Subscribe Us

எமக்குத்தான் எம் வலி புரியும் – மொகம்மட் ஆக்ரோஷம்

அண்மையில் ஒட்டக கூட்டணி மேடையிலிருந்து விழுந்த எறிகணைகளின், இளம் ஒட்டகப்படையணியின் எம்.எச். மொகம்மட் ஆற்றிய உரையின் தொகுப்பு.

_வசீம் அக்ரம்_


வானத்திலிருந்து பொழியும் மழை சமவெளியில் படர்ந்து காடுகளை கடந்து பள்ளத்தாக்கினை நோக்கி ஓடி வந்து ஒரு சில கழிவு நீரோடைகளில் கலந்து தான் கடலில் கலக்கிறது. மாற்றமும் இது போன்றுதான்.

புனித நோக்கோடு பயணிக்கும் எல்லா பயணங்களிலும் ஒரு சில சாக்கடைகள் கலந்திருக்கும். அந்த சாக்கடைகள் உண்மையான இடம் வரும் போது பிரிந்து மாபெரும் கடலோடு சங்கமித்துவிடும். இந்த உலகம் செல்லும் அதே இடத்தில் தான் இந்த சாக்கடைகளும் இருக்கும். இவற்றை பிரித்தறியும் பொறுப்புத்தான் எமக்குரியது.

தேசிய அரசியல் வெள்ளோட்டத்தில் புத்தளத்தின் கண்ணீர், புத்தளத்தின் அபிலாஷைகளின் வலி, புத்தளத்து பட்டதாரிகளின் கனவு, புத்தளத்து தாய்மாரின் இலட்சியம், புத்தளத்து அரசியல் இடைவெளி எல்லாம் இந்த தேசிய தலைமைகளுக்கோ, காலா காலமாக நாம் ஆதரித்துவரும் தேசியவாத கட்சிகளுக்கோ விளங்கவில்லை. காரணம் நாம் இந்த தேசியவாத கட்சிகள் மீது கொண்டிருக்கும் கண்மூடித்தனமாக நம்பிக்கை.

எனது ஒரு கண் குருடானாலும் பரவாயில்லை எதிரியின் இருகண்களும் குருடாக வேண்டும் எனும் விதத்திலேயே இம் மண்ணில் இதுவரை காலமும் அரசியல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறன பார்வை இழந்த மண்ணான இப்புத்தளத்திற்கு பார்வை கொடுக்கவே இந்த சுயேட்சையில் ஒரு புரட்சி பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சமூகத்தில் பிறந்து வளர்ந்த எங்களுக்குத்தான் இதன் வலி தெரியுமே ஒழிய, சீசனுக்கு வந்து போகும் இந்த தலைவர்களால் ஒருப்போதும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஒவ்வொரு தோல்வியின் பின்னாலும், ஒவ்வொரு இழப்புக்களின் பின்னாலும் பேசுகிறோம். ஒரு தலைவனின் தோல்விக்கு பின்னால் ஒவ்வொரு தொண்டனின் ஆதங்கத்தினால் விழுந்த வார்த்தைத்தான் இந்த சுயேட்சை குழு.

இன்று அரசியல் அரங்கமே எதிர்பார்க்காத இரண்டு துருவங்களை இணைத்து இருக்கிறது. இது அவர்களால், இவர்களால் என்று சொல்வதைவிட அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட நியதி என்றே சொல்ல வேண்டும்.

வடமுனை, தென்முனை என வேறுப்பட்ட காந்த முனைகள் சேரும் போது ஏற்படும் காந்த விசைக்கொண்டுத்தான் இந்த ஒட்டகப்படையணி தனது புரட்சி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

எமது வரலாற்றை திருத்தியமைக்க வேண்டும். எமது முதுகில் ஏறி எமது தலையில் காலை வைத்து யாரோ எமது பட்டியலை சுவிகரித்து போக இடமளிக்கக்கூடாது.

