வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி மற்றும் அதன் கிளை நிறுவனமான NJ Exports ஆகியன தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகளை சுவீகரித்தன.
இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 2015 ஆம் ஆண்டிற்கான 23 ஆவது வருடாந்த தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் நிகழ்வில் முறையே பாரிய மற்றும் நடுத்தர பிரிவுகளில் விலையுயர்ந்த மாணிக்க கற்கள் மற்றும் ஆபரணங்கள் பிரிவில் வெள்ளி விருதை வென்றுள்ளன.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வெகு விமரிசையாக இடம்பெற்ற விருதுகள் நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஏ.பீ. ஜெயராஜா அவர்கள் விருதைப் பெற்றுக்கொண்டார்.
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியின் ஒரு கிளை நிறுவனமான NJ Exports இலங்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்வதில் முன்னிலை வகித்து வருகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட NJ Exports நிறுவனம், அதன் தாய்நிறுவனமான வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி காலம்காலமாக ஏற்படுத்திக் கொண்ட ஏற்றுமதிக்கான கேள்வியின் அதிகரிப்பை ஈடுசெய்யும் வகையில் 2010 ஆம் ஆண்டில் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்தது.
ஆபரணங்களை தயாரித்து, விநியோகிப்பதற்கு அப்பால், ஆபரணங்கள் தொடர்பான பல்வேறு சிறப்பு அம்சங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவூட்டி வருகின்ற காரணத்தால் NJ Exports குறுகிய காலத்திற்குள் ஓர் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்துள்ளது.
கணிசமான எண்ணிக்கையில் இலங்கையர்கள் வசித்து வருகின்ற ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பிரதானமான நாடுகளுக்கு ஆபரணத் தயாரிப்புக்களை வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியும், NJ Exports நிறுவனமும் ஏற்றுமதி செய்து வருகின்றன.
NJ Exports நிறுவனம் தன்னகத்தில் கொண்டுள்ள நவீன, விசேடமான ஆபரண தயாரிப்பு தொழில்நுட்பங்களை உபயோகித்து தனது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் மனங்கவரும் வகையில் பிரத்தியேகமான வகையில் வடிவமைத்து வழங்கி வருகின்றது.
NJ Exportsமற்றும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரி ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. ஏ. பீ. ஜெயராஜா அவர்கள் கூறுகையில்,
“இது எமது அணியின் கடின உழைப்பை வெளிப்படுத்தும் சாதனையாகும். தரம், விரைவான விநியோகம் மற்றும் இந்த உற்பத்திகளை வடிவமைத்து, தயாரிக்கும் எமது உள்நாட்டு அணியின் திறமை ஆகியவற்றின் மீது நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றமைக்கு இந்த விருதுகள் மிகச் சிறந்த சான்றாக உள்ளன.
எமது உற்பத்தித் துறையில் நாம் தொடர்ந்தும் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தி, இலங்கையிலும், உலகெங்கிலும் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்குவோம்” என்று குறிப்பிட்டார்.
வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜுவலரியில் 120 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 1978 ஆம் ஆண்டில் 3 ஊழியர்களுடன் தனது தொழிற்பாடுகளை ஆரம்பித்திருந்த நிறுவனம் தங்க, வைர, இரத்தினக்கல் மற்றும் பிளட்டினம் ஆபரணங்கள் மீது கவனம் செலுத்தி, இலங்கை ஆபரணத் துறையில் முன்னிலை வகிக்கும் ஒரு சிறந்த நிறுவனமாக பெருவளர்ச்சி கண்டுள்ளது.
65 இற்கும் மேற்பட்ட ஆபரண தொழில்நுட்ப ஊழியர்களுடன் முற்றுமுழுதான மற்றும் மேம்பட்ட தொழிற்பாட்டைக் கொண்டுள்ள ஆபரண தொழிற்சாலை ஒன்றையும் இந்நிறுவனம் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
இந்நிறுவனமானது நவீன தொழில்நுட்ப முறைகளை தம் உற்பத்திக்காக கையாளும் அதேவேளை, தமது பாரம்பரியம் மாறாது ஆபரண வடிவமைப்பை பேணி வருவதால், தரத்தில் சிறந்தும் மேலும் ஆபரணத்துறையில் ஓர் உயர்ந்த இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.


0 Comments