Subscribe Us

header ads

சென்னை மக்களுக்காக பட்டினி கிடந்து ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய பாலியல் தொழிலாளிகள்


தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மகாராஷ்டிரா மாநில பாலியல் தொழிலாளிகள் பட்டினி கிடந்து ஒரு லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அகமத் நகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையில் வேறு போக்கிடமற்று தவிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உட்பட தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்த இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை நிச்சயம் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டனர். 

இதற்காக, சுமார் 2 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு, பட்டினி கிடந்து, தங்களிடம் இருந்த சேமிப்புத்தொகையைக் கொண்டும் ஒரு லட்ச ரூபாயை சேர்த்து, அதற்கான காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் அனில் கவாடேயிடம், சினேகாலயா என்ற தொண்டு நிறுவனம் நேற்று ஏற்பாடு செய்திருந்த விழாவின் போது வழங்கினர்.

இதுகுறித்து சிநேகாலயா தன்னார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கிரிஷ் குல்கர்னி கூறுகையில், ‘‘பாலியல் தொழிலாளிகளின் தன்னலமற்ற சேவை மனதை உருக்குவதாக உள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களாக அவர்கள் ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிட்டனர்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு பணத்திற்காக தினம் தினம் நரக வேதனையை அனுபவித்து வரும் பாலியல் தொழிலாளிகள் தங்களை புறக்கனித்த சமூகத்திற்காக உதவியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments