Subscribe Us

மாரடைப்பு சிகிச்சையில் ஒரு புதுமை!

இதயத் தசைகளுக்கு ரத்தம் கிடைப்பது குறைந்துவிடும் நிலையை ‘மாரடைப்பு’ என்கிறோம். இதில் பல வகை உண்டு. மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால், நெஞ்சுவலி குறைந்துவிடும். ரத்தக்குழாய்கள் சுருங்கி, இதயத்துக்கு ரத்தமும் ஒக்ஸிஜனும் தேவையான அளவுக்குக் கிடைக்காத காரணத்தால் இந்த வலி வருகிறது. இதற்கு ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்று பெயர். இதை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் மாத்திரைகள் மூலமே சரிப்படுத்திவிடலாம்.
இதைக் கவனிக்கத் தவறும்போது ஏற்படுகிற மாரடைப்புதான் மோசமானது; உயிருக்கு ஆபத்து தரக்கூடியது. திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி கழுத்து, தாடை, இடதுபுஜம், இடது கைவிரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஓய்வெடுத்தாலும் நெஞ்சுவலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மயக்கம் வரும். இதுதான் முழுமையான மாரடைப்பு (Myocardial infarction); இதயத்துக்கு ரத்தம் கொடுக்கின்ற மூன்று தமனிக்குழாய்களில் கொழுப்பு/ரத்தக்கட்டி அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது.
இன்றைய நடைமுறையில் மாரடைப்பு வந்தவருக்கு மருந்துகள் மூலம் ரத்தக்குழாய் அடைப்பைக் கரைப்பது ஒரு வழி. ஆனால் இது எல்லோருக்கும் சரியான சிகிச்சை ஆகாது. அப்படிப்பட்டவர்களுக்கு ‘பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி’ எனும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கை / தொடையில் உள்ள ரத்தக்குழாய் வழியாக ‘கதீட்டர்’ எனும் வளைகம்பி மூலம் ஒரு பலூனையும், ‘ஸ்டென்ட்’ எனும் சுருள் கம்பியையும் இதயத்தமனிக்குச் செலுத்துகிறார்கள். அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பலூனை விரியச் செய்து, அது நகர்ந்து விடாமல் இருக்க ‘ஸ்டென்ட்’டை அங்கு பொருத்திவிடுகிறார்கள். இதன் மூலம் அடைப்பு நீக்கப்பட்டு இதயத்துக்கு ரத்தம் கிடைக்க வழி செய்யப்படுகிறது. என்றாலும், சில வருடங்களுக்குப் பிறகு இந்த ஸ்டென்டிலேயே மறுபடியும் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்து, இதயத் தமனிக்குழாய்கள் மூன்றிலும் அடைப்பு இருந்தால் ‘பைபாஸ் அறுவைச் சிகிச்சை’ மேற்கொள்ளப்படுகிறது. இது மார்பைப் பிளந்து செய்யப்படும் சிகிச்சை என்பதால் சிகிச்சையின் தொடக்கத்தில் வலி தொல்லை தரும். இம்மாதிரி குறைகளையெல்லாம் தவிர்க்கும் விதமாக சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள மினிசோட்டா நகரில் ‘ஆஞ்சியோஜெட் திராம்பெக்டமி’ (Angiojet Thrombectomy)எனும் பெயரில் மாரடைப்புக்குப் புதியதொரு சிகிச்சையைக் கண்டுபிடித்திருக்கின்றனர். இதில் என்ன புதுமை?
இதயத்தில் ஸ்டென்ட்டைப் பொருத்துவதற்கான வழிமுறைதான் ஒரு சிறிய மாற்றத்துடன் இதிலும் பின்பற்றப்படுகிறது. இதற்கெனத் தயாரிக்கப்பட்ட வளைகம்பியின் முனையில் இரண்டு பம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதை நோயாளியின் தொடை ரத்தக்குழாய் வழியாக, ஒரு கணினி உதவியுடன் இதயத்தின் அடைபட்ட ரத்தக்குழாய்க்கு அனுப்புகிறார்கள். இது அங்கு சென்றதும் தீயை அணைக்கத் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பதைப்போல இதய ரத்தக்குழாயை அடைத்திருக்கிற ரத்தக்கட்டியின்மீது சலைன் எனும் திரவத்தைப் பல மடங்கு அழுத்தத்தில் ஒரு பம்பு பீய்ச்சுகிறது. அப்போது அந்த இடத்தில் வெற்றிடம் உருவாகிறது. இதன் பலனால், ஒரு வெடிகுண்டு வெடித்துச் சிதறுவதுபோல அந்த ரத்தக்கட்டி சிதறித் தூள் தூளாகிறது. இதைத் தொடர்ந்து, வளைகம்பி முனையில் உள்ள அடுத்த பம்பு இத்துகள்களை ஒன்றுவிடாமல் உறிஞ்சிக்கொள்கிறது. இதனால் ரத்தக்குழாயின் அடைப்பு 100% துப்புரவாகவும் துல்லியமாகவும் நீக்கப்படுகிறது; மாரடைப்பு எனும் அபாயம் முற்றிலும் விலகிக்கொள்கிறது; இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக ஒரு மனித உயிர் மிக எளிதாகக் காப்பாற்றப்படுகிறது.
இதில் கிடைக்கிற கூடுதல் நன்மை என்னவென்றால், இந்தச் சிகிச்சைக்குப் பிறகு இதய ரத்தக்குழாயில் பலூன் ஸ்டென்ட் பொருத்தப்படுவதில்லை. ஸ்டென்ட் சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பு நோயாளிகள் வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளைக் குறைத்துக்கொள்ளலாம். சிகிச்சை முடிந்த ஒரு வாரத்தில் வழக்கமான பணிகளைச் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இதயத்தில் எவ்வித செயற்கைத் துணைப்பொருளும் பொருத்தப்படாமல் இயற்கை வழியில் இதயம் இயங்க இது வழிவகுக்கிறது.

Post a Comment

0 Comments