Subscribe Us

header ads

பலஸ்தீனப் போராட்ட வரலாறு வித்தியாசமானது. விசித்திரமானது! கொஞ்சம் பாருங்களேன் உள்ளே...

"கத்திக் குத்து தாக்குதல்களால் பாரியளவில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும் அது மிகப் பெரிய உளவியல் தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்துள்ளது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளே இப்போது ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்."
பலஸ்தீனப் போராட்ட வரலாறு வித்தியாசமானது. விசித்திரமானது! 

நிலமெல்லாம் இரத்தம் எனும் பலஸ்தீனப் போராட்ட வரலாறு பற்றிய பிரபலமான நூலின் நிறைவுரையில் பா.ராகவன் இப்படிக் குறிப்பிடுகிறார். '' அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தச் சண்டை இன்னும் தொடர்வது அத்தேசத்திற்கு மிகப்பெரிய அவமானமே''

2015 ஒக்டோபர் மாதம் ஆரம்பித்தது முதல் இதைவிடவும் மிகப் பெரிய அவமானத்தையும் அச்சத்தையும் தன் முதுகில் சுமந்து கொண்டிருக்கிறது இஸ்ரேல். அந்த அவமானத்துக்குக் காரணம் என்ன தெரியுமா?

 'கத்தி'!
இதுவரை காலமும் தற்கொலைக் குண்டுகளுக்காகவும் ஏ.கே. 47 துப்பாக்கிகளுக்காகவும் ரொக்கட்களுக்காகவும் அச்சப்பட்ட இஸ்ரேல் இன்று அச்சப்படுவது எதற்காகத் தெரியுமா? சாதாரண சமையலறைக் கத்திக்காக!

துப்பாக்கிகளையும் குண்டுகளையும் தூக்கி எறிந்துவிட்டு பலஸ்தீன இளைஞர்களும் யுவதிகளும் தமது மண்ணைக் காப்பதற்காக இன்று கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் கத்தி!

ஒக்டோபர் மாதம் ஆரம்பமானது முதல் இதுவரை சுமார் 20 க்கும் மேற்பட்ட கத்திக்குத்து சம்பவங்கள் மேற்குக் கரையிலும் ஜெரூசலத்திலும் பதிவாகியுள்ளன. இவற்றில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 60 பேர் வரை காயமடைந்திருக்கிறார்கள். 

இதற்கு பதிலடியாக 30 பலஸ்தீனர்களின் உயிர்களை துப்பாக்கியால் சுட்டும் வான் வழியாக குண்டு வீசியும் பறித்திருக்கிறது இஸ்ரேல். 
கத்திக் குத்து தாக்குதல்களால் பாரியளவில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்த முடியாவிட்டாலும் அது மிகப் பெரிய உளவியல் தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்துள்ளது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளே இப்போது ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

 அதி சக்தி வாய்த இராணுவ, ஆயுத தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில்  இஸ்ரேல் முன்னணி வகிப்பது உண்மைதான். ஆனால் அதனால் எந்த வித தொழில்நுட்ப உள்ளடக்கமும் இல்லாத கத்தித் தாக்குதல்களை சமாளிக்க முடியாதிருப்பது ஆச்சரியம்தான் என்று இப்போது ஊடகங்களே சுட்டிக்காட்டுகின்றன.

''இது தனிப்பட்ட நபர்களின் மிகக் குறைந்த சக்தி வாய்ந்த, அதே நேரம் தீவிரவாத நோக்கம் கொண்ட ஆயுதம். அவற்றைக் கண்டறிந்து பதில் தாக்குதல் நடத்துவது இயலாத காரியமே'' என முன்னாள் இஸ்ரேலிய புலனாய்வு அதிகாரி கேர்ணல் மிரி எய்சின் தெரிவித்திருக்கிறார்.

'' கத்தியால் குத்தி தாக்குதல் நடத்துவதற்கு எவருக்கும் பயிற்சிகள் தேவையில்லை. கத்தி எல்லோருடைய வீடுகளிலும் இருக்கிறது. அதனால் யார் எப்போது எப்படித் தாக்குதல் நடத்துவார்கள் என்பதைக் கண்டறிவது கடினம்'' என இஸ்ரேலிய உளவியலாளர் ஷவுல் கிமி தெரிவிக்கிறார்.

இப்போது இஸ்ரேலிய ஊடகங்களில் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? இந்தக் கத்திதான். 

கத்தியால் ஒருவர் தாக்குதல் நடத்த வந்தால் அதிலிருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்ள வேண்டும் எனும் பயிற்சிகள் இஸ்ரேலிய தொலைக்காட்சிகள் மூலமாக நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. 

இஸ்ரேலிய தேசிய அவசரப் பிரிவு, கத்திக் குத்துத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? எனும் தலைப்பில் விசேட காணொளிகளை தயாரித்து வெளியிட்டுள்ளது. 

