Subscribe Us

header ads

வீட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்!



இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். அதை கூட செலுத்தாமல் மிச்சப்படுத்த முடியுமா? முடியும் என்கிறார் சென்னையை சேர்ந்த சஸ்வத் தாஸ். அடிப்படையில் மெரைன் இன்ஜினியரான இவர், 15 வருடங்கள் கடலில் பயணம் செய்தவர். இப்போது மூன்று வருடங்களாக கரையில் தங்கியுள்ளார். கைநிறைய சம்பளம் கிடைத்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுக்க முழுக்க சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். தன் வீட்டு கூரையிலும், மூன்று கிலோவாட் அளவு சோலார் பேனல்களை பொருத்தியுள்ளார். 


‘‘அப்பா, தனியார் நிறுவனத்தில் பெரிய வேலையில் இருக்கிறார். வேலை காரணமாக அவர் பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. எனவே குடும்பமும் அவருக்கு பின்னால் சென்றது. அந்த வகையில் நானும் பல ஊர்களிலும், நாடுகளிலும் தங்கி படித்தேன்.

ஒன்பதாவது படிக்கும்போது சென்னைக்கு வந்தோம். அதன் பின்னர் இங்குதான் வாசம். வேலைக்கு சென்ற பிறகு விடுமுறை நாட்களில் சென்னையில்தான் இருப்பேன். அப்படி ஐந்து வருடங்களுக்கு முன் ஒருமுறை சென்னை வந்தபோது, புதுச்சேரியில் உள்ள என் மாமாவை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. தன் வீட்டு மாடியில் சோலார் பேனல் அமைத்திருந்தார். புதுமையாக இருந்தது. இதேபோல் அனைவரது வீட்டிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். முதல் கட்டமாக என் வீட்டில் அப்படி அமைக்க முயன்றேன். தொடக்கத்தில், விடுமுறை காலங்களில் இப்படி செய்யலாம் என்றுதான் திட்டமிட்டேன். ஆனால், என் வீட்டில் சோலார் பேனல் அமைக்கவே ஒன்றரை மாதம் ஆனது. அப்போதுதான் வேலை நிமித்தமாக கடலுக்கு சென்றுவிட்டால், இதை தொடர முடியாது என்று உரைத்தது. உடனே வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக இதில் ஈடுபட முடிவு செய்தேன். 

எந்த வேலையில் இறங்கினாலும் அது குறித்து ஏ டூ இசட் தெரிந்து கொள்ளாமல் கால் வைக்கக் கூடாது என்பது என் பாலிசி. எனவே சோலார் பேனல் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அறிந்து கொள்ள முயன்றேன். என் மாமாவும் இதற்கு உதவினார். நிறைய புத்தகங்கள் படித்தேன். அடிப்படையில் நான் பொறியாளன் என்பதால், இது குறித்து புரிந்து கொள்வது சுலபமாக இருந்தது. கப்பலில் இருக்கும் போது எண்ணெய் மூலம் மின்சாரத்தை உருவாக்குவோம். அதை கொண்டு பெரிய என்ஜின்களை இயக்குவோம். அதே வேலை அமைப்புதான் சோலார் பேனலிலும். சொல்லப்போனால் அதை விடவும் இதன் தொழில்நுட்ப அமைப்பு முறை மிகவும் எளிது...’’ என்று சொல்லும் சஸ்வத் தாஸ், தொடக்கத்தில் இது குறித்து மக்களுக்கு புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டாராம். 

