Subscribe Us

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசமும்! மகிந்த தரப்பினரின் அச்சமும்!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட காலம் நிறைவடைந்து விட்டது. ஐ.தே.க. - ஸ்ரீ.சு.க. கூட்டுச் சேர்ந்து உருவாக்கியுள்ள கூட்டரசாங்கத்தை அசைத்துப் பார்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் கடந்த ஒரு வருட காலமாக பெரிதும் முயற்சித்து வருகின்றனர்.

அரசாங்கத்தை வீழ்த்துவதற்கென சில சந்தர்ப்பங்களை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த போதிலும் அம்முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.

புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் அரசைக் கவிழ்க்க முடியுமென மஹிந்த அணி நம்பிக்கை கொண்டிருந்தது.

அதன் பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கு மஹிந்த தரப்பினர் எண்ணியிருந்தனர்.

இவை இரண்டிலுமே வெற்றி கிட்டாத போதிலும் அரசாங்கம் முன்வைத்த 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் அரசாங்கத்தைப் பதவியிழக்கச் செய்யலாமென அவர்கள் நம்பியிருந்தனர்.

மூன்று முயற்சிகளுமே தோல்வியில் முடிந்த போதிலும் மஹிந்த அணி சலிப்படையவில்லை.

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் கூடுதல் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட போதிலும், பட்ஜட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை எதிர்ப்பதென்ற போர்வையில் தொழிற்சங்கங்கள் சிலவற்றை இணைத்துக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆயத்தங்கள் இடம்பெற்றன.

தொழிற்சங்கங்கள் விடுத்த அச்சுறுத்தலின் பின்புலத்தில் இயங்கிய சக்தி எதுவென்பது ஆரம்பத்திலேயே தெரிய வந்ததால் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவது அரசாங்கத்துக்குப் பாரியதொரு காரியமாக இருக்கவில்லை.

மஹிந்த அணியினரின் அரச எதிர்ப்பு வியூகங்கள் தொடர்ச்சியாக தோல்வியுற்று வருகின்ற போதிலும் அவர்களது திட்டங்கள் புதிது புதிதாகத் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.

விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூடுதலான சபைகளைக் கைப்பற்றுவதன் மூலம் மஹிந்த தரப்பினர் தங்களுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் செல்வாக்கு உள்ளதாக காண்பிப்பதற்கு முற்படுகின்றனர்.

அரசாங்கம் உருவாக்கவிருக்கின்ற உத்தேச அரசியல் யாப்பு, ஐ. நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நிறைவேற்றுதல், ராஜபக்ச குடும்பத்தினர் மீது FCID பிரிவு மேற்கொள்கின்ற ஊழல் விசாரணைகள், யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை போன்ற விவகாரங்களையெல்லாம் ஆயுதங்களாக வைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடலாம் என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தைப் பெரிதும் ஆட்டம் காணச் செய்து விடலாமென்ற நம்பிக்கையிலேயே மஹிந்த அணியினர் தற்போது நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியென தங்களைக் கூறிக்கொள்கின்ற அவர்களது அரச எதிர்ப்புப் போராட்டம் தென்னிலங்கை சிங்கள் மக்கள் மத்தியில் ஓரளவாவது சலசலப்பை ஏற்படுத்தத் தவறவும் இல்லை.

ஆனாலும் ‘சாண் ஏற முழம் சறுக்குதல்’ போன்றே அரசியலில் திடீர்ச் சலசலப்பொன்று சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் யுத்த வெற்றியின் நாயகனெனக் கருதப்படுபவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பாராளுமன்றப் பிரவேசமானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய பலத்தைச் சேர்க்குமென்பது ஒருபுறமிருக்க, மஹிந்த அணியினருக்கு ஏற்படுத்தப்போகும் பாதகங்களும் நெருக்கடிகளும் தான் ஏராளமானதாக இருக்குமென்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட விதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் சிங்கள சமூகத்தைப் பொறுத்தவரை யுத்த வெற்றியின் நாயகனாகவே சரத் பொன்சேகா இன்று வரை மதிக்கப்படுகிறார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தை முடித்து வைத்ததன் மூலம் நாட்டின் பிரிவினையையும் சிங்கள சமூகத்தின் அழிவையும் தடுத்து நிறுத்தியவராக சரத் பொன்சேகாவை அம்மக்கள் மதிக்கின்றனர்.

யுத்த வெற்றிக்கான முழுப் பொறுப்பும் சரத் பொன்சேகாவுக்கு உரியதாக உள்ள போதிலும் யுத்த வெற்றியைக் காண்பித்து முழுப் பலனையும் அனுபவித்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினரென்பது வெளிப்படை.

புலிகளை அழித்தொழித்ததன் வாயிலாக கிடைத்த பலாபலனை சரத் பொன்சேகா சிறிதேனும் அனுபவிப்பதற்கு அன்றைய மஹிந்த அரசாங்கம் இடமளிக்கவில்லை.

சரத் பொன்சேகாவை சிறையிலடைத்தமை, பதவிகளைப் பறித்தமை போன்றவையெல்லாம் அவரது குரலை நசுக்குவதற்கான நடவடிக்கைகளேயாகும்.

யுத்த வெற்றியைத் துரும்பாக வைத்து அடுத்த தலைமுறை அரசியலுக்கும் அத்திவாரமிடலாமென ராஜபக்ச குடும்பத்தினர் நம்பியிருந்த வேளையிலேயே சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசம் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் வரையான இறுதி யுத்தம் வரை களத்தில் நின்றவர் சரத் பொன்சேகா.

யுத்த களத்தில் மட்டுமன்றி அவ்வேளையில் யுத்தம் தொடர்பாக அரசாங்க தரப்பில் நடந்த காட்சிகளையெல்லாம் நன்கறிந்தவர் அவர்.

இது சம்பந்தமாக அன்றைய அரசு மூடி மறைத்த விடயங்களையெல்லாம் துணிச்சலாக வெளியிட்டு வந்தவர் பொன்சேகா.

பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்ததன் மூலம் தீர்க்கமுடன் பேசுவதற்கான களம் அவருக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

Post a Comment

0 Comments