Subscribe Us

header ads

நமது மக்களின் காணிகளில் பெரும்பான்மை மக்களை குடியமர்த்த திட்டம்

கல்பிட்டி பிரதேசம் கண்டல்குளியில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் இருப்பது நீங்கள் எல்லாம் அறிந்த விடயமே , முன்னாள் நிதியமைச்சர் நைனா மரிக்காரின் காலத்தில் தான் இந்த இராணுவத்தின் பயிற்சிக்கு என்று 1087 ஏக்கர் காணிகள் அரசால் வழங்கப்பட்டது . ஆனால் இன்று இவர்களிடம் 3000 ஏக்கருக்கு மேற்ப்பட்ட காணிகள் காணப்படுகின்றன . இவை எப்படி என்று நாம் கேட்க விரும்புகிறோம் ?
இவ்வாறு கேள்வி எழுப்புகிறார் , முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் , அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் இணைப்பு பணிப்பாளருமான எஸ் ,ஏ .எஹியா
நடந்தது இது தான் இந்த கண்டல்குளி இராணுவ முகாம் மூலம் யுத்தம் நடந்த காலத்தில் அடிக்கடி பயிற்சிகள் நடந்தமை நமக்கெல்லாம் நன்கு தெரியும் . இதனால் சில உயிர் பலிகளும் நடந்துள்ளது .ஆதலால் , இதனை சூழவுள்ள பள்ளிவாசல்துறை , முசல்பிட்டி , கண்டல்குடா, கப்பலடி போன்ற பகுதி மக்கள் அச்சத்தின் காரணமாக அந்த எல்லைக்குள் விவசாயம் செய்வதில் இருந்து தவிர்ந்து வந்தனர் . இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியே இராணுவத்தினர் கிட்டத்தட்ட் மக்களின் 2000 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பு செய்துள்ளனர் . அதோடு விவசாயிகளின் 5000 கணக்கிற்கும் மேலான கால்நடைகளும் இந்த முகாமுக்குள் சென்றால் அதையும் இராணுவத்தினர் சொந்தமாக்கி விடுகின்றனர் .
இந்த மக்கள் இது விடயமாக பொலிஸ் நிலையத்திலோ , அரசாங்க செயலக்திலோ சென்று முறைப்பாடு செய்தாலோ , விசாரணை செய்தாலோ சாதகமான பதில்கள் எதுவும் அவர்களுக்கு கிடைப்பதாக இல்லை . இது இவ்வாறு இருக்க , தற்போது இந்த காணிகளில் பெரும்பான்மை மக்களை குடியமர்த்தும் ஒரு செயல்திட்டம் மிகவும் கட்சிதமாகவும் , இரகசியமாகவும் இடம்பெற்றுவருவதாக அறிய முடிகிறது . பள்ளிவாசல்துறை கிராமத்தில் கண்டல்குளி பெரும்பான்மை மக்களை கொண்டுவந்து குடியேற்றும் முயற்சியில் சில பெரும்பான்மை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுரு சிலரும் ஈடுப்பட்டுள்ளனர் . ஏற்கனவே காணிகளை பறிக்கொடுத்து நிர்க்கதியாய் நிற்கும் இந்த மக்களுக்கு , இப்படியான ஒரு விடயம் இடம்பெறுவது மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே உள்ளது .
ஆக, இந்த மக்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்கும் விடயத்தில் நாம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளோம் . சுற்றுலா துறை , அனல் மின் நிலையம் , காற்று மின்சார நிறுவனங்கள் என்று பல ஏக்கர் காணிகள் குறைந்த விலைகளுக்கும் , அநியாயமாகவும் மக்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கும் இந்த நிலையில் இப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கும் இந்த மக்கள் அதுவும் நமது நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்று தரும் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த அப்பாவி மக்கள் தள்ளப்படிருப்பது கவலையான விடயமாகும் .

அத்தோடு குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் கடந்த 35 வருடங்களாக இப்பகுதி மக்களுக்கு எவ்வித அரசாங்க காணிகளும் பகிர்ந்தளிக்கப்படவில்லை . இப்படியான ஒரு நிலையில் இருப்பதையும் பிடுங்கி கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் கேட்க விரும்புகிறோம் . யாழ்பாணம் போன்ற யுத்தம் நடைபெற்ற இடங்களில் கூட இன்று இராணுவம் சுவீகரித்த காணிகளை விடுவித்துள்ளனர் எனில் எந்த வித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் இல்லாத இப்பகுதியில் விடுவிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே நாம் கருதுகிறோம் . ஆகவே , இந்த விவசாய மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த செயலை உடனடியாக நிறுத்தி இவர்களுக்கு காணிகளை மீள பெற்றுக்கொடுத்தல் அல்லது நஷ்ட்ட ஈடு வழங்குதல் , முறையற்ற குடியேற்றங்களை தடுத்தல் போன்ற செயல்பாடுகளில் பொதுமக்களையும் இணைத்துக்கொண்டு போராடும் முடிவுக்கு நாம் வந்துள்ளோம் . இதற்கான செயல்களை வரும் நாட்களில் பள்ளிகள் , சிவில் அமைப்புக்களோடு இணைந்து நாம் ஆரம்பிப்போம் . மக்களின் கையெழுத்துக்களும் சான்றாக பெற உத்தேசிக்கப்பட்டுள்ளது .
ஆகவே , இதை ஒரு பொது பிரச்சினையாகவும் , நமது சமூகத்தின் பிரச்சினையாகவும் கருதி பொது மக்கள், ஆசான்கள், புத்தி ஜீவிகள் , உலமாக்கள் போன்றோர் நமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம் என்றார்
அத்தோடு இது விடயத்தில் நமது தேசியத்தலைவரும் , வர்த்தக வாணிப அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் ஊடாகவும் ,நமது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி ஊடாகவும் ஜனாதிபதி , பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கிறோம் .

Post a Comment

0 Comments