‘‘சோலார் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றி மக்களுக்கு தெரியவே இல்லை. அதற்காகவே முதலில் என் வீட்டில் மூன்று கிலோ வாட் அமைப்பு கொண்ட பேனல் அமைத்தேன். வீட்டுக்கு வருபவர்களிடம் அதை காண்பித்து விளக்கினேன். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புரிய வைத்தேன். இதற்காகவே குழு ஒன்றை அமைத்தேன். சோலார் பேனலை வீட்டில் அமைப்பது குறித்து மார்க்கெட்டிங் செய்வதுதான் இவர்கள் வேலை. அரசும் சோலார் பேனல் அமைக்க பல வசதிகளும், உதவிகளும் செய்து தருவதால், மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக இதன் ப்ளஸ்ஸை புரிந்து கொள்ள தொடங்கினார்கள். ஆனால், இதற்கான செலவு அவர்களை யோசிக்க வைத்தது. இதற்கிடையே நீலாங்கரையை சேர்ந்தவர் தன் வீட்டில் இதனை பொருத்தினார். அவரை பார்த்து பலரும் தங்கள் வீட்டில் சோலார் பேனல் அமைக்க முன்வந்தனர். தவிர அரசும் இப்படி பேனல் அமைப்பவர்களுக்கு மானியமும் சில வசதிகளும் செய்து தருவதால் மக்களும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர்...’’ என்று சொல்லும் சஸ்வத் தாஸ், இதற்காக நிறுவனம் ஒன்றை தொடங்கி முழு நேர தொழிலாக செய்து வருகிறார். 

‘‘கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் தனியாக நிறுவனம் தொடங்கினோம். பெரிய நிலப்பரப்பில் மெகா சைஸ் பேனல்கள் அமைக்கும் எண்ணம் எல்லாம் எங்களுக்கு கிடையாது. காரணம் ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க 70 சதுர அடி தேவைப்படும். ஆனால், 210 சதுர அடியில் மூன்று கிலோவாட் அமைத்தால் என் வீட்டுக்கு போதும். இதற்கான செலவு கொஞ்சம் அதிகம்தான். நடுத்தர மக்களால் இந்த சுமையை ஏற்க முடியாது. மறுக்கவில்லை.

ஆனால், அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான். முதலில் தங்கள் வீட்டில் உள்ள மின்சார பயன் பாட்டை அவர்கள் கணிசமாக குறைக்க வேண்டும். அதாவது, வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் சாதாரண டியூப் லைட் மற்றும் குண்டு பல்புகளை எல்லாம் எல்.இ.டி பல்புகளாக மாற்ற வேண்டும். இப்போது தொலைக்காட்சியும் எல்.இ.டி.களில் கிடைக்கிறது. இதன் மூலம் கணிசமான அளவில் மின்சாரத்தை குறைக்க முடியும். 

இப்போது பலரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் மாடியில் சோலார் பேனல் அமைத்து அங்கு வசிக்கும் அனைவரும் 
அத்தொகையை பகிர்ந்து கொள்ளலாம். இப்படி செய்தால் மூலதனம் பெரிதாக வராது...’’ என்றவர் சோலார் பேனல்களின் வகைகள் மற்றும் அதன் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கத் தொடங்கினார். ‘‘இது முழுக்க முழுக்க மின்சார கருவி. இதனை நம் வீட்டில் மொட்டை மாடியில் வெயில் வரும் திசையில், அதிக நிழல் இல்லாத இடமாக பார்த்து பொருத்த வேண்டும். இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் டி.சி. மின்சாரமாகும். அதை  நம்முடைய பயன்பாட்டிற்காக ஏ.சி. மின்சாரமாக மாற்ற சிறப்பு இன்வர்டர்கள் உண்டு. அதன் மூலம் நாம் மின்சாரத்தை வீட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 

சோலார் பேனல்கள் மூன்று வகைப்படும். முதல் வகை கிரிட். இதன் மூலம் நமக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக் கொண்டு, மீதம் இருப்பதை மின்வாரியத்துக்கே திருப்பி விடலாம். நாம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்துகிறோம், எவ்வளவு உற்பத்தி செய்து, மின்சார வாரியத்துக்கு கொடுக்கிறோம் என்பதை கணக்கிட சிறப்பு நெட் மீட்டரை பொருத்த வேண்டும். இதன் மூலம் திருப்பி கொடுக்கும் மின்சாரத்தின் அளவை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கணிசமாக நம் மின்சார பயன்பாடு குறையும். அதே சமயம் செலவையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இந்த கிரிட் முறையில் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது. மின்வெட்டு ஏற்பட்டால், சோலார் மின்சாரம் இயங்காது. அதற்காக நாம் வீட்டில் சாதாரண இன்வர்டர்களை பொருத்திக் கொள்ளலாம். இரண்டாவது, ஆப் கிரிட். இதில் மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் மின் வெட்டு ஏற்படும் போது, நாம் சேமித்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

