இந்த உயர் சபையிலே இன்று இந்த விவாதத்திலே பல அமைச்சுக்கள் இருக்கின்றன. அமைச்சர் திகாம்பரம் அவர்கள் மலையக மக்களுடைய நலனுக்காக துரிதமாக பல பாரிய நல்ல நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். அவருக்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் அமைச்சர் ஹரிசன் அவர்களும் என்னுடைய அமைச்சும் இணைந்து பல நல்ல விடயங்களை முன்னெடுக்கின்றன. அமைச்சர் நாவின்ன அவர்கள் வயம்ப அபிவிருத்தி என்ற அமைச்சோடு சேர்ந்து வயம்பவிலே புதிய நல திட்டங்களையும் இன்னோரன்ன நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறார்.
அதேபோல் சிறுகைத்தொழில் அமைச்சர் தயாகமகே அவர்களின் அமைச்சுக்கு 2000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த நாட்டின் கைத்தொழில் துறைக்கு எம்மால் இயன்ற பங்களிப்பை செய்வதற்காக, அவருடைய அமைச்சுடன் இணைந்து பணியாற்ற நாம் தயராக இருக்கின்றோம்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ துணிச்சல் மிக்க வீரமுள்ள ஓர் அமைச்சர் ஆவார். ஆனால் அவருடைய தகவல் தொழில்நுட்ப அமைச்சு (IT industry) மந்த நிலையிலேயே இருக்கின்றது, வாழைச்சேனையிலே 500 ஏக்கர் காணி இருக்கின்றது. இந்த நாட்டிற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப நிலையமொன்றை (IT Park) அவ்வாறான ஒரு பிரதேசத்தில் அமைப்பதற்கோ அல்லது இந்த நாட்டிலே எந்தவொரு இடத்திலாவது அவ்வாறான ஒரு நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சர் ஹரீன் தயாராக இருந்தால் அவருக்கு நிச்சயம் எமது அமைச்சு பூரண ஒத்துழைப்பை வழங்கும். மேலும் அதற்காக அவர் முயற்சிக்க வேண்டுமெனவும் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நண்பர் வஜிர அவர்கள் ஒரு அனுபவமிக்க திறமையான அரசியல்வாதி. நான் அண்மையில் அவரிடத்திலே மன்னார் மாந்தை பிரதேச செயலாளர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்கிறார் என்றும் அவருக்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறினேன். விசாரணை மேற்கொள்வதாக கூறி 2 மாதங்கள் கடந்த போதும் இன்னும் விசாரணை நடக்கவில்லை. அந்தப் பிரதேச செயலாளர் தானாகவே முன்வந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பிய பிறகும் உங்களுடைய அமைச்சின் அதிகாரிகள் அவரை அனுப்பாமல் வைத்திருப்பதாக நான் கேள்வியுற்றேன். அங்கு நடை பெறுகின்ற மண் கொள்ளை, கிரவல் கொள்ளை மற்றும் காணிகள் கொள்ளை போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தாங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
நாங்கள் சில உண்மைகளைச் சொன்னால் எங்களை இனவாதிகள் என்று சொல்வார்கள். இந்த நாட்டிலே 25 அரசாங்க அதிபர்கள் இருக்கின்றார்கள். ஆனால், கடந்த காலங்களிலே ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபர் கூட இல்லை. 10% முஸ்லிம்கள் இந்த நாட்டிலே வாழ்கின்றனர். ஆகக்குறைந்தது 2 பேருக்காவது நீங்கள் ஒரு சந்தர்பத்தை வழங்கியிருக்க வேண்டும். தகுதியுடைய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் தயவுசெய்து அவர்களுக்கும் சந்தர்பம் வழங்க வேண்டும். இது தொடர்பில் நான் உங்களுக்கும், பிரதமருக்கும் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளேன்.
அதேபோல் அமைச்சின் செயலாளர்களாக இருக்கின்றவர்களிடையே நீங்கள் ஒருவருக்கு மாத்திரமே சந்தர்பம் அளித்திருக்கிறீர்கள். 50 அமைச்சு இருக்கின்றது. விகிதாசாரப்படி பார்த்தால் 5 பேருக்காவது நீங்கள் செயலாளர் பதவிகளை கொடுத்திருக்க வேண்டும். கடந்த மஹிந்த அரசாங்கத்திலே செயலாளர்களாக இருந்தார்கள் என்பதே அவர்களுடைய பாரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. தயவுசெய்து அவ்வாறு பார்ப்பதை விடுத்தும் தகுதியானவர்கள் இருந்தால் அவர்களுக்கு சந்தர்பம் கொடுங்கள். மலையகத்தைச் சேர்ந்த ராமானுஜம், வாமதேவன் மற்றும் ஜுனைத், ஹால்டீன் போன்ற நல்ல செயலாளர்கள் இந்த நாட்டுக்காக பல நற் பணிகளை செய்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு சந்தர்பத்தை கொடுங்கள்.
