கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் விநியோகிக்க முடியாத ஒரு லட்சத்திற்கும் அதிகமான பதிவு அஞ்சல்கள் தேங்கியிருப்பதாக அஞ்சல் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மக்கள் அஞ்சல் சேவை சங்கத்தின் முதன்மை செயலாளர் ஜயந்த விஜேசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இரண்டாம் நிலை அஞ்சல் நிலைய பொறுப்பதிகாரிகளின் வெற்றிடம் நிரப்பபடாமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கான பதிவு அஞ்சல்கள், கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்திலிருந்தே விநியோகிக்கப்படுகின்றன.
விஷேடமாக வெளிநாடுகளில் இருந்து இணையத்தளங்கள் ஊடாக பொருள் கொள்வனவு செய்யும் செயற்பாடும் மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தால் முன் எடுக்கப்படுகிறது.
இதன்காரணமாக, பரீட்சை அனுமதி பத்திரங்கள் மற்றும் நேர்முக தெரிவுக்கான விண்ணப்பங்கள் தாமதமாவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேகுணரத்னவை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தமக்கு அது தொடர்பில் தகவல்கள் வழங்க முடியாது என குறிப்பிட்டார்.


0 Comments