ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் கடந்த ஆட்சியில் துள்ளிய சில மாடுகள் பொதி சுமக்கப் போவதாக எதிர்பார்க்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பலரும் இந்தத் தீர்ப்பை பெரும் ஆதரவுடன் எதிர்பார்த்திருந்தனர். இதனால் துள்ளியீ மாடுகள் கதிகலங்கி, அடங்கி பெட்டிப் பாம்பாகின.
இவ்வாறுதான், கடந்த அரசாங்கத்தில் பெரிதும் ஆட்டம் போட்ட ஞானசார தேரரின் கதை அத்தோடு முடிந்துவிட்டது போன்றதொரு மகா அமைதி. ஆனால், மக்கள் எதிர்பார்த்தவை நடைபெறவில்லை. யஹபாலனவின் (நல்லாட்சி) வாய் வெட்டுகள் எல்லாம் வெறும் டுபாக்கூர் என்பதை மெல்ல மெல்ல அறிந்து கொண்டுள்ள சாரீக்கள் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான விசமப் பிரசாரங்களை முடுக்கிவிடுகின்றனவா என்பதை அண்மையில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு ஞானசார தேரர் அளித்திருந்த செவ்வி ஒன்றிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்கைதா, தலிபான், ஐ.எஸ், ஜிஹாத் போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய குழுக்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதை தாம் பகிரங்கப்படுத்தியதாகவும் தமிழ் ஊடகங்கள் இதனை எதிர்த்து எழுதியதாகவும் இன்று அது உண்மையாகி இருப்பதாகவும் ஞானசாரர் இதன்போது குறிப்பிடுகிறார்.
அண்மையில் பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்படுத்தியே அவர் மேற்கண்ட கருத்தினை வெளியிட்டிருந்தார்.
தீவிரவாத இயக்கங்களுடன் இலங்கை முஸ்லிம்களை தொடர்புபடுத்தி ஞானசார தேரர்
வெளியிட்டுள்ள கருத்துக்கள் வழமையான அவரது இனவாதப் பேச்சாக இருந்தாலும், தற்போது குறிப்பிட்டுள்ள இன்னுமொரு கருத்து மிகவும் பாரதூரமானதாகும்.
“கோயில்களுக்குள்ளும் பன்சலைகளுக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குள்ளும் 24 மணிநேரங்களும் யார் வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு என்ன நடைபெறுகிறது என்று பார்க்கலாம். அதற்கு முஸ்லிம்களுக்கும் தடையில்லை. ஆனால், முஸ்லிம் பள்ளிவாசல்களில் அவ்வாறல்ல. பள்ளிவாசல்களுக்குள் தமிழர்களோ, கிறிஸ்தவர்களோ, சிங்களவர்களோ செல்ல முடியாது. பள்ளிவாசல்களுக்குள் என்ன நடக்கிறது, அங்கு என்ன பேசப்படுகிறது என்று முஸ்லிம்களைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. முஸ்லிம் சமூகம் ஓர் இருளடைந்த சமூகம்” என்று முஸ்லிம் சமூகத்தை சாடியிருக்கிறார் ஞானசாரர்.
ஞானசாரர் நினைப்பது போன்று பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம் அல்லாதவர்கள் வருவதை இஸ்லாம் தடைசெய்யவில்லை. நபியவர்களுடைய காலத்தில் அயல் நாட்டிலிருந்து வந்த தூதுக் குழுவை நபியவர்கள் பள்ளிவாசலில் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
இன்றும் பள்ளிவாசலில் என்ன நடைபெறுகிறது அங்கு என்ன பேசப்படுகிறது வெள்ளிக்கிழமை ஜுமுஆக்களில் என்ன உரைகள் நிகழ்த்தப்படுகின்றன என்று அறிய வேண்டு
மானால் முஸ்லிம் அல்லாதோர் தாராளமாக பள்ளிவாசல்களுக்குச் செல்லலாம் அதற்கு எந்தத் தடையுமில்லை.
முஸ்லிம்கள் விகாரைகளுக்குள்ளோ, கோயில்களுக்குள்ளோ செல்ல வேண்டுமானால் தலையில் அணிந்திருக்கும் தொப்பிகளையும் ஹிஜாபுகளையும் அகற்றிய பின்னரே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால், பள்ளிவாசல்களுக்குள் ஒரு பௌத்த குரு செல்ல வேண்டுமானால் அவர் காவியுடையை அகற்ற வேண்டும் என்றோ, தொப்பி அணிய வேண்டும் என்றNh நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதோரை தமது பள்ளிவாசல்களுக்குள் வர அனுமதித்திருக்கிறதே தவிர தடையேதும் விதிக்கவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க, ஞானசாரர் எதனைச் சொல்ல வருகிறார்? அதன் மூலம் எதனை நாடுகிறார்?
மேலும், காத்தான்குடி, மாவனல்லை, பறகஹதெனிய, மாளிகாவத்தை, அக்குரணை போன்ற பிரதேசங்களில் அடிப்படைவாதக் குழுக்கள் இயங்கி வருவதாகவும் ஞானசாரர் புதுக் கதை விடுகிறார்.
எந்தவோர் ஆதாரமுமற்ற இந்தப் போலிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து முஸ்லிம் தலைமைகள் புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றிணைந்து சட்டரீதியாக அணுகக் கூடிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிறிது காலம் அடங்கியிருந்த ஞானசாரர் மீண்டும் இனவாதம் கக்கியிருக்கும் இன்றைய பின்னணிக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
நல்லாட்சி ஏற்பட்டவுடன் இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்து வெளியிடுவோர் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஒரு வருடம் கடந்து விட்டபோதும் அப்படி ஒன்றும் நடைபெறாது என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை உரசிப்பார்க்க ஞானசார மீண்டும் விசத்தைக் கக்க ஆரம்பித்திருக்கலாம்.
அடுத்து, ஏற்கனவே பல ஊழல்வாதிகள் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கும்போது தாம் வெளியில் வருவதற்கான ஒரு பலிக்கடாவாக ஞானசாரரை தூண்டிவிட்டு, இனங்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளுக்கு யஹபாலனீ என்ன பதிலளிக்கிறது என்பதை இவர்கள் ஒழிந்திருந்து பார்க்கலாம். இதேவேளை, நல்லாட்சி மீது சேறு பூசுவதற்காகவும் ஞானசாரர் மீண்டும் பகிரங்கமாகவே கருத்து வெளியிடலாம். எனவே, இவரது பல்லைப் பிடுங்காமல் இருப்பது யஹபாலனவுக்கு பாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மதம் சம்பந்தமான ஆவேசத்தைத் தூண்டும் கருத்துக்களை வெளியிடுவோரை கைது செய்யும் புதிய சட்ட ஏற்பாடு குறித்து அரசாங்கம் கரிசனை காட்டியுள்ள இத்தருணத்தில், ஞானசாரவின் குறித்த விசமக் கருத்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்.
ஞானசாரவின் விசமக் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் இல்லையென்றால் அது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஒரு கறுப்புப் புள்ளியை பதித்து விடலாம்.
பஷீர் அலி


0 Comments