=> அவசரத் தேவைக்கு பண உதவி செய்தவர்களுக்கு, அதே அவசரத்துடன் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதுதான் மரியாதை.
=> நமக்குத் தேவைப்படாத சமயங்களில் சிலர் உதவி என்ற பெயரில் எதையாவது நம்மிடம் திணிப்பதும் ஒருவகை வன்முறைதான்.
=> பலர் மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதற்குக் காரணம், எங்கே அவர்கள் தன்னிடம் உதவியைப் பெற்று தனக்குச் சமமாகவோ அல்லது தன்னைவிட உயரமாகவோ வாழ்வில் முன்னேறிவிடுவார்களோ என்ற பயம்தான்.
=> அவசரமாக உதவி செய்யும்போதும், அது அரைகுறை உதவியாக இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
=> ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் மனதார செய்ய வேண்டும். அவர் இதற்குமுன்பு நமக்கு உதவி செய்திருக்கிறாரா அல்லது எதிர்காலத்தில் இதேபோல நமக்கும் உதவி செய்வாரா என்றெல்லாம் வியாபார ரீதியாக எல்லாம் யோசிப்பது நியாயமில்லை.
=> அடுத்தவரிடம் தானே சென்று நேரடியாக உதவி கேட்பது கௌரவக் குறைச்சல் என்று, தங்களின் குழந்தைகளை அனுப்பி உதவி பெறும் முட்டாள்தனத்தை செய்யும் பெற்றோர் இன்றும் நிறைய பேர் உண்டு.
=> நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்கினால் நிம்மதி போகும். இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்தால் நிம்மதி தங்கும். இல்லாதவருக்கு உதவினால் நிம்மதி கூடும்.
=> எதிரிகிட்டகூட உதவி கேட்கலாம். ஆனால் உதவி செய்துட்டு அதை அடிக்கடி சொல்லிக் காட்டுபவர்களிடம் மட்டும் உதவி கேட்கவே கூடாது.
=> நம்மிடம் ஒருவர், "எப்ப வேணாலும் என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க" என்று சொல்வதை காரணமாகக் கொண்டு அவர்களிடம் அடிக்கடி உதவி கேட்டு தர்மசங்கடப்படுத்திவிடக்கூடாது.
=> நாம் இரக்கப்பட்டு ஒருவருக்கு உதவி செய்து, அந்த உதவியைப் பெற்ற நபரால் நமக்கு ஏதாவது பாதிப்பு வரும்போது நாம் எதிர்கொள்ளும் கேள்வி "உன்னை யாரு உதவி செய்யச் சொன்னா?" என்பதுதான். அந்த நபரிடம் யாரும் "இப்படி உதவி செஞ்சவங்களுக்கே துரோகம் செய்யலாமா?" என்று கேட்பதில்லை. இதைவிடக் கொடுமை என்னவெனில், நம்மிடம் உதவி பெற்ற நபரே "உன்னை யாரு செய்யச் சொன்னா?" என்று கேட்பதுதான்.
=> நாம் கேட்பதற்கு இயலாமையால் 'தெரியாது' 'முடியாது' என்று பதில் சொல்பவர்களுக்கு நன்றி சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு இருக்கும்? உதவி செய்தவர்களையே 'என்னத்த பெருசா செஞ்சுட்டே' என்று ஏளனம் பேசும் பழக்கம் மட்டும் பலருக்கு இருக்கிறது.
=> பாசத்தினால் உதவி செய்தவருக்கு ஒரு சிறு பொருளை பரிசாகக் கொடுத்துவிட்டு, கணக்கை நேர் செய்துவிட்டதாக நினைப்பது மிகப்பெரிய அறியாமை.
=> தனக்கு ஏற்கனவே சிலமுறை உதவி செய்தவர்களிடம் தான் பெற்ற உதவிகளை மறந்து, திரும்ப உதவி கேட்கும்போது, அவர்கள் முன்பு செய்த உதவிகளை சுட்டிக்காட்டுவது, குத்திக்காட்டுவது ஆகாது.
=> கேட்கும்போதெல்லாம் உதவி செய்தால், அந்த உதவிக்கு மதிப்பு இல்லை. கேட்கும்போது உதவி செய்யாவிட்டால் அந்த உறவுக்கு மதிப்பு இல்லை.
=> ஒருவர் உதவி கேட்டால் அவருக்கு உதவி செய்யாமல், தன்னிடம் உதவி கேட்ட காரணத்தினாலேயே அவரைத் தன்னைவிட தாழ்ந்தவராக நினைப்பது மோசமான அறியாமை.
=> அவசியமான நேரத்தில் உதவி தேவைப்படும்போது, மற்றவர்களிடம் கேட்க கூச்சப்படுவதைவிட மோசமான பழக்கம், தன்னால் செய்ய முடிகிற சின்ன விஷயத்துக்குக்கூட கூச்சமே இல்லாம மத்தவங்ககிட்ட உதவி கேட்பதுதான்.
=> சில நல்ல எண்ணம் கொண்டவர்கள், இயலாதர்வர்களுக்கு தான் செய்த உதவியைப் பற்றி நண்பர்களிடம் சொல்வது, அவர்களும் அதுபோல உதவி செய்ய முன்வர வேண்டும் என்பதற்குத்தானே தவிர அவர்களிடம் பாராட்டை வாங்குவதற்காக அல்ல.
=> நம்மிடம் உதவியைப் பெற்றவரின் புகழ்ச்சிக்கும், நம்மிடம் உதவியை எதிர்பார்ப்பவரின் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது.
=> யாருக்கும் உதவி செய்யாதது மட்டுமல்ல, ஒருத்தருக்கே தொடர்ந்து உதவி செய்யுறதும் குற்ற உணர்ச்சியைக் கொடுக்கும்.
=> ஒருவருக்கு நாம் செய்யும் உதவி, அவரை சோம்பேறியாகவோ அலட்சியவாதியாகவோ மாற்றிவிடாமல் இருப்பதும் முக்கியம்.
=> திடீர் சலுகைகளும், திடீர் உதவிகளும் பல சந்தேகங்களை எழுப்புவதை தவிர்க்கமுடிவதில்லை.
0 Comments