நிஜத்தின் நிழலிலிருந்து ...
உற்றார் , உறவினர், சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாக ஓரிடத்தில் கூடி பரஸ்பர ஒற்றுமையோடும் உள சந்தோஷத்தோடும் நடாத்தி முடித்து வைப்பதே சிறந்த திருமணமாகின்றது . பழைய , ஆதி காலப் பிரச்சினைகளை உள் மனதில் ஆழப் பதித்து வைத்துக் கொண்டு நேரம் பார்த்து திருமணத்திற்கு அழைக்காமல் புறக்கணிப்பது மனிதாபிமானத்திற்குப் பொருந்தாத செயற்பாடு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமாட்டாது .
இன்று எம்மில் அதிகமானோர் வைபவங்கள் , விசேஷ நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தமது உறவுகளின் பழைய பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை அழைக்காமல் , கோபத்தையும் வெறுப்பையும் இத் தருணங்களில் வெளிக் காட்டி மகிழ்கின்றனர் . இதனை சுருங்கச் சொன்னால் இவ்வாறான செயற்பாடுகள் ஒரு மனநோய் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை .
பழிவாங்குதல், உறவுகளை எங்கு கொண்டு செல்கின்றது என்பதைக் கூட உணராமல் தமது வரட்டு கௌரவம் தான் முக்கியம் என கௌரவத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு சில ஜீவன்களும் சமுதாயத்தில் இருப்பது தான் கவலைக்கிடமாக உள்ளது . சொந்தங்கள் , உறவுகள் புறந்தள்ளப்பட்டு எங்கோ உள்ள காரியாலய ஊழியர்களும் , முகநூல் நண்பர்களும் , கௌரவ பேர் வழிகளும் தான் திருமண வைபவங்களுக்கும் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கும் தலைமை தாங்கி அவற்றை சிறப்பிப்பதை இன்று சமூக மட்டத்தில் நவீன யுகம் கண்டு கொண்டிருக்கின்றது .
சிறு சிறு காரணங்களை பெரிதாக்கி , அவற்றிற்கு முரணான அர்த்தங்களைக் கொடுத்து பிரச்சினைகளை பெரிதுபடுத்திய பின் வைபவங்கள் , சந்தோஷ நிகழ்வுகள் குடும்பங்களில் வருகின்ற நேரத்தில் குற்ற உணர்வினால் சொந்தங்களை அழைக்காது தலை குனிந்து நிற்கும் அவல நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படுகின்றது .
ஆக பிரச்சினைகள் இருப்பின் அங்கு தீர்வுகள் இருப்பது தான் விதி , தீர்வுகள் இல்லாத எந்தப் பிரச்சினையும் இவ்வுலகில் இல்லை , பிரச்சினைகள் தோன்ற காரணமாக அமைந்த காரணிகளை இனம் கண்டு அவற்றை வளர விடாமல் முளையிலே கிள்ளி துண்டித்து விட வேண்டும் , இல்லாவிடில் அவை அறியாத வகையில் பெரிதாக வளர்ந்து விருட்சமாகி தீர்க்க முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடும் .
அ(z)ஸ்ஹான் ஹனீபா
எனவே எமக்கு ஏற்படும் பிளவுகள், பிரச்சினைகளுக்கு நிதானமாக சரியாக எவ்வித அநியாயமுமின்றி தீர்வு கண்டு என்றும் எப்பொழுதும் ஒற்றுமையாக வாழ்வதோடு மட்டுமன்றி வரட்டு கௌரவங்களையும் காழ்ப்புணர்சிகளையும் தூக்கி வீசி விட்டு குடும்பங்களை அனுசரித்து நிகழ்வுகளை உறவுகளுடன் சந்தோஷமாகக் கொண்டாட வழி வகுப்போம் .
இவண்


0 Comments