Subscribe Us

வாரிசு அரசியல் செய்யும் நோக்கம் இல்லை: மைத்திரி

இலங்கையின் முன்னைய அரச தலைவர்கள் போன்று வாரிசு அரசியலை முன்னெடுக்கும் நோக்கம் தன்னிடம் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பீ.பீ.சி. சந்தேசய செய்திச் சேவைக்கு அளித்துள்ள விசேட பேட்டியின் இரண்டாம் பாகம் நேற்றிரவு ஒலிபரப்பானது.

இதில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,

தனது குடும்பத்தில் இருந்து யாரையும் அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தனது தம்பி குமாரசிங்க டெலிகொம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைச்சு தன் பொறுப்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் டெலிகொம் தலைவர் குமாரசிங்க, தனது நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு கட்டுப்படாமல் ஜனாதிபதி செயலகத்தின் அறிவுரையின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன குருநாகல் மாவட்டத்திலும், புதல்வி சத்துரிக்கா பொலன்னறுவை மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை படிப்படியாக முன்னெடுத்து வருகின்றார் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை,  ஜனாதிபதியின் வாரிசுகளுக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி தனது இளைய சகோதரன் டட்லியின் அரசியல் ஆசைக்கும் கடிவாளம் போட்டு வைத்துள்ளார் எனவும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments