நாடு முழுவதும் இணைய தளங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மிகத் தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ - மாணவிகள் என அனைவரது கைகளிலும் செல்போன்கள் தாராளமாக நடமாடுகிறது. இணைய தள இணைப்புகளை பெறக்கூடிய செல்போன்கள் ஏராளமாக வந்து விட்டன.
கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்களில் இருந்த இணைய தள இணைப்புகள் இப்போது எளிதில் செல்போன்களுக்கும் வந்து விட்டதால் அதை இளைஞர்கள் எந்த வகையில் பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிக்கும் கடமை பெற்றோருக்கு உள்ளது. இணைய தளங்கள் வழியாக ஆபாசம் பரவுகிறது. இதன் மூலம் குற்றச் செயல்கள் நடைபெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இணைய தள சேவை நாடு முழுவதும் தாராளமாக பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. அதை எந்த வகையில் மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.
அரசும் இணைய தள சேவைகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும். இணைய தளங்களை நாம் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே சில சமயம் திடீரென்று அதுவாகவே ஆபாச வீடியோக்கள் ஊடுருவி முகம் சுழிக்க வைக்கிறது. இதை சிறுவர்கள் மாணவ - மாணவிகள் பார்த்தால் என ஆவது? அவர்களது மனம் கெட்டுப் போய் விடும் ஆபத்து உள்ளது. இது போன்ற புகார்களைத் தொடர்ந்து இணைய தள குற்றங்களை தடுப்பதற்காக நிபுணர் குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.
அந்தக் குழு தனது பரிந்துரை அறிக்கையை உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி குழந்தைப் பருவ ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக புதிய அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை மிகத் தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான இணைய தளங்களை முறையாக கண்காணித்து தடை செய்ய வேண்டும்.
அது தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது அவசியம், சமூக வலை தளங்களை கண்காணிக்க அதி நவீன செயல் தேவைப்படுகிறது என்று அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இணைய வழிக்குற்றங்கள் ஆண்டு ஒன்றுக்கு 40 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. குழந்தை பருவ ஆபாச படங்களை கொண்டுள்ள 800 இணைய தளங்களை தடை செய்யுமாறு இணைய தள சேவை நிறுவனங்களுக்கு சமீபத்தில் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே வீடு தோறும் இணைய தள சேவை திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதே போல் மத்திய அரசும் நாடு முழுவதுக்கும் வீடுகள் தோறும் இணைய தள சேவை அதிகரிக்கும் வகையில் ரூ. 72,000 கோடி மதிப்பீட்டில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இன்னும் 2 மாதத்துக்குள் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு இந்த திட்டம் அனுப்பப் படஉள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் நாடு முழுவதும் இணைய தள சேவை இன்னும் தாராளமாக கிடைக்கும். ஆனால் அதற்கு முன் இணைய தளங்களில் ஆபாசத்தை தடுக்க வேண்டிய கடமை அரசுகளுக்கு உண்டு. இதற்கு முன் வரவேண்டும்.


0 Comments