உலகில் உள்ள பல தொழில்களுள் மிகவும் மனநிறைவு தரக்கூடியது குழந்தை வளர்ப்பு என்றே சொல்லலாம். இன்று நாம் வாழும் இந்த அவசரமான உலகினிலே பல சவால்கள், பிரச்சினைகள் என எராளமானவை உள்ளன. இவற்றில் பலவற்றை புரிந்து கொள்ள முடியாமல், அல்லது அறியாமல் பல சிறு குழந்தைகள் அவதியுறுகின்றனர். அதே நேரம் இவை அனைத்தையும் எவ்வாறு குழந்தைகளுக்கு எத்திவைப்பது என்று அறியாமல் பெற்றோர்கள் கூட குழப்பம் அடைகின்றனர். மேலும் சிலர் தங்களுடைய குழந்தைகளை புரிந்துகொள்ளவும் தவறுகின்றனர். இவை அனைத்தும் இந்தச் சிறுகுழந்தைகள் வழிதவறிப்போக காரணமாக அமைந்துவிடுகின்றது.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் சிறந்ததொரு உரையாடல் பழக்கம் இருக்குமாயின் இவ்வாறன நிலை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம். பயனுள்ள உரையாடல்கள் மூலம் இந்த உலகை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தையும் வழிகாட்டலையும் அவர்களுக்கு வழங்கமுடியும்.
தங்களுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிடல், உரையாடல், அவர்கள் சொல்வதை செவிமடுத்தல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர பல பெற்றோர்கள் தவறுகின்றனர். அதிலும் உணரும் சில பெற்றோர்கள், தங்களுக்கு நேரம் போதவில்லை என முறையிடுகின்றனர்.
போஷாக்கான உணவும் தங்குவதற்கு வீடும் என அடிப்படை வசதிகளை அமைத்துக்கொடுத்தால் போதுமானது என நினைக்கும் மனப்பாங்கு பல பெற்றோர்களுக்கு உள்ளது. ஆனால் குழந்தைகளுக்கு அவசியமான முழுவளர்ச்சி அடைவதற்கு பெற்றோருடைய பங்கும் அவசியம் என்பது இங்கு குறிப்பிடப்பட்டவேண்டிய விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அதிகளவிலான ஆய்வுகளும் நடாத்தப்பட்டு வருகின்றன. இங்கு 4 – 12 வயது சிறுவர்களுடன் உரையாடுவது தொடர்பான அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளானவர்கள் கவனம், பராமரிப்பு, அன்பு, ஆதரவு போன்றவற்றை தொடர்ந்தும் எதிர்பார்த்தவர்களாகவே காணப்படுகின்றனர். எனினும் அவர்கள் வளரும்போது சிறிது சிறிதாக சுதந்திரத்தை உணருகின்றனர். அவர் சுதந்திரமாக வளர அவர்களுக்கு பெற்றோருடைய பாதுகாப்பும், அன்பும் அவசியமாகின்றது. ஆகவேதான் உரையாடலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் பொழுது அது அவர்கள் பல வழிகளில் வளர உதவிசெய்வதுடன், உலகினை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வழிவகுக்கிறது.
குழந்தைகள் வழக்கமாக பிறரை அவதானிப்பதன் மூலம் அதிகம் கற்கின்றனர். இது அவர்கள் சிறந்த பண்புகள், பழக்கவழக்கங்கள், சமுதாய பண்பாடுகள் மற்றும் நட்பு போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றி அறிய உதவுகின்றது. அவர்களுடன் அதிகம் உரையாடுவதன் மூலம் நாம் சிறுவர்களுக்கு ஒரு பேசும் களத்தை உருர்வாக்கி கொடுக்கின்றோம். அவர்கள் தங்களது விருப்பு வெறுப்புக்கள், ஆசைகள், உணர்வுகள், சூழ்நிலைகள் பற்றி மனம்விட்டு பேச ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் அவர்களுக்கு எந்த ஒரு நேரத்திலும் உதவி செய்யவதற்கு ஒருவர் இருக்கின்றார் என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்றது.
குழந்தைகளுடன் கழிக்க நேரம் ஒதுக்குவது எப்படி ?
தங்களது குழந்தைகளுடன் கழிக்க ஒரு நேரத்தை ஒதுக்குவது வேலை செய்யும் பெற்றோர்களுக்கு கடினமானதாக இருக்கலாம். அவ்வாறு நேரம் ஒதுக்குவது ஒரு பிரச்சனையாக தோன்றும்போது சில எளிமையான உத்திகளை பயன்படுத்துவது சிறந்ததாகும். தொலைபேசி மூலம் ஒரு அழைப்பினை ஏற்படுத்தி பேசுவதுகூட சிறந்ததாகவே காணப்படுகின்றது. குழந்தைகள் எப்போதும் தங்களது உணர்சிகளை வெளிப்படுத்த ஒரு வழியை தேடிக்கொண்டே இருப்பார்கள். அதற்கு சித்திரம் ஒரு சிறந்த ஊடகமாக காணப்படுகின்றது. உங்களது குழந்தைகளை சித்திரம் வரைவதற்கு அதிகம் ஊக்கப்படுத்துங்கள். வரையும் படங்களை அடிப்படையாக வைத்து ஒரு உரையாடலை ஆரம்பியுங்கள். அவர்கள் தானாகவே தங்களுக்குள் இருக்கும் விடயங்களை உங்களுடன் பகிர ஆரம்பிப்பார்கள். பகிரும் விடயங்களை அவதானமாக செவிமடுக்கும் போது உங்களுக்கு தேறாத விடயங்கள், பிரச்சினைக்குரிய விடயங்கள் ஏதும் இருப்பின் அவை தென்படத் துவங்கும். உதாரணத்திற்கு, ஒரு குழந்தையிடம் தனது விளையாட்டு மைதானத்தை படமாக வரைய சொல்லும்போது அக் குழந்தையின் நிலை பெற்றோர்களுக்கு புரியும். சில குழந்தைகள் தங்களை மையமாகவைத்து ஏனையவர்கள் சுற்றி இருக்கும் விதத்திலும் இன்னும் சில குழந்தைகள் தங்களை ஒரு ஓரமாக காண்பித்து வரைவார்கள். இதன் மூலம் அக்குழந்தை பாடசாலை நேரத்தில் தனிமை படுத்தப்படுவதை பெற்றோர்கள் இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இதை தொடர்ந்து அந்த குழந்தையிடம் உரையாடும் போது தனிமை பட்டிருப்பதன் காரணத்தை கூட அறிய முடிகின்றது. இது போல் பல விடயங்கள் வெளிவருவதை அறியலாம். சில குழந்தைகள் நேரடி உரையாடல்களைப் பார்க்கிலும் தங்களுடைய செயற்பாடுகள் அல்லது பாவனைகள் மூலம் அதிகம் தங்களது உணர்சிகளை வெளிப்படுத்துவார்கள். அவ்வாரனவர்களுக்கு இப்படியான விளையாட்டுகள் அல்லது செயற்பாடுகள் அதிக பயனுள்ளதாக அமையும்.
மேலும், உரையாட ஒரு நேரம் ஒதுக்கவேண்டும் என்று எதிர்பார்க்காது, குறுகியதாய் இருந்தாலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பேசுவது சிறந்தது. உணவுண்ணும்போது, மாலை நேரங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்கள், படுக்கைக்கு செல்லும் நேரம், பயணம் செய்யும்போது, கடைகளுக்குச் செல்லும்போது என கூறிக்கொண்டே போகலாம்.
எவ்வாறு இருந்தாலும் குழந்தைகளுடன் உரையாடும் அந்த நேரங்கள் மிகவும் ஒரு சிறந்த உணர்வு ஏற்படும் விதத்தில் நடப்பது முக்கியம். குழந்தைகள் எல்லா நேரமும் பேசுவதற்கு தயாராக இருக்கமாட்டார்கள், எனவே பேசும் நேரங்களில் அவர்களுக்கு பயம், சஞ்சலம், கோபம், அல்லது கவலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். எனவேதான் பேசும் நேரங்களில் அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்வது அவர்கள் மன அமைதி அடைய உதவும். கைவேலைகள், சமையல், தோட்டவேலைகள், குடும்ப வாகனத்தை கழுவுதல், விளையாடுதல் என எதுவாகவும் இருக்கலாம்.
எவ்வாறு இருந்தாலும் குழந்தைகளுடன் உரையாடும் அந்த நேரங்கள் மிகவும் ஒரு சிறந்த உணர்வு ஏற்படும் விதத்தில் நடப்பது முக்கியம். குழந்தைகள் எல்லா நேரமும் பேசுவதற்கு தயாராக இருக்கமாட்டார்கள், எனவே பேசும் நேரங்களில் அவர்களுக்கு பயம், சஞ்சலம், கோபம், அல்லது கவலை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். எனவேதான் பேசும் நேரங்களில் அவர்களுக்கு பிடித்த ஏதாவது ஒன்றை செய்வது அவர்கள் மன அமைதி அடைய உதவும். கைவேலைகள், சமையல், தோட்டவேலைகள், குடும்ப வாகனத்தை கழுவுதல், விளையாடுதல் என எதுவாகவும் இருக்கலாம்.
பயனுள்ள உரையாடல்களை ஆரம்பிப்பது எப்போது ?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மொழி மற்றும் கருத்தியல் திறன்கள் போதுமான அளவு வளர்ந்துள்ளது என்று நினைக்கும் கட்டத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும். பொதுவாக 4முதல் 5 வயதில் இருந்து குழந்தைகள் ஒரு சில அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடக்கூடியவர்களாக காணப்படுவர் . எனினும் வயது முதிர்ச்சிக்கு ஏற்ப பேசும் விடயங்களை தெரிவு செய்வது அவசியம்.
குழந்தைகள் சொல்வதை செவிமடுப்பது எப்படி ?
குழந்தைகள் சொல்வதை செவிமடுப்பது, அவர்கள் தெரிவிக்க முயலும் விடயம் என்ன என்று அறிவது, அவர்களுடைய சூழ்நிலை என்ன என்பதை புரிந்து அதற்கு ஏற்ப நடப்பதே உரையாடலின் முக்கிய பகுதியாகும். பெற்றோர்கள் அவர்களை செவிமடுத்தல் என்பது குழந்தைகளின் சிறந்த உள, மன வளர்ச்சிக்கு பெரும் உதவியான, சக்தி வாய்ந்த கருவியாகும்.
குழந்தைகள் இயல்பாகவே அதிக ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுடைய கற்பனை உலகானது அவர்கள் பார்க்கும் கார்டூன்ஸ், திரைப்படங்கள், மற்றும் கதைகளில் வரும் கதபாதிரங்களினால் நிரம்பியுள்ளது. தங்களுக்கென்றே ஒரு உலகை அமைத்துக்கொண்டு அதை மற்றவர்களுடன் பகிர ஆசைப்படுவர். ஆனால் நேரமின்மை காரணமாக பெற்றோர்கள் அவர்களையும் அவர்களுடை ஆசைகளையும் ஒதுக்கும்போது அவர்கள் மனத்தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுடைய செயற்பாடுகளில் பெரியவர்கள் அதிகம் அக்கறை காட்டும்போது அவர்கள் மனம் விட்டு பேசவும், வெளிப்படையாக விடயங்களை கலந்து பேசவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
பாடசாலைகளில் நடக்கும் விடயங்கள் பற்றி, ஆசிரியர்கள் பற்றி, ஆசிரியர்கள் பேசும், நடக்கும் விதங்கள் பற்றி குழந்தைகளுடன் தினசரி விசாரித்துவருவதை பழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது.அவ்வாறு செய்து வரும்போது அந்தகுழந்தையும் எல்லா விடயங்களையும் சொல்வதற்கு பழகிக்கொள்ளும். எனவே தவறுகள் நடக்கும் பட்சத்தில் குழந்தை அதை பற்றிபேசும், அல்லது மறைக்க முயலும். மறைக்க முயலும்போது பெற்றோருக்கு அந்த வித்தியாசத்தை உணரக்கூடியதாக இருக்கும்.
பெரியவர்கள் சிந்திக்கும் அளவிற்கோ, செயற்படும் அளவிற்கோ குழந்தைகளால் செயற்பட முடியாதென்பதை புரிந்து, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யவேண்டும். அவர்கள் முடியுமானதை செய்யும் போது அவர்களை பாராட்டி பேசி மனமகிழ வைக்கவேண்டும். அவர்கள் செய்யும் சிறு விடையங்கள் கூட பாரட்டப்படாவிட்டால் மனம் தளர்ந்துபோவதுடன் சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முயலுங்கள், புரிய முடியாமல்போகும் சந்தர்ப்பங்களில் அவர்களை பேச வைக்கவேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளை, கவலைகளை பற்றி விரிவாக பேசவைக்கும் போது மன ஆறுதல் அடைகின்றனர். மேலும் அவர்கள் பாதுகாக்கவும் படுகின்றனர்.
அவ்வாறு பேசும்போது குழந்தைகளின் உடலசைவுகள், முகபாவங்கள், சைகைகள் மீது அவதானம் செலுத்துவது அவசியம். அவர்கள் சொல்லும் விடயத்திற்கும், உடலசைவுகளுக்கும் தொடர்புகள் அதிகம் காணப்படுவதால் அது அதிகளவிலான தகவல்களை தரக்கூடியாதாக இருக்கும். மேலும் உரையாடும் போது குழந்தைகளின் கண்களுடன் தொடர்பினை மேற்கொள்வது அவசியம். கண்களை பார்த்து பேசும்போது கூட அவர்களுடைய மனநிலையை நன்கு புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். விருப்பம் இன்மை, பயம், கவலை, குழப்பநிலை என அதிகளவிலான அறிகுறிகளை கண்கள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஹனா ஹனீபா [B.Sc. Psychology – USA]


0 Comments