நேற்றிரவு ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் அவர்கள் ஆனந்த தேரருடன் செய்த விவாதமானது தனியே முஸ்லிம் சமூகத்தின் விவாதமாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் சம கால முஸ்லிம் அரசியலையும்-முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதி உள்ளிட்ட பல விடயங்களை அமைச்சர் ரிஷாத் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
இருந்த போதிலும், ஆனந்த தேரர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்குமளவுக்கு முஸ்லிம் சமூகம் குறித்தும், வில்பத்து விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் அநீதியான அபாண்டங்களை சுமத்தியதை காணக் கூடியதாக இருந்தது.
சில இடங்களில் அமைச்சர் ரிஷாத் அவர்கள் பதில் சொல்ல முடியாதளவுக்கு ஆனந்த தேரர் குதர்க்கமாகவும்,முரண்பாடகவும்,மழுப்பலாகவும் கருத்துக்களை முன் வைத்தார். இவ்விடத்தில் ரிஷாத் அவர்கள் தனியொரு மனிதராகவும், இனவாதத் தரப்பு நான்கு பேருடனும் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடனும் விதண்டாவாதங்களை முன்மொழிந்தனர்.
சிங்களத்தில் தேர்ந்த மொழிப்புலமை இல்லாவிடினும் அமைச்சர் ரிஷாத் இனவாதிகளின் விஷமக் கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தவறவில்லை. இருப்பினும், ஹிரு தொலைக்காட்சியின் நேற்றைய ‘சலகுண’ விவாதத்திற்கு அமைச்சர் ரிஷாத் தனியே சென்றிருக்காமல் முஸ்லிம்களின் வரலாறு.மொழிப் புலமை, சமூக சிந்தனையும்,ஆளுமையும் மிக்க ஓரிருவரை அழைத்துச் சென்றிருந்தால் எமது ஆழமான நியாயங்களை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு புரிய வைத்த்திருக்கலாம்.
அமைச்சர் ரிஷாத் அவர்கள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் அடையாளமிக்க ஒரு அரசியல்வாதியாகும். ஆனால், ஒரு தேரர் என்பதைத் தவிர எவ்வித அடையாளங்களுமற்ற ஆனந்த தேரருடன் விவாதம் புரிவதில் இருந்து அமைச்சர் ஒதுங்கியிருக்கலாம். சல்குண விவாதம் ஆனந்த தேரருக்கு ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமாகி விட்டது.
அண்மையில், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்து நடாத்திய சிங்கள மொழி மூலமான குர் ஆன் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாத் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டதையும் ஆனந்த தேரர் மதவாத சாயத்தை பூசி பேசினார். இவ்விடயமானது, கோட்டபாய பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தை காலியில் திறந்து வைத்த போது முஸ்லிம்கள் எப்படி அதிர்ச்சியடைந்தார்களோ அது போலவே சிங்கள மொழி மூலமான குர் ஆன் வெளியீட்டில் அமைச்சரின் பிரசன்னத்தை இனவாதமான முறையில் பெரும்பானமை மக்களிடத்தில் திரிபுபடுத்த முனைந்ததை காணக் கூடியதாக இருந்தது.
மேலும், நேற்றைய விவாதத்தில் பொதுத் தளத்தில் பொதுப் பிரச்சினை பற்றிப் பேச வந்த ஆனந்த தேரர் அமைச்சர் ரிஷாத் அவர்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசி, விவாதத்திலிருந்து விலகிச் செயற்பட்டார். ஒரு ஆரோக்கியமிக்க கலந்துரையாடலில் இது பிழையான கோட்பாடாகும்.
ஆனந்த தேரர் நுனிப்புல் மேயும் ஒரு இனவாத கருவியாகவே நேற்று எனக்கு தென்பட்டார். இதற்கு நல்ல உதாரணம், நேற்றைய விவாதத்தில் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டது ஒரு முஸ்லிம் பெண்ணேயாகும். ஆனால், ஆனந்த தேரர் அதனை தனிப்பட்ட இனவாத பிரச்சாரத்திற்காக கண்மூடித்தனமாக சிங்களப் பெண் என சித்தரித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எல்லாவகையிலும் முஸ்லிம்கள் மீது குரோதமும்,துவேசமும்,நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நச்சுக் கருத்துக்களுடன் ‘சலகுன’ விவாதத்தில் தேரர்கள் குழு முஸ்லிம்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். இதனை முறியடிக்க அமைச்சர் ரிஷாத் தனியாளாக தடுமாற வேண்டிய நிலையேற்பட்டது. அவரது சமூக உணர்ச்சியையும், இனப்பற்றையும் ஆத்மார்த்தமாய் நாம் அனைவரும் வரவேற்கின்றோம்
முஸ்லிம்களை மாற்றான் தாய் மனப்பான்மையில் எதிர்கொள்ளும் இனவாத விஷமிகளுடன் இச்சூழலில் ஒரு விவாதம் அவசியமில்லையெனும் கருத்து பரவலாயிருந்தாலும், அமைச்சர் ரிஷாத் அவர்களுக்கு இதுவொரு தவிர்க்க முடியாத கருத்தாடல் களமாக அமைந்து விட்டது. கருத்துகள் விதைக்கும் தாக்கம் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும். அவசியமான இடங்களில் மௌனமும் மகத்தான வழிமுறையாகும். இது அரசியலுக்கும் பொருந்தும்.
ஊடகப் பிரிவு
ஊடகப் பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்,
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.
சமூக சிந்தனையாளர்,
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.

0 Comments