கனடா நாட்டில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழக உயிரியியல் மருத்துவ பொறியியல் துறையின் பேராசிரியை மிலிக்கா ரேடிசிக் தலைமையில் செயல்பட்ட குழு, உடனடித் தேவையாக இருக்கும் இதய திசுக்களை சுலபமாக வளர்க்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
ஏற்கனவே இதய செல்கள் செயற்கையாக வளர்க்கும் முறை இருந்தாலும், அது உடலில் இருக்கும் செல் அமைப்பை ஒத்துப்போவதோ, வெற்றிகரமாக இருப்பதோ இல்லை. ஆனால், பொறியியல் முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பின்படி, உடலில் இருக்கும் செல் அமைப்பின் நகலாக இருக்கும் ஒரு வலுவான திசு அமைப்பு உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை அளிக்கிறது.
இந்தக் குழு இரு ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக ‘பயோவயர்’ (பட்டு கம்பி) என்னும் அமைப்பை உருவாக்கினர். இதனை வைக்கும் இடத்தைச் சுற்றி இதய செல்களின் நகலை உடனடியாக இது உருவாக்கும்.
முதல் இழை அமைப்பை முதல் கட்ட 1D-ஆக உருவாக்கி, அதன்மீது, அடுத்த கட்டமாக போமாக் எனப்படும் பாலிமரை (POMaC) 2D கட்டமைப்புக்காக தேன்கூட்டை ஒத்திருக்கும் வகையில் உருவாக்கினர். இது சமச்சீரற்ற அமைப்பாக இருக்கும். இதனால், மற்ற செல்கள் இதனோடு இணக்கமாக வாய்ப்பு அதிகம். இத்துடன் T-போன்ற அமைப்பில் உள்ள செல்லை கொக்கியாக பயன்படுத்திக் கொண்டனர்.
இவையனைத்தும் இதய செல்களுடன் ஒருங்கிணைந்து உடனடியாக செயல்பட தொடங்கும். அறுவை சிகிச்சையின்போது அவசரமாக இதய செல்கள் தேவைப்படும்போது இதனை உடனடியாக வளர்த்து, ஆபத்து நேரத்தில் நோயாளிகளைக் காக்க முடியும்.
அதிகமான செல்களை நொடி நேரத்தில் வளர்ப்பத்துடன், மக்கும் தன்மையும் கொண்டிருப்பதால் சில மாத காலங்களில் இது தானாகவே கரைந்து உடலினால் உறிஞ்சப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவ்வித அபாயமும் இல்லாத இது விரைவில் பல உயிர்களைக் காக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments