நம் நாட்டின் தமிழர்களின் விமோசனத்துக்காக
போராடுகின்றோம் என்று ஆயுதப்போரை ஆரம்பித்து போராடி வந்த விடுதலைப்புலிகள் வடகிழக்கில் தமிழர்கள்
மட்டுமே வாழவேண்டும் வேறு சமூகங்களுக்கு
இங்கு வாழ அருகதை இல்லை என்று தப்பான ஒரு முடிவை எடுத்து வடக்கில் பாரம்பரியமாக
வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை இரவோடு இரவாக பிறந்த மண்ணிலிருந்து வேரறுத்து
இவ்வாரத்துடன் இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் வாழ்ந்த சுமார்
ஒரு லட்சம் முஸ்லிம்கள் வடக்குக்கு வெளியே நாட்டின் நாலாபக்கமும் சிதறுண்டனர்
இருப்பினும் பூகோள ரீதியாக தொடர்புபட்டதும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான
புத்தளத்தை நோக்கியே முக்கால்வாசி அகதிகள் ( புதுப்பெயர் ) வந்து சேர்ந்தனர்.
புத்தளத்தில் புகலிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் வெகுவாக காணப்பட்டது.அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
ஓரிரு நாட்களில் சுமார் எண்பதினாயிரம் மக்களை
உள்வாங்கிய புத்தளம் திக்குமுக்காடியது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமென்பார்களே
அதுபோல் தன் சகோதரர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்து புத்தளத்தார்கள் வேதனைப்பட்டனர்.தம்மால்
எவ்வாறெல்லாம் உதவ முடியுமோ அவ்வாறெல்லாம் உதவிசெய்து வந்தோரை வரவேற்று
உபசரித்தார்கள்.
நமது வீட்டுக்கு முன்னறிவிப்பு இல்லாமல்
திடீரெண்டு ஐந்து ஆறு பேர் வந்துவிட்டால் நாம்படும்பாடு எவ்வாறு என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை,ஐந்து மாவட்டங்களில் பரந்து வாழ்ந்த
மக்கள் ஒரே மாவட்டத்தில் அதுவும் ஒரே தொகுதியில் வந்திறங்கிய போது இயல்பாக
ஏற்படும் திண்டாட்டம் எல்லோரிடமும் ஏற்பட்டது,
பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள், நோயாளிகள்,
சிறுவர்கள் எனப்பல்தரப்பட்டோரை பராமரித்து அடிப்படை வசதிகளை செய்வதில்
புத்தளத்தார்கள் பெரும்சிரமத்தை எதிர்நோக்கினர் அச்சிரமத்தைகூட அவர்கள் ஒரு பொருட்டாக கருதாமல் வந்தாரை
கவனிப்பதிலும் அவர்களுக்கு தேவையானதை வழங்குவதிலும் கண்ணும்கருத்துமாக
செயற்பட்டனர்.
தம் சொந்தவீடுகள், தோட்டங்கள், காணிகள், பொதுச்சொத்துக்களான
பள்ளிவாசல்கள் மதரஸாக்கள்,பாடசாலைகள், சனசமூக நிலையங்கள் என அனைத்தையும்
தாரைவார்த்தனர். தரையாலும் கடலாலும் வந்த அகதிகள்எழுவன்குளம் முதல் மதவாக்குளம்
வரையிலும் வன்னிமுந்தல் முதல் முந்தல் வரையிலும் நிரம்பி வழிந்தனர்.
தனவந்தர்களும் கொடைவள்ளல்களும் தமது
குடும்பத்துக்காக சேகரித்து வைத்திருந்த நெல்மூடைகள் , அரிசிமூடைகள் , மாவுமூடைகள்,
மாடுகள், ஆடுகள் போன்றவற்றை எடுத்துவந்து கொடுத்தார்கள். இளைஞர்களும்
பெரியோர்களும் அண்டாக்களையும் கிடாரங்களையும் கொண்டுவந்து சேர்த்தார்கள். சமைக்க
தெரிந்தோரும் ஏனையோரும் வரிந்து கட்டிக்கொண்டு சமைத்தார்கள், பேக்கரிகள் அனைத்தும்
இரவிரவாக இயங்கின. எவ்வித பிரதிஉபகாரமும் எதிர்பாக்காமல் தமது உடன்பிறப்புக்களை
அனுசரித்தார்கள்.
உணவு, உறையுள் பிரச்சனைகளோடு கழிவறை பிரச்சனை
பெரும் பிரச்சனையானது குறிப்பாக பெண்கள் இயற்கையை கழிக்க இரவாகும்வரை காத்திருக்க
நேரிட்டது. இருப்பினும் ஒன்றும் அறியாத சிறார்கள் பாடு கொண்டாட்டம்தான். அகதிகளின்
சமநிலை பேணுவது பெரும் சவலாயிற்று ஒரு சில இடங்களில் அளவுக்கு அதிகமாக அகதிகள்
குவிக்கப்பட்டார்கள் கால்நீட்டி உட்காரகூட இடமில்லாமல் பாடசாலைகள் திணறின.
