செப்டம்பர் 16ம் திகதி தனது உயிரினை பணயம் வைத்து இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி பெற்றுக் கொடுத்த அரசியல் சாணக்கியன் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் வருடாந்த நினைவு தினமாகும்.சில வரலாறுகளினை நினைவூட்டுவது சமூகத்தின் சில பல எழுச்சிக்கு வித்திடும்.இவ்வாறு நினைவூட்டப்பட வேண்டிய வரலாறுகளில் ஒன்றே மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் வரலாறாகும்.அவர் வாழ்ந்த காலத்தில் அவரினை எதிர்த்தவர்கள் கூட தற்போது அவரின் நாமத்தினை உபயோகித்து வாக்குக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.அஷ்ரப ் மரணத்தினைச் சுவைத்ததன் பிற்பாடு காலத்திற்கு காலம் வகை வகையான கோடாரிகளுடன் பல எதிரிகள் இம் மரத்தினை வீழ்த்த வந்த போதும் இன்று மு.கா தனது இருப்பினை தக்க வைத்துக் கொள்ள கொண்டுள்ளது என்றால் அது மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மீது முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள அன்பே பிரதான காரணம் என்றாலும் மிகையாகாது.15 வருடங்கள் கடந்தும் பாசத்தோடு இன்றும் கண்ணீர் சிந்தும் உள்ளங்கள் இருப்பது இவரின் தியாகத்தின் அறிந்து கொள்ள போதுமானதாகும்.
இவரின் நினைவு தினத்தினையொட்டி பல நினைவூட்டல் நிகழ்வுகள் நடாத்தப்பட்டதனை அறியக் கூடியதாக இருந்தது.இருந்த போதிலும் அவரின் நினைவூட்டல் நிகழ்வுகள் இம் முறை அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டத்துடன் அதன் வீச்செல்லை சுருங்கி விட்டமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.இவ்வாறு நடாத்தப்பட்ட நிகழ்வுகள் கூட ஒரு உயிரோட்டம் மிகுந்ததாய் காணப்படவில்லை என்பது அஷ்ரபின் மீது உண்மைப் பற்றுக் கொண்டவர்களினதும்,அஷ்ரபின் வராலாறுகளினை அசை போடச் சென்றவர்களினது குற்றச் மிகப் பெரிய குற்றச் சாட்டாகும்.இவ்வாறு நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் “மு.கா மர்ஹூம் அஷ்ராபினால் உருவாக்கப்பட்ட கட்சி அதனை நாம் பாதுகாக்க வேண்டும்” என்ற வகையில் மு.காவின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கருத்துகளே முன் வைக்கப்பட்டன.அஷ்ரபின் மரத்திலிருந்து கனி சுவைக்க ஆசைப்படும் இவர்கள் அக் கனியினை கருக்கொள்ளச் செய்ய அவர் செய்த தியாகங்களினை நினைவூட்ட மறந்து விட்டார்கள்.
இந்த நிகழ்வுகள் மு.காவினால் நன்கு திட்டமிடப்பட்டு பிரமாண்டமான முறையில் நடாத்தப்பட்டிருக்க வேண்டும்.எனினும்,மு.கா தலைவர் கடந்த முறையும் இதே தினத்தில் இலண்டன் சென்றிருந்தார்.இம் முறையும் இலண்டன் சென்றிருந்தார்.மு.கா தலைமைக்கே இது பற்றிய கரிசனை இல்லாத போது மற்றவர்களுக்கு எங்கிருந்து கரிசனை வரப் போகிறது? ஆனால்,மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உயிரோடு இருந்த போது அவரினை ஆதரிக்காது எதிர்த்துச் செயல்பட்ட அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியூர்தீன் மர்ஹூம் அஷ்ரபினை நினைவு கூறுமுகமாக அஷ்ரபின் நாமத்தில் மாணவர்களுக்கான ஒரு புலமைப் பரிசிலினை அறிமுகம் செய்துள்ளார்.இவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் தானே முன் நின்று அவர் இதனை அறிமுகம் செய்திருப்பதனை வேறு வார்த்தை சொல்லாது வர வேற்கவும்,வாழ்த்தவுமே வேண்டும்.
சிலர் இதனை ஒரு இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடாக சித்தரிக்க விளையலாம்.இங்கே நாம் கத்தம்,பாத்திகா பற்றி கதைக்கவில்லை.ஒரு சாதனையாளரின் சாதனைகளினை இளையோருக்கு நினைவூட்டி அவர்களுக்கும் அரசியல் ஆகாரமூட்டவே கூறுகிறோம்.வரலாறுகளினை நினைவூட்டுவது பயன் தரக் கூடியதே என்பதை முஸ்லிம்கள் ஏற்பார்கள் என நம்புகிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் (akmhqhaq@gmail.com)
சம்மாந்துறை
**mHq**


0 Comments