நாட்டின் அடுத்த பிரதமராகும் எனது கனவு கலைந்துவிட்டது. தோல்வியை ஏற்றுக்கொள்கின் றேன் என்று தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,
"நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் அடுத்த பிரதமராகும் எனது கனவு கலைந்துவிட்டது. அதனை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினராக நான் பாராளுமன்றத்தில் பணியாற்றுவேன். நாங்கள் தேர்தலில் 8 மாவட்டங்களை வெற்றிபெற்றுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சி 11 மாவட்டங்களை வெற்றிக்கொண்டுள்ளது. இதனடிப்படையில் நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். இது மிகவும் கடினமான போராட்டமாக அமைந்தது" என்றார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments