Subscribe Us

header ads

இறந்தும் வாழ வைக்கும் புகைப்படங்கள் !

யிரம் வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாத விஷயத்தை ஒரு புகைப்படம் விளங்க வைத்து விடும் என்று சொல்வார்கள். கட்டுரைகள் செய்ய முடியாத விஷயத்தை, ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்தி விடுமென்பதால் சர்வதேச நாளேடுகள், புகைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பது உண்டு.
அந்த வகையில், வியட்நாம் போரின் போது அமெரிக்கப்படைகள் நடத்திய வெடி குண்டு தாக்குதலுக்கு பயந்து குழந்தைகள் ஓடி வருவது போன்ற படம் உலகை முதன் முதலாக உலுக்கி போட்டது. வியட்நாமில் ட்ராங் பாங் என்ற இடத்தில், 11 வயது சிறுமி நிர்வாணமாக ஓடி வரும் படத்தை, 1972ஆம் ஆண்டு ஜுன் 8ஆம் தேதி ஏ.பி. புகைப்பட கலைஞர் நிக்வுட் பதிவு செய்திருந்தார். 

முதலில் இந்த படத்தை பிரசுரிக்க 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் குழு மிகவும் யோசித்தது. அந்த படத்தில் சிறுமி ஒருவர்  நிர்வாணமாக ஓடி வந்ததுதான் அவர்களின் தயக்கத்துக்கு காரணம்.  பின்னர் போரின் கொடூரத்தை மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு, இந்த புகைப்படத்தை முன்பக்கத்தில் வெளியிட்டனர்.

அடுத்த நாள் அமெரிக்காவே கொதித்து எழுந்து விட்டது. உடனடியாக வியட்நாமில் அமெரிக்கா போரை நிறுத்த வேண்டுமென அமெரிக்க மக்களே போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. பல நெருக்கடிக்கிடையே இருந்த அமெரிக்க அரசு, தங்கள் நாட்டு மக்களே போராட்டத்தில் குதித்ததும்தான் வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தது யோசிக்கத் தொடங்கியது. உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த படம், பின்னர் சிறந்த புகைப்படத்திற்காக வழங்கப்படும் 'புலிட்சர் 'விருதினை வென்றது.

அந்த வகையில் பசியின் கொடுமையை விளக்கும் வகையில் சூடானில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உலகை உலுக்கியது. உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த சூடான் நாட்டில், பட்டினியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டிருந்தனர். அங்கு ஐ.நா. சார்பில் ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வந்தது. 

அப்படி நிவாரண முகாமுக்கு சென்று கொண்டிருந்த உடல் மெலிந்து நடக்கவே முடியாத, 15 வயது சிறுமி ஒருவர், இறக்கும் தருவாயில் மண்ணில் கிடப்பது போலவும், அவரது உடலை கொத்தி தின்ன கழுகு ஒன்று காத்திருப்பது போலவும் ஒரு படத்தை,  கெவின் கார்ட்டர் என்ற தென்ஆப்ரிக்க போட்டோகிராபர் பதிவு செய்திருந்தார். படத்தை எடுத்த கெவின் கார்ட்டர், அந்த சிறுமி நிவாரண முகாமுக்கு சென்று விடுவார் என கருதி, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். 

படம் எடுத்த அடுத்த நாள், அதாவது 1993ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி இந்த படம், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் முன்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழின் தலைமையகத்துக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்தன. அந்த சிறுமி நிவாரண முகாமுக்கு சென்று விட்டாரா? இப்போது எப்படியிருக்கிறார்? என்று பொதுமக்கள் கேள்வி மேல் கேள்விகளால் துளைத்தனர். ஆனால் படத்தை எடுத்த கெவின் கார்ட்டருக்கு அந்த சிறுமி போய் சேர்ந்தாரா? இல்லையா? என்று தெரியவில்லை. 

இதனால் பத்திரிகை நிறுவனத்துக்கும் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. இந்த படமும் 1994ஆம் ஆண்டு 'புலிட்சர் ' விருதை வென்றது. ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் அதே ஆண்டில், தனது 33 வது வயதில் அதிக மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் இந்த புகைப்படத்தை எடுத்ததுதான்.

அதேபோல்தான் தற்போது அய்லான் புகைப்படமும் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கது. கடற்கரை ஓரத்தில் அய்லான் இறந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை பதிவு செய்தது ஒரு பெண் புகைப்படக் கலைஞர். துருக்கியின் 'டோகன்' செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலுபர் டெமிர் என்பவர்தான் அய்லான் புகைப்படத்தை எடுத்துள்ளார். 

இது குறித்து டெமிர் கூறுகையில், '' கடந்த புதனன்று துருக்கியின் 'போட்ரம்' கடற்கரை அருகே இரண்டு படகுகள் கவிழ்ந்ததாக செய்தி கிடைத்தது. உடனடியாக அங்கு சென்றேன். கடற்கரையில் தலைகுப்புற கிடந்த குழந்தையின் நிலை என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது. அவனின் கடைசி அழுகுரலை உலகம் கேட்க வேண்டும். நான் அந்த இடத்தில் சிந்திய கண்ணீர்தான் இன்று ஆறாக ஓடுகிறது'' என்றார். 

Post a Comment

0 Comments