நாமல் ராஜபக்ச, ஒரு பிரபல சட்டத்தரணியில்லாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வருமானத்தை மாத்திரம் கொண்டு சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட ஏனைய பல நிறுவனங்களின் உரிமையாளரானது எப்படி நடைமுறை சாத்தியமாகுமென ஐதேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வியெழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான . நாமல் ராஜபக்ச, தன்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்டு இதற்கான பதிலை மக்களுக்கு முன்வைக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை இவ்விடயங்கள் குறித்த விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதிக்கமைய நிதி மோசடிக்கான விசேட பொலிஸ் பிரிவு சாட்சியங்களுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற அம்பலப்படுத்தல் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்ட விளக்கங்களை முன்வைத்தார்.
முன்னாள் எம்.பி. நளின் பண்டார. நாமல் ராஜபக்சவின் மேலும் பல ஊழல் மோசடிகளை இச்சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தியதுடன் பல சந்தேகங்களையும் முன்வைத்தார்.
அவர் தெரிவித்தது வருமாறு :-
நாமல் ராஜபக்சதான் சி. எஸ். என். தொலைக்காட்சியின் உரிமையாளராவார். அவரது வருமானத்தைப் பார்த்தால் எப்படி அவரால் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளராக முடியுமென்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
அவர் ஒன்றும் பிரபல சட்டத்தரணியுமில்லை. பாராளுமன்றத்தின் உறுப்பினராக மாத்திரமே அவர் பதவி வகித்திருந்தார். இந்த சம்பளத்தில் எப்படி அவரல் இம் மாதிரியான தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்த முடியும்?
இதுமட்டுமல்ல, நாமல் ராஜபகசவிடம் இன்னுமொரு பாரிய நிறுவனமொன்று உண்டு. அது தான் ‘கவர்ஸ் கோப்பரேட் சர்விசஸ்’ என்னும் தனியார் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முழு உரிமையும் நாமல் ராஜபக்சவுக்கே உண்டு. இதற்கான சான்றினை நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
இதேபோன்று தான் 2012 செப்டம்பரில் நாமல் ராஜபக்ச ‘ஹெலோ கோப்’ என்னும் பெயரில் 12 கோடி ரூபாவுக்கு இன்னுமொரு நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். சரியாகக் கூறினால் இதன் பெறுமதி 12 கோடியே 52 இலட்சத்து 59 ஆயிரத்து 581 ரூபாவாகும்.
இவ்வளவு பணம் நாமல் ராஜபக்சவுக்கு எங்கிருந்து கிடைத்து? எவ்வாறு அவர் இவ்வளவு பணத்தை திரட்டினார்?
நிச்சயமாக இது மக்களிடமிருந்து திருடப்பட்ட பணமாகும். ஏனென்றால் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வளவு பணத்தை திரட்டுவதற்கு வாய்ப்பேயில்லை. மக்களின் பணத்தை ஊழல் மோசடி செய்தே நாமல் ராஜபக்ச இவ்வளவு பணத்தை திரட்டியிருப்பாரென என்னால் பகிரங்கமாக குற்றம் சுமத்தமுடியும்,
அவர் அதை மறுப்பாராயின் என்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறும் நான் அவரை அழைக்கின்றேன்.
நாமல் ராஜபக்ச குறித்த இன்னும் பல சுவையான தகவல்களை நான் அம்பலப்படுத்த விரும்புகிறேன்.
ஜனாதிபதி தேர்தலில் தோற்கப் போவதையறிந்து நாமல் ராஜபக்ச தனது மூன்று லம்போகினி கார்களையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் ஏற்றி எங்கே அனுப்பினார் என்பது எமக்கு இப்போது தெரியவந்துள்ளது
இந்த கார்கள் மலேசியாவுக்கே அனுப்பப்பட்டன. இவை தற்போது மலேசியாவிலுள்ள குடு ராஜாவான முஜாவின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன. இந்த குடு ராஜாவின் வாகன அனுமதிப் பத்திரத்தைக் கொண்டே நாமலும் யோசித்தவும் மலேசியாவில் கார் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.
ராஜபக்சவினர் அவர்களது பிள்ளைகளுக்கு பணத்தை திருட கற்றுக் கொடுத்தது மட்டுமல்லாமல், நாட்டின் ஏனைய இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் வகையில் நாட்டிற்குள் போதைவஸ்து கொண்டுவரவும் இடமளித்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களும் 02, 03 இலட்சங்கள் பெறுமதியான சம்பாத்துக்களையே அணிந்தனர். 10, 15 இலட்சங்கள் பெறுமதியான கைக்கடிகாரங்களை உபயோகித்தனர். ஆனால் பல பிள்ளைகள் பாடசாலை செல்வதற்கு இரண்டு சப்பாத்துகள் வாங்க பணம் இல்லாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
ராஜபக்ச தமது பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக நூறு கோடி ரூபாய்களை வழங்கி செய்மதியொன்றை அனுப்பினார். அந்த செய்மதி இப்போது எங்கே? அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? ஆனால் நிச்சயமாக விண்வெளியில் இல்லை என்று என்னால் உறுதியாக கூறமுடியும்.
எமது நாட்டின் செய்மதியெனக் கூறப்பட்டது. எப்படி திடீரென மறைந்தது? அப்படியானல் அதன் உண்மையான உரிமையாளர் யார்?
நாமல் என்னுடன் நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வரவேண்டுமென நான் மீண்டும் சவால் விடுக்கிறேன். அங்கே அப்பாக்களினதும் மகன்களினதும் ஊழல்களை நேருக்குநேர் அம்பலப்படுத்த நான் தயார்.


0 Comments