(The Puttalam Times)
புத்தளம் பிரதேச மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் எமது மன்றம், 2015 பாராளுமன்றத் தேர்தலில் 'ஒட்டகம்' சின்னத்தில் நேரடி அரசியலுக்குப் பிரவேசம் செய்தது. எமது அரசியல் அறிமுகத்தை ஏற்றுக்கொண்டு முதல் தேர்தலில் 9547 வாக்குகளை வழங்கி எமது கூட்டணியை அங்கீகரித்ததையிட்டு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் எமது மன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து எங்களுடன் இணைந்து போட்டியிட்ட சகோதர வேட்பாளர்களுக்கும் ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் குறிப்பாக பொது மக்களுக்கும் எமது நன்றி உரித்தாகும்.
1989 ஆம் வருடம் முதல் நடந்து முடிந்த 6 பொதுத் தேர்தல்களிலும் புத்தளம் தொகுதியில் நடந்தவற்றை நீங்களும் நாமும் அறிவோம். விகிதாசார தேர்தல் முறையில் சிறுபான்மை சமூகமொன்று எம்பியைப் பெற வேண்டுமென்றால் அது சிறுபான்மைக் கட்சி அல்லது சுயேட்சைக் கட்சிதான் மாற்று வழி என்பதை தெளிவாகக் கூறினோம். நாங்கள் கூறியவை மீண்டும் உண்மையாகி இருப்பதை நீங்கள் காணுகின்றீர்கள்.
ஆனால், புத்தளம் தொகுதியில் ஐ.தே.க. எம்பியை இழந்ததுக்கு ஒட்டகக் கூட்டணி மீது குற்றம் சாட்டப்படுகின்றது. இது ஒவ்வொரு தேர்தலின் பின்னரும் தனது தவறுகளையும் செய்த குற்றங்களையும் மறைப்பதற்காக இடையில் புகுந்தவர்கள் கூறும் சாட்டு அன்றி வேறில்லை.
புத்தளம் தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. எம்பியை இழந்தமைக்கான காரணங்களாக நாங்கள் கண்டவற்றை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
1) புத்தளம் தொகுதியில் யானை சின்னத்துக்கு வாக்களித்த 48,000 வாக்காளர்கள், சிறுபான்மை வேட்பாளர்களுக்கு 27,000 மனாப்பைகளை மட்டும் வழங்கியுள்ளனர். மீதி 21,000 மனாப்பைகளை யாருக்கு வழங்கினார்கள்? உங்கள் தோல்விக்கான பிரதான காரணம் உங்களுக்கு மனாப வழங்காத உங்கள் வாக்காளர்களும் வேறு தேர்தல் தொகுதி வேட்பாளர்களுக்கும் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கும் (ரங்கேபண்டார, வடிகமங்காவ, நிரோஷன்) ஆகியோரின் ஏஜென்டுகளாக வேலை செய்த புத்தளம் தொகுதி அரசியல்வாதிகளும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றோம்.
2) ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இருந்தே ஐ.தே.கட்சியின் அமைப்பாளராக இருந்த எம்.என்.எம். நஸ்மி கட்சியை வெற்றிபெற செய்வதற்காக முயற்சி செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் நுழைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் தாம் களமிறக்கிய வேட்பாளர்களுக்காக தனி மனாப பெற்றுக்கொள்வதில் மட்டும் ஈடுபட்டனர். உதாரணமாக, கொட்டராமுல்லை (நாத்தண்டிய தொகுதி) வாக்குப் பெட்டியை எண்ணும் போது சுமார் 2000 க்கும் மேற்பட்ட தனி மனாப ஸ்ரீ.ல.மு.கா.வினால் களமிறக்கப்பட்ட எச்.எம். பைரூஸ் (இல. 2) வழங்கப்பட்டிருந்தன. இது யானை சின்னத்தில் போட்டியிடும் சக வேட்பாளனுக்கு எதிராக செய்த சதியாக விளங்கவில்லையா?