எமது சமூகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய தலைமைகள் இருவர் நீயா, நானா என மூக்கை தொட்டு சண்டைப்பிடித்து கொண்டு புத்தளத்தை அடகு வைக்கும் இவர்களின் கயமைத்தனத்திற்கு, வங்குரோத்து அரசியலுக்கு சாவுமணி அடித்து உருவாக்கப்பட்டதே இந்த சுயேட்சை குழுவாகும்.

அக்கிரமம் செய்து பார்க்கிறார்கள், அநியாயம் செய்து பார்க்கிறார்கள். மரத்திலிருந்து விழுந்த எங்களை குழி தோண்டி புதைத்து விட்டு அரசியல் விளையாட்டை விளையாடுகிறார்கள்.

உங்கள் உடம்பிலும், எங்கள் உடம்பிலும் புத்தளத்தின் இரத்தம் ஓடுகிறது. இந்த சமூகத்தை நேசிக்கும் ஒவ்வோர் வீட்டிலும் ஒட்டகத்தின் குரல் ஒலிக்க வேண்டும். உங்கள் வாக்கு ஒட்டக சின்னத்திற்கு விழ வேண்டும். இது புத்தளத்தின் கட்சி, புத்தளத்தின் சொத்து.

மாற்றமாக எங்களை அடகுவைக்கும் தரகர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. எமது உடம்பில் நுளம்பு கடித்து வரும் சீசன் புண்கள் போன்றவர்கள் இவர்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவற்றை அப்புறப்படுத்த முடியாது. இருந்துவிட்டு தொலையட்டும்.

மாற்றத்தை நோக்கி புறப்படுவோம், இலட்சியத்தை நோக்கி செல்லும் பயணத்திற்கு நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இன்னும் ஒருமுறை இம்முயற்சி தோல்வி அடைகின்ற போது சத்தியமாக புதிய முயற்சி மேற்கொள்கின்ற எந்தவொரு இளைஞர் கூட்டத்தையும் இம்மண்ணிலே நீங்கள் பார்க்க மாட்டீர்கள். மாற்றமாக தேசிய கட்சி அரசியலுக்கு அடகுவைத்த இந்த தரகர்களுக்கு பின்னால் செல்லக்கூடிய கோமாளிகளையும், கூத்தாடிகளையும் நீங்கள் காண்பீர்கள்.

இந்த அரசியல் கலாசாரம் மாற வேண்டும். புத்தளத்திற்கென்று முகவரி வழங்கப்பட வேண்டும். காலாகாலமாக எச்.எஸ். இஸ்மாயில், நெயினா மரிக்கார் என்று வரலாறுகளை படித்தது போதும். புதியதொரு வரலாற்றை படைக்க ஒவ்வொரு புத்தளத்தானும் இறங்க வேண்டும். இணைய முடியாத இருத்துருவங்கள் இணைந்து நன்மையை நோக்கி அழைக்கிறது, புதிய மாற்றத்தை நோக்கி அழைக்கிறது.

அரசியலானது சாணக்கியமாக முன்னெடுக்கும் ஒன்று. பள்ளியை உடைத்தவருக்கு எதிராக யாரை நாம் ஜனாதிபதியாக வெற்றிப்பெற செய்தோமோ, அதே ஜனாதிபதியின் கட்சியில் தான் முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார். ஆனால் அது எமக்கு கோபத்தை தரவில்லை.

புத்தளத்தை பாதுகாப்பதற்காக, எமது இந்த இலட்சிய பயணத்தை வழிநடத்தி செல்வதற்காக உள்ளூரில் நாம் முயற்சி செய்தால் விமர்சனம் எனும் கற்களை கொண்டு அடித்து எம்மை துகள்களாக ஆக்குகிறீர்கள். தேசிய கட்சிகளின் கால்களில் கொண்டுபோய் வைத்து எங்களை அவமானப்படுத்துகிறீர்கள். யார் முயற்சித்தாலும் அது எங்களுக்கான அவமானம் அல்ல. அது புத்தளத்தை அவமானப்படுத்தி பார்க்கும் முயற்சியாகும்.

