Subscribe Us

header ads

பரீட்சையில் தோல்வியா? கவலையை விடுங்கள்.. வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!

பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் மன நெருக்கடிக்கு உள்ளாகி, நிம்மதியை இழக்கிற காலகட்டம் இது! பரீட்சை எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

‘நிறைய மதிப்பெண் கிடைக்கும். பெரிய பாடசாலைகளில் தன் குழந்தையை சேர்த்து வெற்றிகரமாக படிக்க வைத்து விடலாம் ’ என்று எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்கள் ஒருவகை. அதனால் அவர்களது பெற்றோரும், உறவினர்களும் கூட அந்த மாணவர் மீது அதிக எதிர்பார்ப்பு சுமையினை ஏற்றி வைத்திருப்பார்கள். தேர்வு முடிவு அவர்கள்  எதிர்பார்ப்பதுபோல் அமையாவிட்டால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகுவார்கள்.

இன்னொரு வகை மாணவர்கள்  மதில்மேல் பூனை போல் வெற்றியா, தோல்வியா என்ற கேள்விக்குறியோடு காத்திருப்பவர்கள். தேர்வு முடிவு வரத் தொடங்கும்போது இவர்கள் தன்னை அறியாமலே பயப்படத் தொடங்குவார்கள். கவலையும், மன உளைச்சலும் இவர்களை உலுக்கும்.

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதபோதும், தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையை அடையும்போதும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும், சமூகத்தை-உறவினர்களை எதிர்கொள்வதை நினைத்து ஏற்படும் கவலையும், அவர்களுக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

'தோல்வியை நாளையே வெற்றியாக மாற்ற முடியும்' என்ற தெளிவோடு தேர்வு முடிவை எதிர்கொள்ளவேண்டும்.

மாணவர்கள் மனநெருக்கடியை அனுபவிக்கும் இந்த கால கட்டத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது.

பெற்றோருக்கு:

 தேர்வு எழுதிய காலத்தில் கொடுத்ததைவிட அதிக முக்கியத்துவத்தை உணர்வு ரீதியாகவும், உணவுரீதியாகவும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

 அவர்களது மனக்குழப்பத்தை அதிகரிக்கும் எந்த செயலிலும் ஈடுபடவேண்டாம்.

 எப்போதும் பாசிடிவ்வாக பேசுங்கள். தோல்வியில் வென்று சாதனை படைத்தவர்களின் வாழ்க்கையை சொல்லுங்கள்.

 தேர்வு முடிவு எப்படியிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள அவர்களை மனோரீதியாக தயார்ப்படுத்துங்கள்.

 மனதுக்கு அமைதியை கொடுத்து நன்றாக தூங்கச் செய்யுங்கள்.

ரிசல்ட் வருவதற்கு முந்தையநாள்:

 உங்கள் இதர வேலைகளை எல்லாம் ஒத்திவைத்துவிட்டு கூடுமானவரை அவர்களை உங்கள் கண்காணிப்பிலே வைத்திருங்கள்.

 மனக் குழப்பத்தையோ, பயத்தையோ ஏற்படுத்தும் உறவினர்கள்- நண்பர்களை சந்திக்காமல் இருக்கட்டும்.
 ‘எதுவந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. நாங்கள் எப்போதும் உனக்கு துணையாக இருப்போம்’ என்று நம்பிக்கையூட்டுங்கள்.

ரிசல்ட்  அன்று:

 கடவுள் நம்பிக்கை இருந்தால் வழிபாட்டு மையத்திற்கு அழைத்து செல்லுங்கள்.

 முடிந்தவரை உங்கள் கண்காணிப்பிலே தேர்வு முடிவை பார்க்கட்டும்.

 முடிவு எப்படி இருந்தாலும் அதை விமர்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 எதிர்பார்த்ததைவிட மதிப்பெண் குறைந்திருந்தாலோ, ஒருவேளை தோல்வி அடைந்திருந்தாலோ உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள்.

 மகிழ்ச்சியான ரிசல்ட் என்றால் எல்லோரிடமும் கூறி சந்தோஷப்படுங்கள்.

 எதிர்மறையான ரிசல்ட் என்றால் யாரிடமும் கூறவேண்டாம். முடிந்த அளவு நண்பர்கள், உறவினர்கள் போன்களை புறக்கணித்துவிட்டு முழு கவனத்தையும் மகன் மீது செலுத்துங்கள்.

தோல்வியை திரும்பிப்பார்க்க வேண்டாம். அதை பற்றி விசாரிக்கவும் வேண்டாம். அடுத்து என்ன செய்வது? என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
எந்த தோல்விக்கு பின்னாலும் மிகப்பெரிய வெற்றி ஒன்று ஒளிந்திருக்கும் என்பதை உணர்த்துங்கள்.

தேர்வு முடிவு எதிர்மறையாக இருந்தால் அவர்களை தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். நல்ல நண்பர்களை சந்திக்கட்டும். தனியாக எங்கேயும் அனுப்ப வேண்டாம்.

 தோல்வி அடைந்தவர்களுக்கு நம்பிக்கைதான் நல்ல மருந்து. அந்த நம்பிக்கை மருந்தை வாய்ப்பேச்சாக மட்டும் வழங்காமல் திட்டமாக தயாரித்து வழங்குங்கள். 
அடுத்து எழுதவேண்டிய பரீட்சை பற்றியும், அதற்கான தயாரெடுப்பு பற்றியும், நம்பிக்கையூட்டும் விதத்தில் அந்த திட்டத்தை தயார் செய்து கொடுங்கள். 
 தேர்வில் தோற்றவர்கள் யாரும் வாழ்க்கையில்    தோற்றதில்லை. தேர்வில் வென்றவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வென்றதும் இல்லை.

‘வாழ்க்கையில் நிறைய தேர்வுகள் வரும். அதில் தோல்வியும், வெற்றியும் மாறிமாறி வருவது இயற்கை. என்ற உண்மையை உணர வைக்க வேண்டும்.

நன்றி
இல்ஹாம் மரைக்காரட
உளவல ஆலோசகர்

Post a Comment

0 Comments