3) அசோக வடிகமங்காவ, பாலித ரங்கேபண்டார ஆகியோரின் ஏஜண்டுகள் ஐ.தே.க. புத்தளம் அமைப்பாளரின் வெற்றிக்காக ஆதரவு தேடுவதை விட்டுவிட்டு அவரை ஓரங்கட்டவும் தமது வருங்கால பதவிகள் பணம் வாகனங்களுக்காகவும் உழைத்தார்கள். இதுவும் புத்தளம் தொகுதி எம்பியை இழப்பதற்கு காரணமானது.
4) புத்தளம் தொகுதியில் ஐந்து வேட்பாளர்களையும் மிகுதி நான்கு தொகுதிகளுக்கும் ஆறு வேட்பாளரையும் ஐ.தே.கட்சியின் தலைமை இறக்கியிருப்பதை பல வழிகளிலும் தவறு என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். அப்போது புரிந்துகொள்ளாத வேட்பாளர்களும் வாக்காளர்களும் இந்த தோல்வியின் பின்னராவது புரிந்துகொள்வார்களா?
5) புத்தளம் தொகுதிக்கு வெளியே உள்ள சவரான, கொட்டராமுல்ல, மாதம்பை போன்ற முஸ்லிம் பகுதிகளில் இருந்து ஐ.தே.கட்சியின் சிறுபான்மை வேட்பாளர்களுக்கு போதுமான அளவு மனாப கிடைக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் வேட்பாளர்களுக்குக் கிடைத்திருந்தது. இதுவும் புத்தளம் தொகுதி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணமானது.
6) புத்தளம் தொகுதியை ஐ.தே.க. வென்றபோதும் அதன் வேட்பாளர்களினால் வெற்றிபெற முடியாமைக்கு 9547 வாக்குகளை பெற்ற ஒட்டகக் கூட்டணியைக் குறைகூறுவோர், சில நேரம் ஒட்டகக் கூட்டணி போட்டியிடாமல் ஐ.ம.சு.கூட்டணி போட்டியிட்டிருந்தால் எம்மை விட அதிக வாக்குகளைப் பெற்று இவர்களின் தோல்வியில் பாரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்வார்களா?
கடந்த கால தேர்தல்களில் பெரும்பான்மைக் கட்சிகளான ஸ்ரீலசுக, ஐதேக ஆகியவற்றில் போட்டியிட்ட புத்தளம் தொகுதி வேட்பாளர்களுக்கு இதே நிலைமைதான் ஏற்பட்டது. எனவே இந்தத் தோல்வி முதன்முறையாக நடைபெற்ற தோல்வி அல்ல. ஒரு கட்சிக்குள் ஏற்படும் மனாப வேட்டையினால் புத்தளம் தொகுதியில் இருந்து எம்பியைப் பெற முடியாது என்பதை பலவிதத்திலும் தெளிவுபடுத்தினோம். இன்று அது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
இவை மட்டுமல்ல, இன்னும் சில விடயங்களையும் உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.
- அனுராதபுரம், கண்டி, மன்னார், கொழும்பு இன்னும் சில மாவட்டங்களில் வெற்றிலைக் கூட்டணி உட்பட மும்முணைப் போட்டி இருந்தபோதிலும் ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் வெற்றி பெற்றுள்ளனர். புத்தளம் தொகுதியில் வெற்றிலைக் கூட்டணியின் நிழல் கூட இல்லாத நிலையில் உங்களால் வெற்றிபெற முடியாமல் போனது. ஐ.தே.க. வாக்காளர்கள் புத்தளம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை. இதில் ஒட்டகக் கூட்டணியைக் குறை கூற முடியாது.
