பழைய மாணவர்கள் என்பவர்கள் “ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு திரைக்கு பின்னால் மறைந்திருந்து செயற்படும் "மனித முதுகெலும்பு " போன்றவர்கள். அந்த வகையில் ஒரு பாடசாலையின் பெயரை, புகழை, அதன் பெருமையை உள் நாட்டில் மட்டுமன்றி கடல் கடந்தும் பரவச்செய்யும் சக்தி இந்த பழைய மாணவர்களுக்கு உண்டு. இப்படியான ஒரு உறுதியான நிலையில் இருக்கும் பழைய மாணவர்கள் சங்கமே பாடசாலையையும் பாடசாலையின் நலன் விரும்பிகள் மற்றும் பெற்றார்களையும் இணைக்கும் ஒரு பாலமாக தொழிற்பட முடியும்.
“அ” அகரம் கற்று தந்த பள்ளியை சிகரத்தின் உச்சியில் வைக்க, தாம் கற்றுயர்ந்த பாடசாலையோடு தம் வாழ்நாளின் இறுதிவரை பயணிக்க ஏற்படுத்தப்பட்ட உயர்வான அமைப்பே "பழைய மாணவர் அமைப்பு " இப்படியான பெருமைகளுடனும், பெருமிதங்களுடனும் இயங்க வேண்டிய எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பின் தற்கால நிலை கண்டு பலரது நெஞ்சம் கனப்பதும், சிலரது கண்கள் குளமாவதும் அவர்களுக்கும் அந்த இரட்சகனுக்கும் வெளிச்சம்.
எமது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் பற்றி பல கருத்துக்களும், பல கேள்விகள் இருந்தாலும் சில நியாயமான கேள்விகளும் உண்டு. அதாவது
எமது பாடசாலையில் தற்போது பழைய மாணவர் அமைப்பு உள்ளதா ?
இருப்பின் அது உயிரோட்டமாக உள்ளதா ?
அப்படி உயிரோட்டமாக இருப்பின் ,அவர்களின் கடந்த இரண்டு வருடங்களில் அவர்களது
செயற்பாடுகள் மற்றும் அதனால் பாடசாலை அடைந்த நலன்களை வெளிப்படுத்த முடியுமா ?
பாடசாலை அதிபர், நிர்வாகத்தோடு உரிய தொடர்புள்ளதா?
பாடசாலை அதிபர் தான் பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத் தலைவர், இவரது தலைமையில் பழைய மாணவர்கள் சங்க நிர்வாகிகள் எப்போது கூட்டப்பட்டனர்?
பாடசாலையின் ,பழைய மாணவர்களுக்கென்று தனியான அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளதா ?
பழைய மாணவர்கள் சங்கம் சுயமாக இயங்க இடமளிக்கப்படுகிறதா?
பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் இவைகளும் சரியான உறவுகளை பேணுகிறதா?
இந்த கேள்விகள் பலரது மனதில் எழும் நியாயமான கேள்விகள் காரணம் பழைய மாணவர்கள் சங்கம் என்கிற போது “பழைய மாணவர்கள் சங்க மத்திய குழு உறுப்பினர்கள் 12 பேர் அல்லது 15 மாத்திரம் தான் பழைய மாணவர்கள் சங்கம்” என்ற தோரணை. இது மத்திய குழுவில் உள்ளவர்களது பிழை என்று கூறவரவில்லை. இந்த நிலை போக்கப்பட வேண்டும்.
பாடசாலையில் கற்று சமூகத்தில் பல்தரப்பட்ட ஆளுமைகளுடன் வெளியாகிய மாணவர்களின் ஆற்றல்களையும் அறிவையும் பல்துறைசார்ந்த அனுபவங்களையும் - அறிமுகங்களையும் பாடசாலையின் அபிவிருத்தியின் பொருட்டு ஒருங்கிணைக்கும் பணிகைளை பழைய மாணவர்கள் சங்கம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பழைய மாணவர்கள் சங்கம் மூலம் எதிர்பார்த்த இலக்கினை அடைய முடியும்.
இத்தகைய நிலையில் சமகால அல்-அக்ஸாவின் ஓ.பி.ஏ. நோக்கினால்
1. பல்துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்டவர்கள் பொதுக் குழுவில் கூட அங்கத்துவம் பெறுவதில்லை.
2. நிருவாகத்தில் இடம்பிடிப்பவர்களோ கதிரைகளை நிரப்புவதற்கு மட்டும் நிற்கின்றனர். இவர்களின் தராதரம் ஆளுமைகள் வெளியே நிற்பவர்களை விட குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக வெளியுலக தொடர்புகள், நிருவாகத் திறன்கள், திட்டமிடல் - அமுலாக்கம் மற்றும் பல்துறை ஆற்றல்மிக்கோரின் பணிகளை பாடசாலையின் அபிவிருத்திக்காக ஒருங்கிணைக்கும் ஆற்றல் - விவேகம் - வழிவகைகள் பற்றிய தெளிவின்மையுடன் பொறுப்பேற்கின்றனர்.
3. பாடசாலையானது தனக்கு முடியாத ஏதேனும் ஓர் விடயத்தை OBA தலையில் சுமத்தி விடும். OBA அங்கத்தவர்களும் ஓடிக்களைத்து போய் காணாமல் போய் விடுவார்கள். பிறகு ஓ.பி.ஏ ஒழுங்கில்லை என்ற பெயருடன் ஓரிரு வருடங்களை கழிப்பார்கள்.
