Subscribe Us

header ads

உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

இக்கால மக்களின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவிழந்து இருப்பதால், அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். இப்படி நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களின் பழக்கவழக்கங்கள் தான். ஒவ்வொருவருக்குமே வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். அதற்காக நாம் கெட்ட பழக்கங்களைப் பின்பற்றினால், அப்பிரச்சனைகளுக்கு விடிவு கிடைத்துவிடுமா?
என்ன புரியவில்லையா? பலர் தங்களுக்குள்ள பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு, மன அழுத்தத்திற்கு உள்ளாகி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சரியாக தூங்காமல் இருப்பது என்று இருக்கின்றனர். இப்படி இருந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, அதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டு, நாளடைவில் அது முற்றி சில சமயங்களில் மரணத்தைக் கூட தழுவ நேரலாம்.
எனவே ஒவ்வொருவரும் தங்களின் நோயெதிர்ப்பு சக்தியைப் பாதிக்கும் பழக்கங்களைக் கைவிட வேண்டும். அதற்கு அவைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு தமிழ் போல்ட்ஸ்கை உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அழிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து மாற்றிக் கொள்ளுங்கள்.
காரணி #1
உடல் பருமனால் பலர் கஷ்டப்படுகின்றனர். ஆய்வுகளில் உடல் பருமனுடன் இருப்பவர்களின் உடலில் வெள்ளை இரத்தணுக்களின் உற்பத்தியில் இடையூறு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. எனவே தான் உடல் பருமனுடன் உள்ளவர்கள் அதிக அளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அன்றாடம் உடற்பயிற்சியை செய்து, உடல் பருமனைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.

காரணி #2
உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையினால், உடலில் சீரான இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் பாதிக்கப்படும். எனவே கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து நீண்ட நேரம் வேலைப் பார்ப்பவர்கள், அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

காரணி #3
தூங்கும் போது உடலானது தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ளும். ஆனால் ஒருவர் தினமும் போதிய அளவு தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலின் பழுது பார்க்கும் செயல் குறைந்து, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையிழந்துவிடும். எனவே அன்றாடம் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

காரணி #4
என்ன தான் ஆல்கஹாலை அளவாக பருகுவது ஆரோக்கியம் என்றாலும், அது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு இடையூறு விளைவிக்கும். எனவே ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

காரணி #5
தற்போது ஜங்க் உணவுகள் மற்றும் இனிப்பு நிறைந்த உணவுகள் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. இந்த உணவுகள் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் தான், உங்களுக்கு இந்த உணவுகளின் மூலம் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

காரணி #6
தனிமையில் இருப்பதை ஒவ்வொருவரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தனிமையானது ஒருவரின் மனநிலையை மோசமாக்கி, உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். எனவே எப்போதும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்.

காரணி #7
சில வகையான மருந்துகள் குறிப்பாக ஆன்டி-பயாடிக்ஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி மருந்து மாத்திரைகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக மருத்துவர் பரிந்துரைக்காமல் எந்த ஒரு மாத்திரையையும் எடுக்காதீர்கள்.

காரணி #8
சிகரெட்டுகளில் 4000 கெமிக்கல்கள் உள்ளது. அப்படியெனில் அது எவ்வளவு மோசமாக உங்களின் நோயெதிர்ப்பு மண்டலதைத் தாக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ நினைத்தால், கஷ்டப்பட்டாவது இப்பழக்கத்தைக் கைவிடுங்கள்.

காரணி #9
உங்களின் உடலில் கார்டிசோலின் அளவு அதிகமானால், அது உங்களின் உடல்நலத்தை மோசமாக்கும். நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளானால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும். எனவே மன அழுத்தம் அதிகரிக்காமல், யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு, உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக மன அழுத்தமானது நோயெதிர்ப்பு சக்தியைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே கவனமாக இருங்கள்.

Post a Comment

0 Comments