Subscribe Us

header ads

ஒழுக்கமாக வாழ்ந்தால் எய்ட்ஸ் வராது



மருத்துவ முன்னேற்றம் வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது. பல கடும் நோய்களிலிருந்து சமுதாயத்தினை காப்பாற்றியுள்ளது. வாக்சின் தடுப்பு ஊசிகள் மூலம் பல கொடிய பாதிப்புகளிலிருந்து சமுதாயத்தினை காக்கின்றது. அச்சத்தால் உலுக்கிய புற்று நோய்க்கு கூட அநேக தீர்வுகளை மனித சமுதாயம் மருத்துவ முன்னேற்றத்தால் பெற்றுள்ளது. இருப்பினும் இன்று உலகினையே அச்சுறுத்தும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பிற்கு தீர்வு என்ற ஒன்று ஏற்படவில்லை. 

தவிர்ப்பு முறைகளும், பாதிப்புடையோருக்கு வீரியம் கூடாமல் கட்டுப்படுத்தும் முறைகளும் மட்டுமே பல பல ஆராய்சிகளின் விளைவாக ஏற்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு அவருடைய உடல்நலம், நோய் எதிர்ப்பு சக்தி இவற்றை கொண்டே வெளிப்பட காலம் எடுத்துக் கொள்கின்றது.

1981-ல் இருந்தே இதைப் பற்றிய மருத்துவ கவனம் ஆரம்பித்து 1984-ல் எச்.ஐ.வி. வைரஸ் 1, எச்.ஐ.வி. வைரஸ் 2 என பிரிவு படுத்தப்பட்டது. இந்த எச்.ஐ.வி. வைரஸ் உடலை எப்படி தாக்குகின்றது? இந்த வைரஸ் குறிப்பிட்ட வகை வெள்ளை அணுக்களை அழிக்கின்றது. 

இந்த வெள்ளை அணுக்கள் தான் நம் உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை அழிப்பவை. இவையே அழிந்து விட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே போய் விடும். பாதிக்கப்பட்டவரின் உடல் திரவத்தில் இந்த வைரஸ் இருக்கும். ரத்தம், பெண்ணின் பிறப்புறுப்பு, ஆணின் விந்து இவற்றில் அதிகம் இருக்கின்றது. பாதுகாப்பு இல்லாத தவறான நபர்களுடன் ஆன உடல் உறவில் இது எளிதாய் வேகமாய் பரவுகின்றது. அதிலும் முதலிலேயே பால்வினை நோய் தாக்குதல் உடையவர்களை எளிதில் தாக்குகின்றது.

கர்ப்பிணியான எச்ஐவி பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் தாக்குதல்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பாதிப்புடைய பெண்ணின் மாதவிலக்கில் வைரஸ் கிருமிகள் இருக்கும். அந்நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவு ஆணுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். பாதிப்புடையோருடன் ஒரு முறை தொடர்பு ஏற்பட்டாலும் கிருமி பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. காது குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவருக்கு உபயோகித்த ஊசி, கத்தி இவற்றின் மூலம் அடுத்தவருக்கு பரவும் வாய்ப்பு உண்டு. பால்வினை நோய்களுக்கும் தகுந்த சிகிச்சை முறை அவசியம்.

சிகிச்சை :

எச்.ஐ.வி./எய்ட்ஸ் உடையோருக்கும் கூட்டு மருந்து சிகிச்சை அவர்களின் ஆரோக்கியத்தினை கூட்டுகின்றது. இது எச்.ஐ.வி. கிருமிகளின் பெருக்கத்தினை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் சந்தர்ப்பவாத நோய்களின் தாக்கம் குறைகின்றது. நமது ரத்தத்தில் சிடி4 எனப்படும் வெள்ளை அணுக்கள் குறையாமல் இருக்க ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு சிகிச்சை மிகவும் உதவுகின்றது. 

பொதுவில் சிகிச்சை பெறுமுன் : 

* முறையான ரத்த பரிசோதனை

* கல்லீரல் பரிசோதனை

* காச நோய் பரிசோதனை

* புற்று நோய் பரிசோதனை

* கர்ப்ப பரிசோதனை

* வெள்ளை அணுக்கள் பரிசோதனை போன்றவை செய்யப்படும். 

சிகிச்சையின் முன்னேற்றமாக  : 

* எடை கூடும்

* வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை கூடும்

* சோர்வின்றி வேலை செய்வர்

* சந்தர்ப்ப வாத நோய்கள் வெகுவாய் குறையும்

* உடல் நிலை முன்னேற்றமடையும்.

ஏ.ஆர்.டி. சிகிச்சையினை தொடர்ந்து பெறுவதே முறையானது. 

நம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இதற்கான சிகிச்சையினை பெற முடியும். எச்.ஐ.வி./எய்ட்ஸ் பற்றி சில தேவையில்லாத பயங்களை தவிர்க்க வேண்டும். எச்.ஐ.வி. பாதிப்புடையோரை தொற்று நோயாளி போல் ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமே கிடையாது. பாதிப்புடைய குழந்தைகளோடு மற்ற குழந்தைகள் தாராளமாய் விளையாடலாம். பக்கத்தில் அமரலாம். கை குலுக்கலாம். 