4. பழைய மாணவர் அமைப்பை பற்றி யாரும் பேசமாட்டார்கள், யாராவது பேசினால் எல்லோரும் பேசுவார்கள். பொதுக்குழு அங்கத்தவர்களுக்கும் மீண்டுமொரு OBA சீசன் வரும் வரை வெற்று விமர்சனத்தில் காலத்தை கழிக்கின்றனர்.
5. பழைய மாணவர் அமைப்பை குறித்து மிகவும் உள தூய்மையாக யாரும் ஈடுபட முற்பட்டால், அவர்களை சந்தேக கண் கொண்டு நோக்கும் இன்னொரு பழைய மாணவர் குழு முளைத்துவிடும்.
6. மாறி மாறி வரும் புதிய நிர்வாகிகள் அனைத்தையும் புதிதாக ஆரம்பித்தலால் பழையவைகளை வீண் பேச்சு பேசி கிடப்பில் போடுதல்.
7. மறைமுக அரசியல் தலையீடு இதனால் ஒரே குழுவாய் செயற்படுவதாக கூறி பல குழுக்கள்.
8. ஆரம்பத்தில் வேக வேகமாக் கூடுவது , கலைவது , அதன் பின் வேகமும் இல்லை விவேகமும் இல்லை. யார் பூனைக்கு மணிகட்டுவது என பார்த்துகொண்டு பார்வையாளராகி விடுவது.
9. தகுதியானவர்கள் முன்வந்து செயற்பட்டால் இவர்களை விமர்சித்தோ அல்லது தனிப்பட்ட மனஸ்தாபங்களை மனதில் வைத்தோ ஓரங்கட்டிவிடல்.
10. பழைய மாணவர் அமைப்பை பாடசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் வேலையாட்கள் போல நடத்துதல்.
இது போன்றவைகளை மறந்து , களைந்து எமது பாடசாலைக்காக ஒன்று கூடி ஒரு திடமான பழைய மாணவர் அமைப்பை மீள் நிர்மாணம் செய்வது காலத்தின் தேவையாகவுள்ளது.
எமது ஊர் கற்பிட்டி, நாம் எமது ஊர் பெருமைபற்றி பேச பல ஆயிரம் பெருமைகள் சொல்லலாம் அனால் எமது பாடசாலையின் பெருமைபற்றி பேசுவதென்றால்? எத்தனை கல்வியாளர்களை , நின்று நீடிக்கும் கல்வியை , மரணம் வரை தொடரும் அறிவியலாளர்களை உருவாக்கியுள்ளோம் , அவர்கள் தாம் கற்ற பாடசாலைக்கு கூட்டாக சேர்ந்து என்ன செய்தனர் என்பதிலியே தங்கியுள்ளது என்பதை நாம் உணராதவரை , கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை என்பது பெயர் பலகையில் மட்டும் தான் இருக்கும்.
பல தூர நோக்குடைய சமூக சிந்தனையாளர்கள், சமூக தலைவர்கள் மற்றும் தனவந்தர்கள் மர்ஹூம்களன M.M. மதார் மரைக்கார் (முன்னைய நாள் கற்பிட்டி கிராம சபை தலைவர்), M.H.M. நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் புத்தளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், நிதி திட்டமிடல் அமைச்சர்), M.M. முஹம்மது இஸ்மாயில் மரைக்கார், S.M. நெய்னா மரைக்கார் (முன்னைய நாள் கற்பிட்டி பட்டின சபை தலைவர), M.M. தம்பி நெய்னா மரைக்கார் (கற்பிட்டியில் வாழ்ந்த மிகப்பெரும் கொடைவள்ளல், அல் அக்ஸா காணி, வைத்தியசாலை காணி, காட்டுபாவா பள்ளிவாசல் காணி, பெரிய பள்ளிவாசல் காணி என்பன இவராலும் இவருடைய முன்னோர்களாலும் நன்கொடையாக வழங்கப்பட்டவையாகும்), U. உமர் ஹத்தாப் மரைக்கார், E.K. காஸிம் மொஹிதீன் மரைக்கார், T.M. சாலி மரைக்கார், ஹமீது மரைக்கார் போன்ற பலரின் அயராத உழைப்பின் பலனாக 1946ல் எமக்கு கிடைத்த பொக்கிஷம் தான் எமது பாடசாலையான இன்றைய அல் அக்ஸா தேசிய பாடசாலை.
எதிர்வரும் 22-11-2015 அன்று 70வதுஅகவையில் காலடி வைக்க இருக்கும் எமது அல் அக்ஸா அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ்விப்பது ஒவ்வொரு மூத்த பிள்ளையின் கடமையல்லவா? அல் அக்ஸா அன்னையின் மூத்த பிள்ளைகளான பழைய மாணவர்கள் எங்கே? இந்தத் தருணத்திலாவது பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு திடமான பழைய மாணவர்கள் சங்கம் உருவாக வித்திடுவார்களா?
இனியும் தாமதித்தால் எதிர்கால பழைய மாணவர்களுக்கு சரியான வழிகாட்டாமல், கண் இருந்தும் குருடர்களாக ஆகிவிடுவோம் என்பது கசப்பானாலும் உண்மை.
-Samsham Shafeek-

0 Comments