தில் நாம் அபிமானமுடையவர்கள் என்பதனை நினைவில் நிறுத்துதல் வேண்டும். அபிமானமுடைய ஒரு தேசமாக உலகப் படத்தில் குறித்து வைப்பதற்காக நாம் செயற்படல் வேண்டும். ஒட்டுமொத்த மக்களும் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென நான் நம்புகிறேன்.

கடந்த ஆண்டில் புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பெற்றுக்கொண்ட வெற்றியின்போது இந்நாட்டு மக்களின் ஜனநாயகம், சுதந்திரத்தைப் பாதுகாத்து 19வது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்டமையானது இந்நாட்டு மக்கள் இந்த யுகத்தில் பெற்றுக்கொண்ட மிக முக்கியமான ஒரு வெற்றியாகுமென நான் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றேன். சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்துவதன் ஊடாக 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்நாட்டு மக்கள் வேண்டி நின்ற தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. 19ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தேர்தல், அரச சேவை, பொலிஸ், மனித உரிமைகள், கணக்காய்வு போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கான சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி இந்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அவ்வாறே கடந்த ஓராண்டு காலத்தினுள் ஊழல், மோசடி, வீண்விரயம் ஆகியவற்றை குறைப்பதற்காக நாம் அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொண்ட செயற்பாடுகளின் மூலம் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளோம் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நாம் பாராளுமன்றத்தை வலுவடையச் செய்துள்ளோம் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள். அரச சேவையை அரசியல்மயப்படுத்தலிலிருந்து விடுவிக்கும் பொருட்டு 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வனைத்துவிதமான சுதந்திரங்களையும் வழங்கும்போது விசேடமாக ஊடக சுதந்திரம் தொடர்பாக நாம் பின்பற்றும் கொள்கையின் பயனாக இந்நாட்டு ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இச்சுதந்திரம் இன்று உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. ஊடகத்துறையில் உள்ள அறிஞர்கள். புத்திஜீவிகள் போன்றோர் நன்நெறியுடனும் பண்பாகவும் செயலாற்றி தனது ஊடக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பதற்காகவே நாம் இந்த ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளோம் என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

நாம் வழங்கிய இச் சுதந்திரமானது குறித்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாது விடின் வழங்கப்பட்டுள்ள இச்சுதந்திரமானது எமக்குப் பின்னர் வரவுள்ளவர்களினால் என்றோ ஒரு நாள் இல்லாது செய்யப்படலாம். ஆகவே இச்சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் உள்ளதென நான் குறிப்பிடுகின்றேன். 

பொருளாதார ரீதியாக சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு, அபிவிருத்தியடைவதற்கு, இலவச கல்வியை வலுவடையச் செய்வதற்கு, இலவச சுகாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு, போசாக்குள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, புதிய உயர் தொழில்நுட்பத்துடன்கூடிய புதிய சந்ததியினரை ஒன்றிணைத்து போட்டி மிகுந்த இவ்வுலகில் சர்வதேச ரீதியாக முன்னேறிச் செல்வதற்கு உள்நாட்டு கைத்தொழில், உள்நாட்டு உணவு உற்பத்தி ஆகியவற்றை விருத்தி செய்து வெளிநாட்டு சந்தைக்காக எமது உள்நாட்டு உற்பத்திகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை வலுவடையச் செய்யும் எமது கொள்கையினை நாம் சிறப்பாக செயற்படுத்துவோம்.

அவ்வாறே சுதந்திரத்தின் பின் 08 ஆண்டு காலத்திற்குள் எமது கடல் வளம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக எவ்வளவு தூரம் பயன்படுத்தப்பட்டுள்ளதென்ற வினா எம்முன் உள்ளது. உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கடல்வளத்தினை பயன்படுத்தும்போது நாம் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு வீதமேனும் கடல் வளத்தினை பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே அதி நவீன உலகின் ஒரு தீவாக நாம் இப்பாரிய கடல் வளத்தின் மூலம் எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு தொழில்நுட்ப அறிவின் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொள்வதற்கு எம்மால் முடியும்.

இன்றைய தினத்தைப் போன்ற பாக்கியம் பெற்ற ஒரு தினத்தில் 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போராடிய நாட்டுப்பற்றுள்ள சிரேஷ்ட தலைவர்களை கௌரவத்துடன் நினைவுகூர்ந்து 26 ஆண்டுகால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து உயிர் தியாகம் செய்து நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டிய எமது சிரேஷ்ட இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தி இன்றைய தினத்தின் எமது பணி நாளைய தினத்திற்கான அர்ப்பணிப்புடன் ஒன்றிணைந்து நிறைவேற்றி குறுகிய அரசியல் வேறுபாடுகளின்றி, குறுகிய சிந்தனைகள் இன்றி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளிலிருந்து மீண்டு ஒன்றுபட்டு செயலாற்றி சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்போம் என்ற வேண்டுகோளை நான் விடுக்கின்றேன்.

அவ்வாறே இச்சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள சகல உரிமைகளையும் அனுபவிக்கும்போது புத்திசாதுர்யமாகவும் அறிவுபூர்வமாகவும் பொறுமையுடனும் இப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணிக்குமாறு விசேடமாக அரசியல் எதிர் தரப்பினருக்கு நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

உலகின் உன்னத ஒரு தேசமாக எமது நாட்டை மாற்றுவதற்கு, மலரப்போகும் தசாப்தங்களுக்காக எமது நாளைய தினத்தை தயார் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு நட்புறவுடன் செயற்படுவோம் என கௌரவத்துடன் அழைப்பு விடுக்கின்றேன்.

Post a Comment

0 Comments