ஒட்டகத்தை குர்பான் கொடுப்பார்களாம், இன்ஷா அல்லாஹ் 18ம் திகதி இலட்சியத்தாலும், கண்ணீராலும் ஒன்றுசேர்க்கப்பட்ட இந்த இளைஞர்களின் ஒட்டகத்தை குர்பான் கொடுக்க முடியுமா.? தேசிய தலைவர்களுக்கோ, எங்களை காட்டிக்கொடுக்கும் கூலிப்படைகளுக்கோ எங்களை குர்பான் கொடுக்க முடியாது.

அப்படி குர்பான் கொடுப்பதாக இருந்தால் உங்களுக்காக புறப்பட்டு வந்த இந்த ஒட்டகத்தை உங்கள் கைகளாலேயே வாக்களிக்காது குர்பான் கொடுத்து புத்தளத்தை தோற்கடித்து விடுங்கள். இன்னும் ஐந்து வருடத்திற்கு இந்த சமூகம் அனாதையாக கண்ணீர் வடித்து திரியட்டும்.

கோடிகளுக்கு பின்னால் செல்லும் கேடிகள் இந்த அணியில் இல்லை. இலட்சங்களுக்கு விலைப்போன அலட்சியவாதிகள் இந்த அணியில் இல்லை. மாற்றத்தை நோக்கி நடந்து வருகிறோம். எங்களை காயப்படுத்துபவர்களை கண்டு நீங்கள் கைக்கொட்டி சிரிக்க கூடாது. எங்களுக்கு உங்கள் துஆக்கள் பலமாக இருக்கட்டும். உங்கள் வாக்கு எங்கள் கூட்டணிக்கு விழட்டும்.

இது புத்தளம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. கட்சிகளை தூக்கி வீசிவிட்டு இதனோடு இணைந்த எத்தனையோ இளைஞர்கள், பட்டதாரிகள், வெளிநாடுகளில் வசிக்கும் இளைஞர்கள் என இக்கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

இந்த ஒட்டக கூட்டணியை குர்பான் கொடுப்பதும், பாராளுமன்றம் அனுப்புவதும் உங்கள் கைகளில் தான் உள்ளது. சமுதாய மாற்றத்தை நோக்கி செல்லும் எல்லா வித்தியாசமான முயற்சிகளும் விசித்திரமாகத்தான் இருக்கும். அந்த விசித்திரமாக தெரியும் முயற்சிகள் தான் சரித்திரமாக மாற்றமடையும்.

நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானவர்கள் அல்லர், மஹிந்த ராஜபக்ஸவின் தரகர்கள் அல்லர், இந்த அரசியல் கயமையர்களின் தரகர் அல்லர். மாற்றமாக இந்த சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞர்களின் தரகர்கள், புத்தளத்தின் கல்வி வளர்ச்சியடைய வேண்டும் என ஆசைப்படுகின்ற ஒவ்வொரு தந்தையின் தரகர்கள், சமூகதேவை நிறைவேற வேண்டும் என்ற சமூக வேட்கை கொண்ட ஒவ்வொரு புத்தளத்தானுடைய தரகர்கள்.

எதிர்கால நகரசபை கதிரைகளுக்கு, மாகாணசபை கதிரைகளுக்கு ஆசைப்பட்டு ஊரை காட்டிக்கொடுப்பவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை எங்களை நோக்கி கைக்காட்டுவதற்கு.

ஊரை நேசிக்கும் அனைவரும் இவ் ஒட்டகத்தின் பின்னால் இருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நாம் தவறிழைத்த கடந்த கால வரலாற்றை புரட்டிப்பாருங்கள். உங்களுக்கு உண்மைகள் தெட்டத்தெளிவாக விளங்கும்.

சமூக மாற்றத்தை நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். எனவே இலட்சிய வேட்கை கொண்ட, கன்னி கனவினை சுமந்த இந்த ஒட்டக கூட்டணியை பலப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு..

இவன்
எம்.எச். மொகம்மட்

Post a Comment

0 Comments