ஹோமாகம பொலிஸில் நேற்று சரணடைந்து, இன்று செவ்வாயக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி 26ம் திகதி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ போன்ற தேரர்கள் ஹோமாகம பொலிஸில் நேற்று சரணடைந்தனர்.
இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவர்களுக்காக சட்டத்தரணி உதய கம்மன்பில, சட்டத்தரணி ஜானக வெலிவத்த ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இவர்கள் தொடர்பான முறைப்பாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments