ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை கட்சியின் பொதுச் செயலாளரான எம்.ரி.ஹசனலி நிராகரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டதால் அக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியைவிட்டு வெளியேறவுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல்களை அவர் நிராகரித்தார்.
அத்துடன், தான் ஒருபோதும் கட்சியைவிட்டு விலகமாட்டார் என்றும், தனக்கு எதிராக கும்பலொன்று போலிப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றது என்றும் ஹசனலி தெரிவித்தார்.
மு.கா. தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரரான ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் தனது பதவியை அண்மையில் இராஜிநாமா செய்தார். இதனால் ஏற்பட்டிருந்த வெற்றிடத்துக்கு கட்சியின் தலைவரால் தௌபீக் நியமிக்கப்பட்டார். திருகோணமலை மாவட்டத்தில் மு.காவின் செல்வாக்கைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது.
எனினும், குறித்த எம்.பி. பதவி, கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி, முன்னாள் அமைச்சரான சேகு பசீர் தாவூத் ஆகியோருக்குக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ஆதரவாளர்கள் மத்தியில் தீவிரமாகக் காணப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால், தற்போது மு.காவுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே இதுபற்றி செயலாளர் ஹசனலியிடம் வினவியது, இதன்போது கருத்து வெளியிட்ட அவர், "தௌபீக்குக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். எனக்கு எதிராக ஒரு கும்பல் போலிப் பிரசாரம் செய்துவருகிறது. கட்சியைவிட்டு நான் வெளியேறமாட்டேன்'' - என்றார்.


0 Comments