Subscribe Us

header ads

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புதிய திட்டம்

கொழும்பில் தற்போது அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்த்துக்கொள்வதற்காக, விசேட போக்குவரத்து திட்டமொன்றை,  எதிர்வரும் திங்கட்கிழமை (12) காலை 7.30 மணியிலிருந்து காலை 8.45 மணி வரை அறிமுகப்படுத்தவுள்ளதாக, பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்றம் மற்றும் பத்தரமுல்லையிலிருந்து ஸ்ரீ ஜயவர்த்தன வீதி வழியான கொழும்புக்கு வரும் பாதையில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, போக்குவரத்து பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். 

அனைத்து பஸ்களும் வெலிகடை சந்தி வழியாக கோட்டை வீதிக்குள் நுழைவதால், வெலிகடை சந்தியிலிருந்து தேவி பாலிகா வித்தியாலயம் வரையில் வாகன நெரில் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த புதிய திட்டத்தின் பிரகாரம், பத்தரமுல்லையிலிருந்து கொழும்புக்கு வரும் அனைத்து வாகனங்களுடம் ஆயர்வேத சுற்றுவட்டத்தினூடாக, வெலிக்கடை பொலிஸூக்கு எதிர்திசையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜயவர்த்தமபுர வீதியூடாக திருப்பிவிடப்படவுள்ள அதேவேளை, கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பத்தரமுல்லை நோக்கி பொரளையிலிருந்து கோட்டை வீதிக்கு திருப்பிவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நாவல வீதியூடாக பத்தரமுல்லைக்குச் செல்லும் வாகனங்கள், ஸ்ரீ ஜயவர்த்தன வீதியினூடாக சென்று அங்கிருந்து வலது புரம் அமைந்துள்ள சரண வீதிவழியாக சென்று கோட்டை வீதிக்குள் பிரவேசிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, தேவி பாலிகா வித்தியாலத்திலிருந்து ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டம் வரையிலான ஸ்ரீ ஜயவர்த்தனபுர வீதி, ஒரு வழிப்பாதையாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

கொள்ளுப்பிட்டியிலிருந்து வெலிக்கடைக்கு செல்லும் வாகனங்கள், ஹோட்டன் பிளேஸ் சுற்றுவட்டம், நந்தா மோட்டர்ஸ் சந்தி, சுதந்திர சதுக்கம், கிரகரி வீதி மற்றும் கின்சே வீதி ஆகியவற்றை கடந்து வரவேண்டும் என்றும் கிங்சே வீதியிலிருந்து கனத்தை சுற்றுவட்டம், பழைய புல்லர்ஸ் வீதி, தேவி பாலிகா வித்தியாலயம் வரையாக திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் இந்த திட்டத்துக்கான ஒத்திகை, நாளை சனிக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து 11.30 வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியிலிருந்து 8.45 மணிவரையும் நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மேலும் மஹரகமயில் ஏற்பட்டுள்ள வானக போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, அங்கும் புதியதொரு திட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் மஹரகமயிலிருந்து ஹைலெவல் வீதிக்கு வரும் வாகனங்கள் பயணிப்பதற்காக, மஹரகமயில்; புதியதொரு வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர் 

Post a Comment

0 Comments