ஏமன் நாட்டில் எலக்ட்ரீஷியன் வேலை வாங்கி தருவதாக கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்களை இங்குள்ள ஒரு இடைத்தரகர் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சொன்னபடி ஏமனில் அவர்களை பணியமர்த்தாமல் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு செங்கல் சூளையில் அந்த மூன்று வாலிபர்களையும் கூலித்தொழிலாளிகளாக வேலையில் சேர்த்து விட்டார்.
வடக்கு கேரளாவில் உள்ள ஹரிபட் நகரைச் சேர்ந்த அபிஷேக்(21), பைஜு(29), விமல்(30) ஆகியோரை அந்த செங்கல் சூளை முதலாளி முரட்டுத்தனமாக தடியால் அடித்து வேலைவாங்கும் காட்சிகள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வலம்வந்தபோது கோடானுக்கோடி இந்தியர்களுடன் சேர்ந்து அந்த வாலிபர்களின் பெற்றோரும் உறவினர்களும் கொதித்துப் போயினர்.
இந்த சம்பவம் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் கவனத்துக்கு சென்றதும், இது தொடர்பாக சவுதி போலீசில் இந்திய தூதரகம் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மூன்று வாலிபர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் தொடர் முயற்சியின் பலனாக அபிஷேக், பைஜு, விமல் ஆகிய மூவரும் இன்று அதிகாலை விமானம் மூலம் கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
அவர்களை பெற்றோரும், உறவினர்களும் கண்ணீர் மல்க கட்டித்தழுவி வரவேற்றனர். இவ்வளவு விரைவாக அவர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர உதவிய கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


0 Comments