அவர்களுடைய கழிவறைகள் மற்றும் அவர்களுக்கு தும்மல், இருமல் இருந்தாலும், அவர்களுடன் அருகில் அமர்ந்து பேசுவது போன்றவற்றால் எய்ட்ஸ் பரவாது. கொசுக் கடி, மூட்டை பூச்சி, கடிகளின் மூலம் எச்.ஐ.வி. பரவாது. எனவே அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியமில்லை.

திருமணத்திற்கு முன் உடல் உறவு என்பதனை அவசியம் தவிர்க்க வேண்டும். இது மனநலம், உடல் நலம் இரண்டிற்கும் நல்லது. பாதுகாப்பு உறைகளை முறையாய் பயன்படுத்த வேண்டும். 

ரத்தம் செலுத்தப்படும் பொழுது அது தரமான முறையில் பரிசோதிக்கப்பட்டுள்ளதா என்பதனை கேட்டறிய வேண்டும். புது ஊசிகளை பயன்படுத்துவதே நல்லது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தாய் முறையான மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இதனால் குழந்தைக்கு இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். தலைமுடி, ஷேவ் இவைகளுக்கு உபயோகப் படுத்தப்படும் பிளேடுகள் புதிதாக இருப்பது நல்லது.

பாதிப்புடையோர் ஆரம்ப காலத்தில் பார்ப்பதற்கு எல்லோரையும் போல் சாதாரணமாகவே இருப்பார்கள். 

எந்த வித அறிகுறி இல்லாமல் இருப்பதால் கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.

பொதுவில் சில பாதுகாப்பு முறைகளை அனைவருமே பின்பற்ற வேண்டும். ரத்த கசிவு துடைப்பது. நோயாளிகளுடன் இருத்தல் ஆகிய நேரங்களில் கையுறை அணிந்து கொள்ளுங்கள். ஏப்ரன் எனப்படும் மேல் ஆடை அணியுங்கள். கைகளை உடனே நன்கு சுத்தம் செய்யுங்கள். 

கையுறையை கழற்றிய பிறகும் கையை நன்கு சுத்தம் செய்யுங்கள். திரவ சோப் சிறந்தது. குழாயில் கொட்டும் நீரில் 30 வினாடிகள் சோப் தேய்த்து நன்கு கழுவுங்கள். உங்கள் கையில் ஏதேனும் சிறு காயம் இருந்தால் அதனை தண்ணீர் புகாத பிளாஸ்டர் கொண்டு நன்கு மூடி பின்னர் பிறருக்கு உதவுங்கள். கத்தி, கத்திரி கோல் இவற்றினை கையிலிருந்து எடுத்து அடுத்தவர் கையில் கொடுக்காதீர்கள். மேஜை மீது வையுங்கள்.

எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டவர் பல வருடங்கள் கூட எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படாது இருக்கலாம். 

ஆனால் அவர் மூலம் அது பிறகுக்கு பரவும் அபாயம் உண்டு. பாதிப்பு ஏற்பட்டு 2-4 வாரங்களில் ஜூரம், தலைவலி, நெறி கட்டி இருத்தல் இருக்கலாம். மிக சிறிய அளவில் இருப்பதால் அதனை உடனடியாக அறிய முடியாது. இதனால் இந்த கிருமியினை தாக்கும் வெள்ளை அணுக்களும் 80-90 சதவீதம் சரியாகி விடுவதால் முதலில் இதனை அறிய முடியாது பின்னர் பாதிப்புடையவர் பல வருடங்கள் அறிகுறிகள் இல்லாது இருக்கலாம். பாதிப்புடன் பிறந்த குழந்தைகளுக்கு 2 வருடங்களில் அறிகுறிகள் தெரிய வரலாம். பல நோய்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாகவே தாக்குகின்றன. எய்ட்ஸ் நோய் பாதிப்பின் அறிகுறிகளாக இரண்டு பெரிய அறிகுறிகளும் ஒரு சிறிய அறிகுறியுமாவது காட்டும்.

சிறிய அறிகுறிகள்: :

* தொடர் இருமல் ஒரு மாதத்திற்கும் மேல்

* ஜூரம்

* சீல் வடிதல்

* சதைகளில் வலி

* தொண்டை கட்டு

* உடல் அரிப்பு

* அடிக்கடி ஹெர்பஸ் வைரஸ் தாக்குதல்

* நெறிகட்டுதல் - கழுத்து, கை மடிப்பு, தொடை மடிப்பு

* உடலில் சிகப்பு திட்டுகள்

* தொடர் சோர்வு

* எடை குறைவு

* அடிக்கடி வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு,

சில காலத்திற்குப்பிறகு ஏற்படும் 

அறிகுறிகள் : 

