பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் ஓர் படுகொலையாகும் என நீதிமன்றில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி வசீம் தாஜூடீன், நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்திற்கு அருகாமையில் வாகன விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் தலைமையிலான நிபுணர்கள் விசாரணை நடத்தியிருந்தனர். வாகனம் விபத்துக்கு உள்ளான தருணத்தில் தாஜூடீன், வாகனத்தின் சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையாக தாக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டு சாரதி இருக்கைக்கு மறு பக்கத்தில் தாஜூடீன் அமர்த்தப்பட்டிருந்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன், விசேட நிபுணத்துவ மருத்துவர் ஜெஹான் பெரேரா, மேலதிக சட்ட வைத்திய அதிகாரி எஸ்.ஜீ.ஏ. ஹெவகே உள்ளிட்டவர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இந்த அறிக்கை நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தாஜூடீனின் கால்கள், கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடுமையாக தாக்கியதனால் ஏற்பட்ட காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பின்னர் அல்லது உயிர் பிரிய சில நிமிடங்களுக்கு முன்னர் வாகனம் எரிக்கப்பட்டுள்ளது. உடலில் காபன் மொனொக்சைட்டின் அளவின் அடிப்படையில் இந்த நிர்ணயம் செய்யப்பட்டது என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது தடவையாக சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த உடல் பாகங்கள் தாஜூடீனின் உடல் பாகங்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்துடன் கடந்த அரசாங்கத்தின் முக்கிய பிரபு ஒருவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாசிம் தாஜூடின் அவர் கொல்லப்படும் வேளை வாகனத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கவில்லை:- படுகொலைசெய்யப்பட்ட இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம் தாஜூடின் அவர் கொல்லப்படும் வேளை வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கவில்லை என கொழும்பு பிரதானசட்டவைத்திய அதிகாரி அஜித்தென்னக்கோன்,கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிசிற்கு அறிவித்துள்ளார். வாசிம் தாஜூடின் வாகனத்தில் பயணம்செய்து கொண்டிருந்த வேளை ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார் என முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே சட்ட வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். வாசிம் தாஜூடின்தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் அவரது காரின் இடது பக்க ஆசனத்தில் போடப்பட்ட பின்னர் விபத்துபோன்று காண்பிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சட்டவைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களிற்கு முன்னர் வெளியே எடுக்கப்பட்ட வாசிம் தாஜூடினின் உடலை விசேடமருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே கொழும்பு பிரதானசட்டவைத்திய அதிகாரி அஜித்தென்னக்கோன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். தாஜூடினின் கால், கழுத்து,மற்று வயிறு போன்ற பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட கடும் காயங்கள் மற்றும் அவரது கார் எரியூட்டப்பட்ட காயங்கள் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments