சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மழை ருத்ர தாண்டவம் ஆடி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.
இன்னும் சில மாதங்களில் மக்களின் தயவு வேண்டியிருப்பதால் அரசியல் கட்சியினரும் போட்டி போட்டு தண்ணீரில் இறங்கி நடந்து, மக்களின் துயரத்தில் பங்கெடுப்பதாக அறிவித்து நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் பகுதியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு மருத்துவமுகாம்கள் ஏற்பாடு செய்து நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், பால் பாக்கெட்டுகள், போர்வைகள் வழங்கப்பட்டன.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தராஜன் தரமணியில் உணவு, பாய், போர்வை, வாளி வழங்கினார். மேலும் பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சியினர் உணவு வழங்கி வருகிறார்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி கொருக்குப்பேட்டை, திரு.வி.க. நகர் கன்னிகாபுரம் பகுதியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று ஆறுதல் கூறி உணவு, அரிசி, போர்வை, பாய், மழைக் கோட்டு ஆகியவற்றை வழங்கினார். அவருடன் மாவட்ட தலைவர் பி.ஜு.சாக்கோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று கடலூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினர்.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள தருமாபுரத்தில் வெள்ள சேதப் பகுதிகளை வீதி வீதியாக பார்வையிட்டு, வெள்ள சேத பாதிப்புகளை கேட்டறிந்தார். பின்பு அப்பகுதி மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கினார்.
மத்திய சென்னை மாவட்டப்பொறுப்பாளர் ரெட்சன் அம்பிகாபதி இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் கொளத்தூர் தொகுதியில் வெள்ள தேச பகுதிகளை பார்வையிட்டு அரிசி, ரொட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044–24320280 அல்லது 7810878108 ஆகிய இரு எண்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக அலுவலகங்களையும் அந்தந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
பா.ஜ.க. சார்பில் பாதிப்புகளை முழுவதுமாக கண்டறிந்து, சென்று பார்த்து விரிவான அறிக்கை மத்திய தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன். இரண்டு நாட்களில் மத்திய அமைச்சர்கள் வர வாய்ப்பிருக்கிறது என்று தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார்.
மக்களின் துயரத்தில் என்றுமே பங்கெடுத்துக்கொள்ளும் கட்சியாக பா.ஜ.க. விளங்குகிறது என்பதை இந்த நாட்களில் தொண்டு செய்த பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.


0 Comments