Subscribe Us

எனது விருப்பு வாக்கு மக்கள் கையில் – “Over to You” அரசியல் நிகழ்ச்சியில் தயாசிறி (VIDEO)

வட மேல் மாகாண முதலமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற  வேட்பாளருமான தயாசிறி ஜயசேகர டெய்லி சிலோனின் “Over to You” அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் தமிழாக்கத்தை வாசகர்களுக்காக தருகின்றோம்.
கேள்வி:
குருணாகல் மக்கள் ஏன் தயாசிறிக்கு வாக்களிக்க வேண்டும்?
பதில்:
நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் பெரும்பாலானவற்றை குருணாகல் பிரதேச மக்களுக்கு நாம் உணரச் செய்துள்ளோம். நான் படித்த, திறமையுள்ள ஒரு சட்டத்தரணி. இளைஞர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக அர்பணிப்புடன் செயற்பட்டவன். மக்களுடன் இருந்து மக்களுக்காக அரசியலில் ஈடுபடும் ஒருவன். களவு, பொய் இல்லாததனால், எந்தவொருவரிடத்திலும் சென்று தலை நிமிர்த்தி பேசமுடியுமான ஒருவன்.   தூரநோக்குள்ள, எதிர்காலத்தைப் பற்றிய தூரப் பார்வையுள்ள ஒருவன்.
இந்த வகையில், நாட்டைப் பற்றியும், வடமேல் மாகாண மக்கள் குறித்தும், குறிப்பாக குருணாகல் மாவட்ட மக்கள் தொடர்பிலும் எனக்கு விசேட கரிசனையுள்ளது. இதற்காகவே தயாசிறி ஜயசேகரவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
கேள்வி:
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு அரசாங்கத்தை அமைக்க முடியுமா?
பதில்:
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து பெற்ற வாக்குகள் சுமார் 62 லட்சம். இந்த 62 லட்சம் வாக்குகளும் இன்று ஐக்கிய தேசியக் கட்சியிடம் இல்லை. இதற்கு விசேடமான காரணம் என்னவென்றால், இந்த வாக்குகளில் 7 லட்சம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குரியது. 5 லட்சம் மக்கள் விடுதலை முன்னணி பெற்றது. 2 லட்சம் சரத்பொன்சேக்கவினால் பெறப்பட்டவை.
இன்னும் 4 லட்சம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவுடன் சேர்ந்து சென்றவர்களுக்காக கிடைக்கப் பெற்றவை. இந்த வாக்குகளை ஒன்று சேர்த்துப் பார்த்தால் 18 லட்சம் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் குறைகின்றது. 44 லட்சம் வாக்குகள் தான் ஐ.தே.கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்லாத 4 லட்சம் வாக்குகள் எம்முடன் சேரவுள்ளன. இதனுடன் பார்க்கும்போது ஏற்கனவேயுள்ள 58 லட்சத்துடன் 62 லட்சமாக எமது வாக்குகள் அதிகரிக்கின்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 7 லட்சத்தைக் குறைத்து 55 லட்சம் வாக்குகள் எனக் கருதினாலும் எம்மால் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று உறுதியான அரசாங்கமொன்றை அமைக்க முடியும்.
கேள்வி:
மொத்தமாக எத்தனை ஆசனங்களை ஐ.ம.சு.முன்னணி பெற முடியும்?
பதில்:
நாம் இப்போது எடுத்துள்ள கணக்கெடுப்பின் படி 116 ஆசனங்களைப் பெறமுடியும் எனக் கருதுகின்றேன்.
கேள்வி:
இம்முறைத் தேர்தலிலும் தேசிய ரீதியில் ஐ.ம.சு.முன்னணிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலைமை குருணாகல் மாவட்டத்துக்குள் எவ்வாறு அமையும்?
பதில்:
ஆம், உண்மையில் குருணாகல் மாவட்டத்திலும் இது மோஷமான முறையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் வாக்கில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது. சராசரியாகப் பார்க்கும் போது ஸ்ரீ.ல.சு.கட்சிக்கென்று உள்ள வாக்குகள் அவ்வாறே இருக்கும். இதற்கு அப்பால் சேர வேண்டிய வாக்குகளில் தான் எமக்கு குறைவுள்ளது.
இருப்பினும், குருணாகல் மாவட்டத்தைப் பொருத்த வரையில், நான் முஸ்லிம்களுடன் மிகவும் சமீபமாக செயற்படும் ஒருவன். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக முன்னின்றவன். கடந்த மாகாண சபைத் தேர்தலின் பின்னர் முதலமைச்சராக இருந்து முஸ்லிம்களுக்கு பாரிய சேவை செய்துள்ளேன்.
இதனால், முஸ்லிம் மக்களின் விருப்பமும், ஆதரவும் எனக்கு எப்போதும் போன்று இருக்கின்றது. இருப்பினும், கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகளின் அளவுக்கு இம்முறை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:
தங்களுக்கு கடந்த மாகாண சபைத் தேர்தலில் கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை இந்த தேர்தலிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?
பதில்:
கடந்த மாகாண சபைத் தேர்தலில் இந்த மாவட்ட மக்கள் 3 லட்சத்து 36 ஆயிரம் விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கினர். அதனுடன், ஒப்பிட்டுப் பார்க்கும் போது இம்முறையுள்ள வித்தியாசமான சூழ்நிலையில் இத்தேர்தலில் அது கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், நல்லதொரு வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ளது.
கேள்வி:
இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுத்தும் விடயத்தில் தங்களது செயற்பாடு குறித்து,
