Subscribe Us

header ads

சிலரின் சீரழிவுகள் (கவிதை)


Mohamed Nizous

எழுதி எழுதியே இஸ்லாம் வளர்ப்பார்
தொழுகையின் சிறப்பை தொடராய் எழுதுவார்
பொழுது புலர்ந்தே போர்வையை விலக்கி
எழுந்து தொழுவார் இது சரி என்பார்

எடுத்ததற்கெல்லாம் இஸ்லாம் பேசுவார்
அடுத்தவன் சொத்துக்கு ஆட்டயப் போடுவார்
தடுத்த விடயத்தை தனியே செய்வார்

கொடுக்கல் வாங்கலில் குளறுபடி செய்வார்


மற்றக் கொள்கையை மடத்தனம் என்பார்
கற்ற அறிஞரை கடுமையாய் சாடுவார்
சற்றுத் தவறினும் சரவெடி வெடிப்பார்
குற்றத்தை மறைக்க குதர்க்கமாய்ப் பேசுவார்

தப்பான உணவில் தொப்பை வளர்ப்பார்
ஜுப்பாவை போட்டு அப்பாவி ஆவார்
எப்ப கண்டாலும் இஸ்லாம் உரைப்பார்
கப்பல் கணக்கில் கப்ஸா அடுக்குவார்.

இண்டர் நெஷனில் இஸ்லாம் அழிவதாய்
கண்ட இடமெல்லாம் கத்தித் திரிவார்
தண்ட வீட்டைத் தாண்டி உள்ள
அண்டை வீட்டுடன் சண்டை பிடிப்பார்

குத்பா மேடை குரலால் அதிரும்
பத்வா வழங்கலில் வித்தைகள் காட்டுவார்
அத்தனை பேரும் ஆழ்ந்த தூக்கம்
சத்தமான பயானில் சாரம்சம் பூஜியம்

இறைவனின் பொருத்தத்தை இதயத்தில் கொண்டு
இயக்கங்களில் இருப்போர் ஏராளம் உண்டு
இருந்தும் ஒரு சிலர் இதற்கு மாற்றமாய்
இருப்பதைக் கூறவே இங்கே எழுதினேன்

Post a Comment

0 Comments