* தொடர் இருமல்

* உடலில் சிகப்பு, பழுப்பு, பிங்க் நிற புள்ளிகள்

* நிமோனியா பாதிப்பு

* வாயைச் சுற்றி நாக்கு இவற்றில் பாதிப்பு

* நகங்களில் பூஞ்சை பாதிப்பு ஏற்படலாம்

* குறைந்து கொண்டே போகும் எடை

* மறதி, கவனம் செலுத்த இயலாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எச்.ஐ.வி./எய்ட்ஸ் முற்றிய நிலையில் ஏற்படும் அறிகுறிகள் :

* கண் பார்வை சரியின்மை

* நிற்காத வயிற்றுப் போக்கு

* வறண்ட இருமல்

* அதிகமில்லாத தொடர் ஜூரம்

* இரவில் வியர்த்தல்

* மூச்சு வாங்குதல்

* தொடர்ந்து நெறி கட்டி இருத்தல்

டி.பி. நோய் பாதிப்பு எச்.ஐ.வி. பாதிப்புடையோருக்கு எளிதில் தாக்கும். நுரையீரல் மட்டுமின்றி உடலின் பல பாகங்களிலும் டி.பி. தாக்குதல் ஏற்படலாம். எச்.ஐ.வி. பாதிப்பினை அறிய ரத்த பரிசோதனை செய்யப்படுகின்றது. 

பாதிப்பின் நிலையினை அறிய தொடர்பு ஏற்பட்ட 6 வாரங்கள் வரை ஆகலாம். எச்.ஐ.வி. வைரசின் அளவினைப் பொறுத்து சிகிச்சையும் மாறுபடும். சிகிச்சை தீர்வினைத் தராது. பாதிப்பினை கட்டுப் பாட்டில் வைக்கும். பாதிப்புடையோருக்கு சத்தான புரத உணவுகளும், வைட்டமின் சத்துக்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

 எய்ட்சை தவிர்ப்பதே சிறந்த வழி என்பதால் ஒழுக்கமான வாழ்க்கையினை வாழ பழகிக்கொள்ள வேண்டும். பாதிப்புகளிலிருந்து சமுதாயம் பிழைக்க வேண்டும் என்பதால் ஆணுறை சிபாரிசு செய்யப்படுகின்றது. 

இதனை சமுதாயம் தவறான பாதையில் செல்ல எளிதில் உபயோகப்படுத்தக் கூடும் என்ற கவலை மருத்துவ உலகில் இல்லாமல் இல்லை.

தவிர்ப்பது சிறந்த வழி என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மிக அவசியம்.

எச்.ஐ.வி. பரிசோதனை செய்து அதில் அந்த கிருமி இருந்தால் வைரஸ் கிருமி உடலில் உள்ளது என்றே அர்த்தம். இக்கிருமிதான் எய்ட்ஸ் நோய் பாதிப்பினை உருவாக்குகின்றது. சிடி4 எனும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வெகுவாய் குறையும் பொழுது எய்ட்ஸ் தாக்குதல் ஏற்படும். 

நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சந்தர்ப்பவாத நோய்களின் தாக்குதல் ஏற்படும். எனவே சிடி4 அணுக்கள் நல்ல நிலையில் உள்ளவை என்பதை சோதிக்க வேண்டும். ரத்தத்தில் சிடி4ஐ தாக்காத எச்.ஐ.வி. கிருமிகளின் எண்ணிக்கையினை பரிசோதிக்க வேண்டும். இதன் பிறகே ஏ.ஆர்.டி. மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இச்சிகிச்சையினால் பாதிக்கப்பட்டவரின் வாழ்நாள் கூடுகின்றது. மற்றவர்களை சார்ந்து வாழும் நிலை மாறுகின்றது. வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை கூடுகின்றது. 

எச்.ஐ.வி. கிருமிகளின் எண்ணிக்கையினை கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடிகின்றது. நோய் எதிர்ப்பு மண்டலம் கிருமிகளின் தாக்குதலால் பலவீனப்படுவது தவிர்க்கப்படும்.

முறைப்படி மருந்தும், சத்தான உணவு, சுத்தமான நீர், சுத்தமான சுற்றுப்புறம், யோகா, உடற்பயிற்சி, நல்ல குடும்பம், நல்ல நட்பு போன்றவை பாதிக்கப்பட்டவரை வெகுவாய் முன்னேற்றும். போதை மருந்து, மது, புகை, புகையிலை இவை அடியோடு நீக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மனநலம் குறைந்தவர்கள். 

இவர்களுக்கு குடும்பத்தின் அரவணைப்பும் சமுதாயத்தின் பரிவும் தேவை.

ஆயுர்வேத ஆய்வுகளில் வேப்பிலைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த ஆய்வு மேலும் நிரூபிக்கப்பட வேண்டிய படிகளில் இருக்கின்றது. இனி வளரும் சமுதாயம் இத்தகு பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக உயர் பள்ளி மாணவ சமுதாயத்திற்கு கல்வியாகவே சொல்லப்படுகின்றது. இவற்றினை அறிந்து கடை பிடித்து ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்.

Post a Comment

0 Comments