பதில்:
குருணாகல் மாவட்டம் சிங்கள, தமிழ், முஸ்லி ஆகிய மூன்று இனங்களும் ஒன்றாக வாழும் ஒரு பிரதேசம். இரு சிங்கள கிராமங்களுக்கு இடையில் ஒரு முஸ்லிம் கிராமம் அமையப்பெற்றுள்ளது. புவியியல் ரீதியிலும் விசேட தொடர்பு காணப்படுகின்றது. இதனால், இனவாத, மதவாதப் பிரச்சினைகளில் யாரும் ஈடுபட முடியாது.
கடந்த காலத்தில் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத சம்பவத்தின் போது, பௌத்த பிக்குகள், மௌலவிமார்கள், கிறிஸ்தவ மதகுருக்கள், பொலிஸார் ஆகியோரை அழைத்து இந்த மாகாணத்தில் அது போன்ற ஒரு அசம்பாவிதம் நடைபெறக் கூடாது என்பதற்கு நடவடிக்கை எடுத்தேன். தொடர்ந்தும் அதற்காக குரல்கொடுப்பவன் என்ற வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் போதும் இன, மத சுமுக வாழ்வுக்காக முன்னின்று செயற்பட எதிர்பார்த்துள்ளேன்.
கேள்வி:
உங்களுக்கு குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை விட அதிகமாக விருப்பு வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்படுகின்றது. இதில் உண்மை உள்ளதா?
பதில்: 
இதனை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பது எனது கருத்து. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர் என்ற வகையிலும், நாட்டின் ஜனாதிபதியாக இருந்து இம்மாவட்டத்துக்கு சேவை செய்தவர் என்ற ரீதியிலும் அவருடன் போட்டி போடலாம் என நான் எதிர்பார்க்க வில்லை.
நிச்சயமாக அவர் என்னைவிடவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவார். எனக்கு அவருடன் எந்தப் போட்டியும் இல்லை. நானும் அவருக்காக வாக்குக் கேட்டுப் பிரச்சாரம் செய்து வருகின்றேன். எனக்குத் தேவையானதெல்லாம் வெற்றிலைக்கு போடும் வாக்கினை அதிகரிக்கச் செய்வதேயாகும்.
கேள்வி:
ஐ.ம.சு.முன்னணியின் ஆட்சியொன்று அமையப் பெறுமாயின் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்குவார்களா?
பதில்:
முதலில் பெரும்பான்மைப் பலத்துடன் கூடிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிரதமர் பதவியை வழங்குமாறு வேண்டி பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்க வேண்டிவரும் என நினைக்கின்றேன்.
கேள்வி:
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குருணாகலையில் போட்டியிட தீர்மானித்ததில் தங்களுக்கு விருப்பக் குறை காணப்படுகின்றதா?
பதில்:
இல்லை, அப்படியொன்று இல்லை. அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இப்பிரதேசத்தில் போட்டியிடப் போவது குறித்து கேட்டார். அப்போது நான் எந்த ஆட்சேபனையும் இல்லையென்று கூறினேன். ஏனெனில், அவர் எந்தவொரு மாவட்டத்திலும் போட்டியிட முடியுமான ஒருவர்.
குருணாகல் மாவட்டத்தில் இராணுவ வீரர்கள் பாரியளவில் காணப்படுகின்றனர். பௌத்தர்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு பிரதேசம். அத்துடன், இது கிராமப் பிரதேசம். இந்த அனைத்தையும் ஒப்பீட்டுப் பார்க்கும் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த மாவட்டம் சிறந்ததொரு களம். இவர் போட்டியிடுவது குறித்து எனக்கும் ஆட்சேபனையில்லை. அவருக்கும் அப்படித்தான்.
கேள்வி:
பாராளுமன்றப் பதவியில் இருந்தாலும், முதலமைச்சர் பதவியில் இருந்தாலும் இரண்டினாலும் மக்களுக்கு சேவை செய்வதே இடம்பெறுகின்றது. இது இவ்வாறிருக்கையில், உள்ள பதவியை வைத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் ஏன் நீங்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என முயற்சிக்கின்றீர்கள்?
பதில்:
கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் ஒரு வருடம் பாரிய சேவையை வழங்கினேன். கடந்த ஆறு மாதங்கள் நல்லாட்சி ஆட்சியில் ஒரு சதம் கூட மாகாண சபைக்கு வழங்க வில்லை. எனது தலையில் கிறீடம் போடப்பட்டிருந்தாலும், கை, கால்களைக் கட்டிப் போட்டது போன்று தான் காணப்பட்டேன்.
இதனால், நான் இந்தப் பதவியிலிருந்து விலகி பாராளுமன்றம் செல்ல வேண்டும் எனத் தீர்மானித்தேன். பாராளுமன்றத்திற்குச் சென்று இந்த மாவட்டத்துக்கும் மக்களுக்கும் சேவை செய்ய முடியும் எனக் கருதுகின்றேன்.
கேள்வி:
நடைமுறை நிலவரங்களை நோக்கும் போது தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டி ஏற்படுமா?
பதில்:
இது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேசிய அரசாங்கம் எனும் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதை விட, நாம் தெளிவான பெரும்பான்மைப் பலமொன்றை பாராளுமன்றத்தில் பெறுவோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஒரு அரசாங்கம் அமைவதை விரும்புவதாக ஜனாதிபதியும் கூறியிருந்தார். பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கம் அமைவதனால், தேசிய அரசாங்கம் குறித்து பேச வேண்டியதில்லை என்றே நினைக்கின்றேன்.
தமிழில் – கஹட்டோவிட்ட முஹிடீன் (இஸ்லாஹி)

Post a Comment

0 Comments