நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருவருட ஆசிரிய பயிற்சி நெறியை மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரியுள்ளது. இது தொடர்பான வாத்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அரசாங்க சேவை ஆணைக்குழு அல்லது கல்விச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் அல்லது மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கையொப்பத்துடன் முறையான நியமனத்தைப் பெற்று அரசாங்கப் பாடசாலைகளில் கடமையாற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்கள், கல்வியமைச்சின் தனியார் பாடசாலைகளின் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட தனியார் பாடசாலைகளின் பெயர்ப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்றும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் அனுமதியளித்துள்ள நியமனங்களைக் கொண்டுள்ள ஆசிரியர்கள், மகரகம தேசிய கல்வி நிறுவகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி அல்லது பிரின்செட் அல்லது பட்டதாரியல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் வார இறுதி பாடநெறியில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டு சித்திபெறவில்லையென தொலைக்கல்வி ஆசிரியர் பயிற்சி அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர்கள், கல்வியமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவில் பதிவு செய்யப்பட்டடு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நியமனங்களைக் கொண்ட பிரிவெனா ஆசிரியர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆசிரியர் கல்லூரிகளில் காணப்படும் வெற்றிடத்திற்கேற்ப, பாடசாலைகளில் ஆசிரியர்கள் கடமையேற்றதன் முன்னுரிமையின் அடிப்படையில் தொிவு மேற்கொள்ளப்படும்.
ஆரம்பக் கல்வி, கணிதம், விஞ்ஞானம், சமூகவியல், விவசாயம், மனையியல், சங்கீதம், சித்திரம், அரபு, இஸ்லாம், இந்து சமயம், கிறிஸதவம், நடனம், விசேடகல்வி, தமிழ், வணிகம், உடற்கல்வி உள்ளிட்ட 22 பாடநெறிகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியும். ஏதாவதொரு பாடநெறியொன்றுக்கு, போதுமானளவு விண்ணப்பதாரிகள் இல்லாதிருப்பின் அப்பாடநெறியை நடத்துவது, அல்லது நடத்தாதிருப்பது குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தீர்மானிப்பார்.
அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டிலுள்ள 07 ஆசிரியர் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் 2015.11.27ஆம் திகதி குறைந்தது மூன்று மாதகால சேவையை பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் தமது நியமனத்தின் தன்மையை முதல் நியமனக் கடிதத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை, பணிப்பாளர், ஆசிரியர் கல்வி நிர்வாகப் பிரிவு, கல்வி அமைச்சு, இசுருபாய என்ற முகவரிக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை தாங்கிவரும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ஆசிரியர் கல்லூரிகளில் ஆசிரியர் கல்விப் பாடநெறியைப் பின்பற்றுவதற்காக ஆசிரியர்களைத் தெரிவு செய்தல் எனக் குறிப்பிடுதல் வேண்டும்.


0 Comments