குடிகாரர்களாக இருந்தாலும் அவர்கள் குடிமக்கள்தானே என்ற எண்ணத்தில், தம் மக்களைக் காக்க புதிய திட்டத்தை அறிமுகம் செய்த மேயருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள ஈவ்ஷாம் நகர மேயர் ரேண்டி பிரவுன் அவரது பார்வையின் கீழ் இருக்கும் இந்த நகர (குடி)மக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வருவதை தடுக்கும் விதமாக புதுமையான திட்டம் ஒன்றை சமீபத்தில் செயல்படுத்தியிருக்கிறார்.
இப்பகுதியில் பொதுவாக வார இறுதி நாட்களில் மக்கள் குடிப்பது சகஜமே. ஆனால், குடித்த பின்னர் அவர்களே தங்களது வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இதனை முற்றிலும் ஒழிக்க நினைத்த மேயர், குடிப்பழக்கம் இல்லாத ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கொண்டு (குடி)மக்களை அவர்கள் விரும்பும் இங்குள்ள 9 பார்களில் ஒன்றில் இறக்கிவிட்டு, திரும்ப அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். இவ்வகையில் மக்களை இலவசமாகவே அழைத்து வருவதால் மக்களும் இதனை பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இந்த நகரம் சுமார் 45 ஆயிரம் மக்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இதுபோன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால், யாரும் உயிரிழக்கவில்லை. எனினும், மக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு மேயர் இப்படியொரு திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளார்.
இப்பகுதியில் இந்த ஆண்டு தொடங்கியது முதல் போலீசார், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக சுமார் 220 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments