மனிதனால் படைக்கப்பட்டதுதான் இந்த மதங்களும், பாகுபாடுகளும். ஆனால் அந்த மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒன்று என்றால், இவையெல்லாம் தூள் தூளாகிப் போய் விடுகின்றன. அன்பும், மனிதமும் மட்டுமே அங்கு தழைத்தோங்கி நிற்கிறது. இதை சென்னை மக்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளனர்.. நமது நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே.
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போனது மக்களின் வாழ்க்கை. யாரிடம் போய் உதவி கேட்பது என்று கூட தெரியாமல் மக்கள் கலங்கிப் போய் தவித்தனர்.
எந்த "இயந்திரமும்" தங்களுக்காக ஓடி வராத நிலையில் ஆங்காங்கே உதவிக் கரங்கள் நீளத் தொடங்கின. வெள்ளத்தில் சிக்கியவர்களே் சுதாரித்து எழுந்து ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்து தூக்க ஆரம்பித்தனர். யாருமே எதிர்பாராத அளவில் இந்த உதவிக் கரங்கள் மக்களுக்கு கை கொடுக்க ஆரம்பித்தன. எத்தனையோ கரங்கள். யார் யாரோ வந்தார்கள்.. முகமே தெரியாத நிலையில் அவர்கள் காட்டிய அன்பும், மனிதநேயமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருமருந்தாக அமைந்தன.
அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் ஆற்றிய சேவை மிகப் பெரியது, மகத்தானது.
மனிதநேயத்தின் உச்சம் இது..
முகம்மது யூனுஸ் என்பவரின் செயல்தான் சென்னை மக்களை பெருமளவில் மனதார அவர் புகழ் பாடச் செய்தது. இ காமர்ஸில் ஈடுபட்டுள்ள யூனுஸ், சொந்த செலவில் பல உதவிகளைச் செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டோருக்கு உத்வேகம் அளித்தார்.
படகுகளுடன் களத்தில் குதித்தார்
சென்னை பெசன்ட் நகர் ஆலையம்மன் கோயில் பகுதி மீனவர்களுடன் பேசி படகுக்கு 1,500 ரூபாய் என வாடகை பேசி 4 படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினார். இரண்டு நாட்களில் அதிக நபர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை ஏற்பட, 20 ஆயிரம் ரூபாய்க்கு படகுகளை வாடகைக்கு எடுத்து செல்போன் மூலம் இணைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டார். 17 படகுகள் வரை தனது சொந்தச் செலவில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தினார்.
ஊரப்பாக்கம் சித்ராவின் நெகிழ்ச்சி
ஊரப்பாக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முதல் மாடி வரை மூழ்கி இருந்த வீட்டின் மாடியில் சித்ரா என்ற கர்ப்பிணிப் பெண் இருந்தார். உதவிக்கும் யாரும் இல்லை. முகம்மது யூனுஸ் உடனடியாக நீரில் குதித்து சித்ராவைக் காப்பாற்றி படகில் சேர்த்திருக்கிறார். அவரது கணவர் சந்துருவையும் மீட்டிருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாக பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.
வெள்ளமே வெட்கப்பட்டிருக்கும்
இப்படி மதம் பாராமல் முகம் பாராமல், மனிதத்தை மட்டுமே பார்த்து செய்த உதவிகளைப் பார்த்து வெள்ளமே கூட வெட்கப்பட்டுப் போயிருக்கக் கூடும். இந்த மனிதம் மேலும் மேலும் வலுப்பெற வேண்டும், என்றென்றும் தழைத்தோங்க வேண்டும்.
உணவும், உடையும்
இந்த அமைப்பினர் ஆங்காங்கே சமையல் பாத்திரங்களை வைத்து மொத்தமாக சமைத்து வண்டிகளில் வைத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தெருத் தெருவாக சென்று வீடு வீடாக பாக்கெட் உணவைக் கொடுத்து வந்தனர். தண்ணீர் பாட்டில், அடிப்படை மருந்துகள், பிஸ்கட் போன்றவற்றையும் கொடுத்தனர்.


0 Comments