கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் இயந்திரம் போன்று இயங்குகிறார்.அவரது செயற்பாடுகளைப் பார்க்கும் போது இவரே நோயாளியாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விடுவாரோ என்ற அச்சமும் என்னுள் உள்ளது. (இறைவன் காப்பானாக) சுகாதார அமைச்சராகப் பதிவியேற்கும் முன்னர் மக்களுக்காக மக்களுடன் இணைந்து எவ்வாறெல்லாம் தன்னால் முடிந்தவற்றைச் செய்தாரோ அதனையும் விட வேகமாக இப்போது அவர் மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துள்ளார். முன்பு மக்களுடன் மக்களாக இருந்தவர் இப்போது அதிகாரிகள், மக்கள் என்ற இருதரப்புடனும் களத்தில் காணப்படுகிறார்.
வயலுக்குள்ளும் நிற்கிறார். வைத்தியசாலைகளுக்கும் நிற்கிறார்.. கடற்கரையிலும் நிற்கிறார்.. கான்கள் துப்பரவு பணி என்றாலும் அங்கேயும் நிற்கிறார் இந்த நஸீர் அமைச்சு.
ஊடகங்களில் இவர் தொடர்பான செய்திகள் வரும் போது பல நேரங்களில் எனக்கு இவர் மீது எரிச்சலும் உண்டாவதுதான். சில அரசியல்வாதிகளைப் போன்று அரச வாகனம், சுகம் இவருக்கும் இருக்குத்தானே? கொழும்பையும் வெளிநாடுகளையும் சுற்றித் தெரியலாம்..சுகம் அனுபவிக்கலாம்தானே? கொழும்பில் ஒய்யாரமாக வாழலாமே?
இவற்றை எல்லாம் விட்டு..விட்டு மக்கள் பணி.. மக்கள் பணி என்று ஏன்தான் இந்த மனிஷன் அலைகிறாரே என்பதே இவர் மீது எனக்கு வரும் எரிச்சல்..
மாகாண அமைச்சராகி விட்டீர்கள்தானே.. இப்போதைக்கு எதற்கு மக்கள் மண்ணாங்கட்டியும்?, அவர்களை மறந்து விடுவதுதானே? தேர்தல்கள் வரும் போது மட்டும் ஊருக்கு வந்து ஏதாவது கூறி மக்களை வளைப்பதுதானே? இது கூட தெரியாத அப்பாவி அரசியல்வாதிதான் இவர். மக்களை ஏமாற்றத் தெரியாதவன் அரசியல்வாதியா தூ....
இவர் பணிகளைக் கண்டு மக்களின் கண்திருஷ்டிபட்டாலும் சிலவேளை பாதிக்காது போய்விடலாம். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளுர் முக்கியஸ்தர்களின் கண்படாமல் இருந்தால் போதும். அவர்களது கண் ரொம்ப.. ரொம்ப டேன்ஜரானது. அவ்வாறு அவர்களது கண்பட்டால் கண்திருஷ்டியைக் கழித்து சுகம் தரக் கூடிய ஒருவர் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் மட்டுமே.
குணம் அறிந்துதான் குதிரைக்கு இறைவன் கொம்பைக் கொடுக்கவில்லை என்று சொல்வார்கள். அது போன்றுதான் நீங்கள் மக்கள் சேவையில் உச்சத்தைத் தொடுவதால்தான் உங்களை அட்டாளைச்சேனைக்கு எம்பியாக்கவில்லையே தெரியவில்லை நஸீர் அவர்களே!
மக்களுக்குச் சேவை செய்து நல்ல பெயர் எடுத்து மக்கள் தலைவானவதை இப்போதுள்ள அரசியல்வாதிகள் பெரிதாக விரும்புவதில்லை அல்லவா? அந்த அடிப்படையிலேயே இதனைக் கூறுகிறேன்.
ஆனால்,அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உங்களை எம்.பியாக்க வேண்டுமென்று அன்றும் இன்றும் மிகுந்த விருப்பத்துடன் உள்ளார் என்பதனை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். இருப்பினும் கடவுள் வரம் கொடுத்தாலும் சில பூசாரிகளை விடுவதில்லை என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களை நெஞ்சில் குத்த வருபவர்களை நீங்கள் எதிர்கொள்ளுங்கள். ஆனால், உங்கள் முதுகைத் தட்டி நல்ல வேலைகள் செய்கிறீர்கள் என்று யாராவது அரசியல்வாதி கூறினால் நம்பி விடாதீர்கள். ஜாக்கிரதை. நிந்தவூர் ஹஸன் அலிக்கு (கட்சியின் செயலாளர்) நடந்துள்ள துயரம் போன்று அட்டாளைச்சேனை நஸீராகிய உங்களுக்கும் நடந்து விடக் கூடாது அல்லவா?
அட்டாளைச்சேனை மக்கள் எம்பி பதவிக்காக ”தவம்” கிடக்கிறார்கள்.
தவம் கிடைக்க வழிசெய்வது அவசியம்தானே?
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்


0 Comments