தமிழ் நாட்டு அறிஞர் பீ ஸெய்னுலாப்தீனின் இலங்கை வருகை தடுக்கப்பட்டமை மைத்திரி - ரணில் அரசில் பாரிய கறையாகவே வரலாறு பதிவு செய்யும் என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,
பீ ஜே என்பவர் தமிழ் பேசும் முஸ்லிம் உலகில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவர். மூட நம்பிக்கைகளை ஒழித்து ஓரிரைக்கொள்கையின் பால் மக்களை அழைப்பதில் பாரிய வெற்றி கண்டவர். அவரது கருத்துக்களில் 90 சத வீதமானவற்;றை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படியான ஒருவர் இலங்கை வருவதென்பது இலங்கைக்கு பெருமையையே சேர்க்குமே தவிர கலவரத்தை உருவாக்கும் என்பது அதீத கற்பனையாகும். இந்த நிலையில் அவரது வருகையை ஓரிருவரின் கருத்துக்காக அரசாங்கம் தடை செய்தமை ஜனநாயக நல்லாட்சியாக தெரியவில்லை.
இந்த நாட்டில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனாவை பின்னாலிருந்து இயக்கி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி மேற்கொண்ட சக்திகளே இந்த தடையின் பின்னால் இருந்துள்ளன. இவர்களே இலங்கை முஸ்லிம்கள் பற்றியும், தவ்ஹீத்வாதிகள் பற்றியும் தப்பாகவும் பிழையாகவும் பொது பல சேனாவிடம் கூறி அவர்களை முஸ்லிம்களுக்கெதிராக வழி நடாத்தினார்கள். அத்தகைகயவர்களின் கருத்தை மட்டும் அரசு செவிமடுத்து பீ ஜேயின் வருகையை தடுத்தமை கண்டிக்கத்தக்கதாகும்.
இவ்வாறு நடைபெற்றதன் மூலம் கடந்த கால அரசுகளுக்கும் தற்போதைய அரசுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதையே காட்டுகிறது. பீ ஜே வருவதில் பிரச்சினையில்லை என முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் சொல்லியும்; கேளாமை இந்த நாட்டு முஸ்லிம்களை இன்னுமொரு இருண்ட யுகத்துள் செலுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
அதே வேளை பீ ஜேயின் வருகையை தடை செய்தமை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மட்டுமல்ல அனைத்து தவ்ஹீத்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும். இது எதிர் காலத்தில் மிக மோசமான உதாரணங்களை ஏற்படுத்தும். ஆகவே விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு மீள் பரிசீலணை செய்து இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பீ ஜே இலங்கை வந்து செல்ல அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.
இதற்காக தவ்ஹீத்வாதிகளினதும் வாக்குகளை பெற்று அதிகாரத்தை பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் என உலமா கட்சி சொல்லிக்கொள்வதுடன் இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிர் காலத்தில் முகம் கொடுப்பதாயின் தவ்ஹீத்வாதிகள் ஒன்றுபட்டு அரசியல்ரீதியாக எம்மோடு இணைந்து செயற்பட முன்வருவதே ஒரே வழி என்பதையும் உலமா கட்சி வலியுறுத்துகிறது.
0 Comments