மூன்றாவது, ஹைபிரிட். மேலே குறிப்பிட்ட இரண்டு முறையையும் இதில் பயன்படுத்தலாம். சேமிக்கவும் செய்யலாம் அதே சமயம் அதிகம் பயன்படுத்தாத மின்சாரத்தை மின்வாரியத்துக்கு திருப்பியும் கொடுக்கலாம். கிரிட் முறை நகரவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். காரணம் இங்கு அதிக அளவு மின்வெட்டு ஏற்படுவதில்லை. ஆனால், பிற மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்வெட்டு ஏற்படுவதால், அவர்களுக்கு ஆப் கிரிட் முறைதான் பயனுள்ளதாக இருக்கும். எனவே யாருக்கு என்ன தேவையோ அதன்படி பொருத்தித் தருகிறோம். இதனால் மக்களுக்கோ, பறவைகளுக்கோ அல்லது செடிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கான பாதுகாப்பு முறைகளையும் கையாண்டு வருகிறோம். எர்த் ஷாக் ஏற்படாமல், இடி மின்னல் பாதிப்பு ஏற்படாமல், பறவைகள், அணில்கள் போன்ற ஜீவன்கள் இதன் மேல் அமர்ந்தாலும் அவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதபடி அமைத்துத் தருகிறோம்...’’ என்றவர் இந்த சோலார் பேனல்களுக்கு 35 வருடங்கள் வரை கேரண்டி இருப்பதாக குறிப்பிடுகிறார். 

‘‘தமிழகத்தில்தான் அதிக வெயில் பார்க்க முடியும். இங்கு 330 நாட்கள் வெயில் காலம்தான். சூரிய ஒளி பிரகாசமாக இருக்கும். மழை மற்றும் பனி காலங்களில் இதன் உற்பத்தி குறையுமே தவிர முழுமையாக செயல் இழந்து போகாது. அதிக வெயில் இருக்கும்போது அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகும் என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறான கண்ணோட்டம். நல்ல மின்சாரம் உற்பத்தியாக தட்டவெப்பம் 25 டிகிரி இருந்தால் போதும். இதில் 450 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு குறைவாக இருந்தால் உற்பத்தியாகும் யூனிட் அளவு 320 முதல் 380 வரை மாறுபடுமே தவிர முற்றிலும் நின்று விடாது. இப்போது 22 சோலார் பிளான்ட் அமைத் திருக்கிறோம். சென்னையில் மட்டுமே அந்த வகையில் 17 அமைத்திருக்கிறோம். எங்களுக்கு பெரிய நிலத்தில் மெகா சைஸ் சோலார் பேனல் அமைக்கும் எண்ணம் கிடையாது. அவ்வாறு அமைக்க பெரிய அளவு நிலப்பரப்பு தேவை. பலர் விவசாய நிலங்களை இதற்காக பயன்படுத்துகிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. விவசாயத்தை அழித்து மின் உற்பத்தி செய்யும் எண்ணம் இல்லை. 

அதனால் வீட்டு மொட்டை மாடியில் அமைக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறோம். வருகிற காலத்தில் அனைத்து வீடுகளிலும் சோலார் பேனல்களை பொருத்திவிட்டால், அணுமின் நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்படாது...’’ என்கிறார் சஸ்வத் தாஸ் உறுதியாக.
- ப்ரியா

Post a Comment

0 Comments