- பாலித ரங்கேபண்டார களமிறங்கிய ஆனைமடு தொகுதியில் ஐ.தே.கட்சி தோல்வியடைந்த போதிலும் புத்தளம் தொகுதியில் மட்டும் 12,000 மனாப்பைகளைப் ரங்கேபண்டார பெற்று மனாப்பையில் முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் புத்தளம் தொகுதி ஐ.தே.க. ஆதரவாளர்களும் பிரதேச அரசியல்வாதிகளும் ஐ.தே.க.வுடன் இணைந்திருந்த கூட்டுக் கட்சி (SLMC, ACMC) களின் அங்கத்தவர்களும் ஆவார்கள். ஒட்டகக் கூட்டணி அல்ல.
- ஜனாதிபதி தேர்தலில் மைத்திரீபால சிரிசேனவுக்குக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகள் இத் தேர்தலில் ஐ.தே.கட்சிக்குக் கிடைத்தது. ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு வீதம் 72% ஆக இருந்தபோது 38,000 மேலதிக வாக்கு பெறப்பட்டது. இந்த தேர்தலில் 66% வாக்களிப்பு நடைபெற்றதால் 34,000 மேலதிக வாக்கு பெறப்பட்டுள்ளது. வாக்களிப்பு வீதத்தில் ஏற்பட்ட குறைவினால் வாக்குகளின் எண்ணிக்கை குறைத்துள்ளது. இந்த வாக்கு வீழ்ச்சிக்குக் காரணம் ஒட்டகக் கூட்டணி அல்ல.
நடந்து முடிந்த தேர்தல்களில் கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாக வைத்து, 2 வருடங்களுக்கும் மேலாக அரசியல் விழிப்புணர்வையும் சுயேற்சையாக போட்டியிடுவதன் சாத்தியங்களையும் PPAF எடுத்துக்கூறியது. அத்துடன் நின்றுவிடாமல், 2015 தேர்தலுக்குத் தயாராகிய எமது மன்றம் சிறுபான்மைக் கட்சிகளான SLMC, ACMC ஆகியவற்றின் தலைவர்களுடனும் புத்தளம் தொகுதியில் வாக்கு வங்கியுடன் இருந்த அரசியல்வாதிகளுடனும் பல முறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இப் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் சிலர் இக் கருத்தை ஏற்காமல் விலகிக்கொண்டனர். SLMC இறுதி நேரத்தில் விலகிக்கொண்டது.
ஜுலை 13 வேட்புமணு தாக்கல் செய்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன், ஜுலை 10 வெள்ளிக்கிழமை, அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவியை ACMC தலைவர் ரிஷாட் பத்யுத்தீன் தனது கட்சிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த போது, இக் காரியத்தை செய்ய வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொண்டோம். அப்போது அவர், தான் இலங்கை முழுவதும் அரசியல் செய்வதையும் புத்தளத்தில் மட்டும் அரசியல் செய்ய முடியாமல் இருப்பதையும் காரணங்களாகக் கூறினார். அச் சந்தர்ப்பத்தில், எம்.எச்.எம். நவவி தோல்வியுற்றாலும் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதிநிதி பதவியை வழங்குவதாகவும் கூறினார். தான் கூறியது போல தற்போது தேசிய பட்டியல் வழங்கியுள்ளார். இந்த முடிவை நாம் பாராட்டுகின்றோம்.
எனினும், இத் தேசிய பட்டியல் ஒரு வருடம் மட்டுப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இப் பாராளுமன்ற பிரதிநித்துவத்தை முழுமையாக ஐந்து வருடங்களுக்கு வழங்க வேண்டும் என அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று ஆணித்தரமாக வேண்டுகின்றோம். எமது இந்த கோரிக்கையையும் ரிஷாட் பத்யுத்தீன் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றோம்.
எங்கள் முயற்சியை விளங்கி எமது பயணத்தில் கைகோர்த்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் அனைவருக்கும் இறைவன் நற்கூலிகளை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து தொடர்ந்தும் எமது நல்லாட்சி பண்புமிக்க அரசியல் வேலைத்திட்டங்களில் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.
நல்லாட்சிப் பாதையில் PPAF யின் அரசியல் பயணம் தொடரும், இன்ஷாஅல்லாஹ்


0 Comments