எதிலும் ஒரு ‘கிக்’ இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு கிக் வேண்டும் என்பதற்காகத்தான் போதைக்கு அடிமையாகிறார்கள். மது மாத்திரமல்ல. போதை தரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை பயன்படுத்த தயங்குவதில்லை.
பிரபல தனியார் நிறுவன தயாரிப்பு பசை பிளாஸ்டிக், கண்ணாடி, நோட்டு புத்தகங்கள் ஒட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்த பசை டியூப் சாதாரணமாக கடைகளில் கிடைக்கிறது. இதை போதை பொருளாக கேரளாவில் மாணவர்கள் பயன்படுத்தியது வலைத்தளங்களில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது அந்த பழக்கம் சென்னையிலும் பள்ளி மாணவர்களிடம் வேகமாக பரவி வருகிறது. பான்பராக், புகையிலை போன்ற போதை பொருட்களை வாங்கினால்தான் சுற்றி நிற்பவர்களும் ஒரு மாதிரி பார்ப்பார்கள். ஆனால் இந்த பசையை நோட்டு ஒட்டுவதற்கு என்று டீசென்டாக சொல்லி வாங்கி செல்கிறார்கள்.
ஒரு ரூபாய் தண்ணீர் பாக்கெட்டையும் வாங்குகிறார்கள். தண்ணீரை குடித்து விட்டு காலி கவர் மீது சிறிதளவு பசையை தடவுகிறார்கள். பின்னர் அந்த கவரை மடித்து கையில் வைத்து நன்றாக கசக்குகிறார்கள்.
பசையில் கலந்து இருக்கும் வேதிப்பொருள் பிளாஸ்டிக் கவருடன் கலந்து ஒருவிதமான நெடியை வெளியிடுகிறது. அந்த நெடியை மூக்கில் வைத்து உறிகிறார்கள். அவ்வளவுதான்... ஒரு குவார்ட்டர் அடித்தது போல் ‘கிக்’ ஏறிவிடுகிறது.
இந்த பழக்கம் பல மாணவர்களிடம் உள்ளது. விளையாட்டு போல் இவர்கள் செய்யும் இந்த விபரீத பழக்கம் உடல் நலத்தை கெடுக்கிறது. அதைப்பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை. பரங்கிமலை, ஆதம்பாக்கம் பகுதிகளில் பல மாணவர்கள் இந்த பழக்கத்துக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் மஞ்சள் பொடி, ஓமம் ஆகியவற்றை துணியில் கட்டி வைத்துக்கொண்டு உள்ளங்கையில் வைத்து தேய்த்து உறிஞ்சுவார்கள். ஜலதோஷம் ஓடிவிடும்.
அந்த மாதிரி நல்ல விஷயங்கள் இந்த காலத்து பிள்ளைகளுக்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் அது பழங்கால பாட்டி வைத்தியம். அதில் என்ன ‘கிக்’ இருக்கிறது? என்று விட்டு விடுகிறார்கள்


0 Comments