வஜிர அபேவர்தன அவர்கள் இந்த நாட்டிலே இருக்கும் அனைத்து இனங்களையும் சமமாக மதிக்கக் கூடிய ஒரு சிறந்த அமைச்சர். உங்களிடத்திலே நான் மிக அன்பாக வேண்டிக்கொள்வது என்னவெனில், நிர்வாகத் சேவை, திட்டமிடல் சேவை, கல்விச் சேவை, கணக்கியல் சேவை, மற்றும் வெளிநாட்டுச் சேவை உற்பட பல சேவை சார்ந்த துறைகளில் எமது சமூகம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றனர். நீங்கள் தயவுசெய்து அவர்களுக்கு ஒரு சந்தர்பத்தைக் கொடுத்து விகிதாசார அடிப்படையிலாவது அவர்களைத் தெரிவு செய்யுங்கள். மேலும், இந்த நாட்டிலே 8% மலையகத் தமிழர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்தத் துறைகளிலே சந்தர்பங்களை வழங்கி, மலையக சமூகத்தையும் உயர்த்துவதற்கு நீங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். இல்லாவிடில் இந்த சமூகம் சார்ந்தவர்கள் யாரும் ஒரு காலகட்டத்தில் இவ்வாறான துறைகளிலே இருக்கமாட்டார்கள் என்பதை வேதனையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒருகாலத்தில் மக்பூல் என்ற அரசாங்க அதிபர் ஒருவர் இருந்தார். அவரை காரணமில்லாமல் சுட்டுக் கொன்றனர். அதன் பிறகு இந்த நாட்டிலே ஒரு முஸ்லீமைக் கூட அரசாங்க அதிபராக இன்றுவரை நான் காணவில்லை. எனவே, உங்களுடைய இந்த அரசிலே மிக விரைவாக ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ சந்தர்பம் அளிப்பீர்கள் என நான் எதிர்ப்பார்க்கின்றேன். சிங்களவர் தமிழர் என்று எங்களுக்கு பேதமில்லை. ஆனால், எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் சேவை செய்வதற்கு நீங்கள் சந்தர்பம் வழங்க வேண்டும். மன்னார் மாவட்டத்திலே தேசப்பிரிய அவர்கள் மிகக் குறுகிய காலத்திலே நல்ல விடயங்களை செய்திருக்கிறார். அதற்கு அவருக்கு இந்த இடத்திலே நான் பாரட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி என்று அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலே திகாம்பரம், ராதாகிருஷ்ணன், அரவிந்தன் உற்பட பலர் ஒன்று சேர்ந்து மிகவும் நல்ல முறையில் ஒற்றுமையோடு மலையக சமூகத்திற்காக பல நல்ல நடவடிக்கைகளை முன்னேடுக்கின்றார்கள். மலையகத் தமிழ்ச் சமூகம் ஒன்று சேர்ந்திருக்கிறது. அவர்களை நான் பாராட்டுவதுடன் அவர்களுடைய ஒற்றுமை தொடர வேண்டுமெனவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இந்த நாட்டிலே சிறுபான்மைச் சமூகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இன்னுமொரு யுத்தம் வருவதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம். இந்த நாட்டில் உள்ள ஒரு நயவஞ்சக மதகுரு எங்களுடைய புனித அல்-குர்ஆணுக்கு எதிராக பேசியிருக்கிறார். அரசாங்கத்திற்கும் ஒரு பொறுப்பு இருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது நம்பிக்கை வைத்தே நாங்கள் வந்தோம். ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டிலே நல்லாட்சி வருமென்று எதிர்பார்த்தோம். ஆனால், மீண்டும் இனவாதத்தை, மதவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் புனித அல்-குர்ஆணுக்கும், எமது இறைத் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக ஒரு மதகுரு மிகவும் மோசமாக பேசிக்கொண்டு திரிகின்றார். வரும் வாரங்களில் நாம் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருக்கின்றோம். மதவாதத்தை தூண்டக் கூடிய விதத்தில், ஒரு மதத்தினுடைய இதயத்தைத் தாக்கிப் பேசுகின்ற மதகுருமார்களுக்கு, அவர்கள் யாராக இருந்தாலும் பாரவாயில்லை, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தேர்தல் முறையை மாற்றுங்கள் என அவசரப்படுகின்றார்கள். சிறுபான்மை சமூகத்துடைய எதிர்பார்ப்புக்களை நாசப்படுத்திவிட்டு நீங்கள் எந்தவொரு தேர்தல் முறைமையையும் இந்த நாட்டிலே கொண்டு வந்து விடாதீர்கள். உங்களுடைய தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நாங்களும் தயார். அனைவரும் சிந்தித்து, பேசி, அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கிய பிற்பாடு, நீங்கள் ஒரு நேர்மையான தேர்தல் முறையின் மூலம் பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் உற்பட அனைத்துக்கும் ஒன்றாக மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். எங்களுடைய கருத்துக்களுக்கு மாறாக, இந்த உள்ளூராட்சி முறையிலே இவர்கள் முடிவெடுத்தால் நிச்சயமாக அது இந்த நாட்டிலே இன்னுமொரு அழிவைக் கொண்டு வரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
மேலும், மலையகத் தொழிலாளர்களுக்கு தகுந்த சம்பளத்தை வழங்க வேண்டும் எனவும், மலையகத் தமிழர்களின் நலனுக்காக மலையக மக்களுடனும், மலையக கட்சிகளுடனும் இணைந்து போராட நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
-Cader Munawwar-


0 Comments