ஊடகங்களில் நாய்களுக்கு நாய் வேலை செய்ய இடமளிக்கப்பட முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பாடல் ஒன்றை பாடிய பெண் பாடகியை தெரண தொலைக்காட்சி செய்தி சேவை விமர்சனம் செய்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தன்னோ புதுன்கே என்ற சிங்கள பாடலை ஒபேரா பாணியில் பாடிய கிஸானி ஜயசிங்க என்ற பாடகியை தெரண ஊடகம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது.
பெண் நாய், பெண் பூனை ஊலையிடுகின்றது, கல் எடுத்து அதன் மீது எறிய வேண்டுமென்ற வகையில் விமர்சனம் வெளியிடப்பட்டிருந்தது.
ஊடகமொன்றில் பெண் ஒருவரை இவ்வாறு இழிவுபடுத்த அனுமதிக்க முடியாது என பிரதமர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் வழங்குப்படுவதில் உண்மையில் அவை மக்களுக்காகவே வழங்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெண்களே அதிகமாக வாழ்ந்து வருவதாகவும் தொலைக்காட்சியில் பகிரங்கமாக பெண்களை இழிவுபடுத்தும் ஊடகமொன்றுக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்க முடியுமா என்பது சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிகளை நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்கும் அது பற்றி கருத்து வெளியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு என்ற போதிலும், இழிவான முறையில் ஊடக செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதியளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களில் நாய்களுக்கு நாய் வேலை செய்ய இடமளிக்க முடியாது என பிரதமர் நேரடியாகவே, குறித்த தொலைக்காட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக உரிமையாளர்களை அழைத்து விசாரணை செய்ய உள்ளதாகவும், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக என விசாரணை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, தாம் ஓர் சர்வதேச ஒபேரா பாடகி எனவும், பாடலுக்கு இழிவு ஏற்படும் வகையில் பாடவில்லை எனவும் கிஸானி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் சட்டம் மற்றும் சங்கீதம் தொடர்பில் பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த மதத்தையோ அல்லது சிங்கள மொழியையோ களங்கப்படுத்தும் நோக்கில் தாம் இந்தப் பாடலை பாடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பாடலை பாடிய ஜோன் டி சில்வாவிற்கு நான் பேத்தி முறையாவேன் எனவும், அவர் எனது உறவுக்காரார் எனவும் கிஸானி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஜோன் டி சில்வாவின் பேத்தியிடம் பாடலின் மூலப் பிரதியை பெற்றுக்கொண்டே பயிற்சியில் ஈடுபட்டதாகவும் சிலர் காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறான விமர்சனங்களைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிஸானி ஜயசிங்கவை நேரடியாக விமர்சனம் செய்த தொலைக்காட்சி அறிவிப்பாளர் சட்டத்தரணி சங்க அமரஜித்தின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. தெரண தொலைக்காட்சி நிறுவன நிர்வாகம், சங்கவின் பணியை உடனடிhயக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
0 Comments