''இஸ்ரேலை நோக்கி ரொக்கட்கள் ஏவப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்தவும் அது பற்றி முன்கூட்டியே அபாய சமிக்ஞையை வெளிப்படுத்தவும் தேவையான தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் கத்திக் குத்துத் தாக்குதல்கள் பற்றி முன்கூட்டி எச்சரிக்க அவர்களிடம் எந்த தொழில்நுட்பமும் இல்லை'' என பலஸ்தீன இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இன்று கத்தித் தாக்குதல்களில் ஈடுபடும் பலஸ்தீன இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களில் பலத்த வரவேற்புக் கிடைத்துள்ளது. 'கத்தியால் ஒரு இன்திபாழா' எனும் தலைப்பில் இப் புதிய போராட்ட உத்தி பற்றி பலரும் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இவர்களை 'கத்தி வீரர்கள்' எனப் பாராட்டியுள்ளார்.

கடந்த வாரம் 19 வயதேயான முஹம்மத் ஹலாபி பழைய ஜெரூசலம் நகரில் இரு இஸ்ரேலியர்களை கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன் இருவரைக் காயப்படுத்தினார். இவரை அவ்விடத்திலேயே இஸ்ரேலிய இராணுவத்தினர் சுட்டுக் கொலை செய்தனர். இவரது ஜனாஸா நல்லடக்கத்தில் ஆயிரக் கணக்கான பலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.

பலஸ்தீனர்களின் இந்தப் புதிய ஆயுதத்தை எதிர்கொள்வதற்காக இப்போது இஸ்ரேலியர்கள் அனைவரும் சொந்தமாக துப்பாக்கிளை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்நாட்டில் ஆயுதங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

''1970 ஆம் ஆண்டு எப்படி ஆயுதங்களை இஸ்ரேலியர்கள் கொள்வனவு செய்தார்களோ அதேபோன்று இப்போதும் ஆயுதங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மக்கள் மத்தியில் இப்படியொரு அச்சம் நிலவியதை நான் இதுவரை கண்டதில்லை'' என அந்நாட்டில் துப்பாக்கிக் கடை வைத்திருக்கும் இப்தாஸ் பென் யஹுதா எனும் யூதர் தெரிவிக்கிறார்.

''கண்ணீர்ப் புகைக் குண்டுகளுக்கான கேள்வி முன்னரை விட 10 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால் நான் ஒருவருக்கு 2 குண்டுகளை மாத்திரமே மட்டுப்படுத்தி விற்க தீர்மானித்துள்ளேன்'' என அவர் மேலும் தெரிவிக்கிறார். 

500 முதல் 1000 டொலர்களை செலவு செய்து ஒவ்வொருவரும் ஆயுதங்களை வாங்குவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆபத்தான பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் தங்கள் சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருப்பதற்கு அந்நாட்டுச் சட்டம் இடமளிக்கிறது. 

8.5 மில்லியன் சனத் தொகை கொண்ட இஸ்ரேலில் 260,000 பேர் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளனர். 

இதேவேளை கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் ஆயுதங்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 10 மடங்கால் அதிகரித்திருப்பதாக இஸ்ரேலிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.

ஜெரூசலம் நகரில் சமையல் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான கத்தி ஒன்று பாரிய தக்காளிப் பழம் ஒன்றை வெட்டுவது போன்று அமைக்கப்பட்டிருந்த விளம்பரத்திலிருந்து அக் கத்தியை நீக்கி விடுமாறு பலரும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

இதையடுத்து தான் அக் கத்தியை அப்புறப்படுத்திவிட்டதாக குறித்த கடையின் சொந்தக்காரர் தெரிவித்திருக்கிறார். 

அதேபோன்று தேவையற்ற விதத்தில் வீதிக்கு வருவதையும் இஸ்ரேலியர்கள் இப்போது தவிர்த்துக் கொண்டுள்ளனர். 

 தலைக்கவசம் அணிந்து கொண்டும் உயிர்ப் பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொண்டுமே இஸ்ரேலியர்கள் இன்று வீடுகளை விட்டு வெளியேறுவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலியர்களை இறைவன் அச்சத்தால் சோதிக்க ஆரம்பித்துவிடடான் என்பதையே இந்த சம்பவங்கள் சுட்டி நிற்கின்றன. 
''கத்தித் தாக்குதல்களால் ஒருபோதும் எங்களைத் தோற்கடிக்க முடியாது'' என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு வெளியில் கூறினாலும், உள்ளூர அவர் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார் என்பதை இஸ்ரேலிய மக்களின் அச்சம் வெளிப்படுத்தி நிற்கிறது.

மூன்றாவது இன்திபாழா ஆரம்பித்துவிட்டதாக பலஸ்தீனர்கள் உத்தியோகப்பற்றற்ற முறையில் அறிவித்துள்ள நிலையில், அங்கு தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்கும் வரையிலும் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டை பலஸ்தீன மண்ணிலிருந்து துடைத்தெறியும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடரத்தான் போகிறது இன்ஷா அல்லாஹ்.!

யா அல்லாஹ்.... பலஸ்தீன மக்களுக்கு வெற்றியைக் கொடுப்பாயாக.!!

பாத்திமா-

Post a Comment

0 Comments