ஒவ்வொரு புத்தளத்து குடிமகனும் தம்மாலான உதவிகளை
தாராளமாகவே தந்தனர். தமது உறவினர் போல் எம்மை கவனித்தனர்.தமது உணவை, இருப்பிடத்தை,
தோட்டம்துரவுகளை தியாகம் செய்து எமக்களித்தனர்.எவரேனும்எந்த ஒரு பாரபட்சமும் காட்டவில்லை. ஏன் வந்தீர்கள் என
எவரேனும் கேட்கவில்லை.எம்மால் உங்களை பராமரிக்க முடியாது என எவரேனும் கூறவில்லை.
எம்மை திரும்பி செல்லுங்கள் என யாரேனும் கேட்கவில்லை.
இரண்டு, மூன்று தினங்களுக்கு பிறகே அரச
திணைக்களங்கள் கண்களை திறந்தன... வாயைப்பிளந்தன. அரச அதிகாரிகளும்
திக்குமுக்காகிப்போனார்கள். அவர்களாலும் சமாளிக்க முடியாமல் போனது.ஒருசில தொண்டர்
நிறுவனங்களும் உதவி செய்ய முன்வந்ததால் ஒருசில வாரங்களில்தான் நிலைமையை ஒரளவு கட்டுபாட்டுக்குள் கொண்டுவர
முடிந்தது.
பொதுமக்கள்,அரச திணைக்களங்கள், தொண்டுநிறுவனங்கள் இணைந்தே அகதிகளை கவனிக்க தொடங்கினர்.ஓரிரு
மாதங்கள் இவ்வாரே கழிந்தது. நாட்களும் பொழுதுகளும் அகதி வாழ்வின் அவலத்தை
சுமந்தவாறே உருண்டன கூடாரமும் கொட்டகைகளும் பாடசாலை கட்டிடங்களும் பழக்கப்பட
தொடங்கின இனப்பிரச்சனை இன்றோ அல்லது நாளையோ முடிந்துவிடும் என அகதிகள் நம்பினர் தமது
இடப்பெயர்வு தற்காலிகமானதே ஓரிரு மாதங்களில் ஊர் திரும்பி விடலாம் என கனவுகண்டனர்.
புலிகள் மனம்மாறி நம்மை திரும்ப அழைப்பார்கள்.
என்று ஒரு சாராரும் இராணுவம் நமது இடங்களை மீட்பார்கள். என்று இன்னொரு சாராரும்
திடமாக நம்பினார்கள்.இரண்டுமே நடந்தபாடில்லை அகதிகளின் ஆசை நாள் செல்ல செல்ல
நீராசை ஆனது.நாட்கள் வாரங்களாகின.. வாரங்கள் மாதங்களாகின... மாதங்கள் வருடங்களாகின...
வருடங்கள் ஒன்று, இரண்டு, மூன்று என நீளத்தொடங்கின ......................
விருந்தும் மருந்தும் மூன்று வேலை என்பார்களே..
திடீர் விருந்தாளியான நாம் வந்த இடத்தில் தங்க வேண்டிவரும் என நாமும் எதிர்பாகவில்லை விருந்தாளிகள்
நிரந்தரமாகிவிடுவார்கள் என தங்க வைத்து அனுசரித்தவர்களும்
எதிர்பார்க்கவில்லை எவரும் எதிர்பாராமலேயே எல்லாம் நடந்துவிட்டது.
தமக்கென்றிருந்த
குறுகிய வளங்களை புத்தளத்தார்கள் பெருமனதுடன் பங்குபோட்டு ‘எத்தளம் போனாலும்
புத்தளம் போகாதே’ என்ற சொல்வாக்கை ‘புத்தளம் போனால் புகழிடம்
பெறுவாய்’ என்று மாற்றி அமைத்து இன்றுடன்
இருபத்தைந்து ஆண்டுகளாகிவிட்டது வடக்கு முஸ்லிம்கள் கருப்பு ஒக்டோபரின் துயரை
நினைவு கூறும் அதேநேரம் நம்மை வரவேற்று வாழவைத்த உபகார சமூகத்தையும் அச்சமூகத்தின்
தியாகத்தையும் நினைவில் நிறுத்தி பார்ப்பதும் பேசுவதும் எழுதுவதும் காலத்தின்
தேவையாகும் ................
இடம்
பெயர்க்கப்பட்ட அகதி எஸ்.எம். மணாப்தீன் – புத்தளம்


0 Comments