சிறுவர்கள் கட்டும் மணல் வீடுகளுக்கு போட்டியாக பெரியவர்களுக்கென மணல் மாளிகைகளை தயார் செய்து வருகின்றது குளோபல் பவ்வவ் என்கிற மணல் சிற்பங்களை ஊக்குவிக்கும் அமைப்பு.
ஐரோப்பா கண்டத்தின் நெதர்லாந்தில், ஆண்டுதோறும் நடைபெறும் மணல் சிற்பப் போட்டிகளைக் காணவரும் ரசிகர்களை வரவேற்கும் விதமாக மணலில் ஒரு படுக்கை அறையுடன் கூடிய, தண்ணீர், மின்சாரம், வை-பை, குயின் சைஸ் படுக்கை என தேவையான அனைத்து வசதிகளுடனும் உள்ள அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறைகள் வெளிப்புறத்தில், மாபெரும் சிலையாகவும், உள்ளுக்குள் அழகான சிற்பக்கலையால் ஆன அறையாகவும் உள்ளது. இத்துடன் காலை உணவும் அளித்து, அருகாமையில் நடக்கும் மணல் சிற்பக்கலை போட்டிக்கும் அழைத்துச் செல்வர். ஒரு இரவுக்கு 150 யூரோக்களை (இந்திய மதிப்பில் பதினோராயிரம்) இந்த அறைகளுக்கென வசூல் செய்கின்றனர்.
பனிக்காலத்தில் ஃபின்லாந்து போன்ற நாடுகளில், தயார் செய்யப்படும், ஐஸ் ஹோட்டல்களைப் போல இவை தயாராகியுள்ளன. மழையாலோ, காற்றாலோ அழிக்க முடியாத இந்த மணல் அறைகள், தற்காலிகமாக இந்த மணல் சிற்பப் போட்டி காலகட்டத்தில் மட்டும் ஹோட்டல்களாக நடத்தப்படும் என்கின்றனர்.
வரும் அக்டோபர் முதல் வாரம் வரை செயல்பட இருக்கும் இந்த ஹோட்டல்களில், தங்குவதற்கு கடும்போட்டி நிலவி வருகிறது. இதில் தங்குவதற்கான புக்கிங் ஏற்கனவே முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





0 Comments